வெள்ளி, 15 மே, 2020

4ம் கட்ட ஊரடங்கில் விமானங்கள், பேருந்துகள் இயங்க வாய்ப்பு

புதிய விதிமுறைகள்...  4ம் கட்ட ஊரடங்கில் விமானங்கள், பேருந்துகள் இயங்க வாய்ப்புமாலைமலர் : புதிய விதிமுறைகளுடன் நான்காம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்படும்போது, குறிப்பிட்ட பகுதிகளுக்கு விமானங்கள், பேருந்துகளை இயக்க அனுமதிக்கப்படலாம் என தெரிகிறது. புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, அடுத்தடுத்து நீட்டிக்கப்படுகிறது. மூன்றாவது ஊரடங்கு இன்னும் இரண்டு தினங்களில் நிறைவடைகிறது. இந்த ஊரடங்கு காலத்தில் வைரஸ் தாக்கம் அதிகம் உள்ள நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற பகுதிகளுக்கு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. 4ம் கட்ட ஊரடங்கில் இன்னும் பல்வேறு தளர்வுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
இந்நிலையில், 4ம் கட்ட ஊரடங்கின்போது குறிப்பிட்ட பகுதிகளுக்கு விமானங்கள், பேருந்துகளை இயக்க அனுமதிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கள நிலவரங்களுக்கு ஏற்ப, சாத்தியக்கூறுகள் உள்ள இடங்களில் முதற்கட்டமாக விமான சேவை மற்றும் தரைவழி போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படும் என உள்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன இதேபோல் ஹாட்ஸ்பாட் பகுதிகளில் ஊரடங்கை தளர்த்துவது தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்பதே மாநில அரசுகளின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக உள்ளது. இது தொடர்பாக கடந்த வாரம் பிரதமருடனான ஆலோசனையின்போது குறிப்பிட்ட மாநிலங்கள் கோரிக்கை வைத்தன. இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு, மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்னள. 

பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது, 4ம் கட்ட ஊரடங்கு முற்றிலும் மாறுபட்ட வடிவத்தில் புதிய விதிமுறைகளுடன் இருக்கும் என்று கூறியிருந்தார். அதன்படி 4ம் கட்ட ஊரடங்கு காலத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. 

இந்த ஊரடங்கு காலத்தில் விதிமுறைகள் மேலும் தளர்த்தப்பட்டு, நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற இடங்களில், உள்ளூர் பேருந்துகள் குறிப்பட்ட பயணிகளுடன் இயங்க வாய்ப்பு உள்ளது. ஆட்டோக்கள், டாக்சிகளும் தனிமனித இடைவெளியை பின்பற்றும் வகையில் குறைந்த பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படலாம். பெரும்பாலாலும் மாவட்டங்களுக்குள் நோய் கட்டுப்பாட்டு இல்லாத மண்டலங்களில் செல்ல அனுமதிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை: