புதன், 13 மே, 2020

தலைமைச் செயலாளர் அவமானப்படுத்திவிட்டார்: வெடித்த திமுக எம்.பி.க்கள்!

தலைமைச் செயலாளர் அவமானப்படுத்திவிட்டார்: வெடித்த திமுக எம்.பி.க்கள்!மின்னம்பலம்  : மனு அளிக்க வந்த தங்களை தலைமைச் செயலாளர் அவமானப் படுத்திவிட்டதாக  திமுக எம்.பி.க்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தமிழகம் மு ழுவதும் ஒருங்கிணைவோம் வா திட்டத்தின் மூலமாக ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழைகள் மற்றும் நலிந்த பிரிவினருக்கு உணவு, உடை, மருந்துகள் உள்ளிட்ட வசதிகளை திமுக 40 நாட்களுக்கும் மேலாக செய்து வருகிறது. இதன் மூலம் 15 லட்சம் பேருக்கு உதவி செய்துள்ளதாகவும், பல ஆயிரம் கோரிக்கை மனுக்கள் வந்திருப்பதாகவும் திமுகவினர் கூறுகின்றனர்.
இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சண்முகத்தை, திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு இன்று (மே 13) சந்தித்து மக்கள் தங்களிடம் அளித்த கோரிக்கை மனுக்களை சமர்ப்பித்தார். அப்போது, மக்களவை உறுப்பினர்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு, “திமுக போன்ற அரசியல் கட்சிகளால் செய்ய முடியாத அரசு மட்டுமே செய்ய முடிந்த போக்குவரத்து வசதி, சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான உதவிகள் குறித்து எங்களுக்கு மனுக்கள் வந்தன. இதுதொடர்பான ஒரு லட்சம் கோரிக்கை மனுக்களை தலைமைச் செயலாளரிடம் அளித்தோம். இதுதொடர்பாக என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் சரியான பதிலை அளிக்கவில்லை” என்று குற்றம்சாட்டினார்.
மேலும், “லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகளாகிய எங்களைப் பார்த்து, தலைமைச்செயலாளர் எங்களை பார்த்து this is problem with u people என உதாசீனப்படுத்தும் வகையில் பதில் சொல்கிறார். ஏதோ மூன்றாவது நபர்கள் போல எங்களிடம் நடந்துகொள்கிறார். இதற்கு என்ன அர்த்தம் என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். உங்களைப் போன்றவர்களுக்கு வேறு வேலை இல்லை என்று அவர் சொல்ல வருகிறார்” என்று ஆவேசமாகக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன், “நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் தலைமைச் செயலாளர் அறைக்கு சென்றபோது தொலைக்காட்சியின் சத்தம் அலறுகிறது. நாங்கள் பேசும் போது தொலைக்காட்சியின் சத்தத்தை கூட குறைக்காமல் எங்களை மூன்றாவது நபர்களைப் போல, தாழ்த்தப்பட்டவர்களை போல நடத்துகிறார். எங்களை உதாசீனப்படுத்தி, அவமானப்படுத்தி அனுப்பியுள்ளார். திமுக செய்யும் பணிகளால் முதல்வரை விட தலைமைச் செயலாளர் அதிக பொறாமையில் இருக்கிறார். மக்கள் பிரதிநிதிகளுக்கு தலைமைச்செயலாளர் அளிக்கும் மரியாதை என்ன என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.
எழில்

கருத்துகள் இல்லை: