திங்கள், 11 மே, 2020

சிறுமி ஜெயஸ்ரீ உயிரிழப்பு .. . கால்களை கட்டிப்போட்டு தீயிட்டு கொழுந்திய கொடூரன்கள்

Venkat Ramanujam : அதிமுக கிளைச்செயலாளர் கலியபெருமாள் மற்றும்
முன்னாள் அதிமுக கவுன்சிலர் முருகன் எனற இரு பொறுக்கிகளை சுட்டு பிடிக்கவும் என உங்களுக்கு அதிகாரம் இருந்தால் ஆனையிட்டு இருப்பீர்களா .
மின்னம்பலம் :விழுப்புரத்தில் பத்தாம் வகுப்பு மாணவியை தீ வைத்து
அந்த கொலைகாரர்கள்
கொடூரமாகக் கொன்றதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். விழுப்புரம் சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். அவரது மகளான 10ஆம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீயை முன்விரோதம் காரணமாக, கைக் கால்களைக் கட்டிப்போட்டுத் தீயிட்டுக் கொளுத்தி அதே பகுதியைச் சேர்ந்த முருகன், யாசகம் என்கிற கலியபெருமாள் இருவரும் கொலை செய்துள்ளனர். ஜெயஸ்ரீயின் கை - கால்களைக் கட்டிப்போட்டு, வாயில் துணி வைத்து அழுத்தி, மூச்சுத் திணறவைத்து கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளனர்.
ஜெயஸ்ரீ இறப்பதற்கு முன்பு விழுப்புரம் நீதிமன்ற நீதிபதி அருண்குமாரிடம் அளித்த வாக்குமூலத்தில் முருகன், யாசகமும் தான் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
வாக்குமூலம் கொடுக்கும்போது, தண்ணீர் கொடுங்கள், தண்ணீர் கொடுத்தானே பேச முடியும் என்று நாவறட்சியால் கெஞ்சுவது காண்போரைப் பதற வைக்கிறது. இந்தச்சூழ்நிலையில், உயிரிழந்த ஜெயஸ்ரீயின் தந்தைக்கும், முருகன், யாசக தரப்புக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனிடையே இருவரையும் போலீசார் நேற்று இரவில் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அதேசமயத்தில், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த மாணவி ஜெயஸ்ரீயை, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்துஅனுமதித்துள்ளனர். பலத்த தீக்காயமடைந்த மாணவி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.


இந்நிலையில் மாணவியை பெட்ரோலை ஊற்றித் தீயிட்டு கொலை செய்ததற்குப் பலரும் கண்டனமும், இரங்கலும் தெரிவித்து, அதிமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க.,வின் கிளைக் கழகச் செயலாளர் கலியபெருமாள் - முன்னாள் கவுன்சிலர் முருகன் ஆகியோர் பழிவாங்கும் உணர்ச்சியுடன், வீட்டில் பெரியவர்கள் இல்லாத நேரத்தில் ஜெயஸ்ரீயை கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்.

95% தீக்காயத்துடன் போராடிய ஜெயஸ்ரீ, சிகிச்சைப் பலனின்றி இறந்துவிட்டார் என்ற செய்தி இதயமுள்ள எவரையும் துடிதுடிக்கவே செய்யும். கோவை வேளாண் கல்லூரி மாணவியர் சுற்றுலா சென்ற பேருந்தைத் தருமபுரியில் தீக்கிரையாக்கி, மாணவியர் மூவரையும் கருக்கி, கதறக் கதறக் கொன்றதற்குக் காரணமானவர்கள் அ.தி.மு.க.,வினர் சிலர். அதற்கு அடுத்த கொடிய சம்பவம் இது.
குற்றவாளிகளுக்கு சட்டரீதியாக வழங்கப்படும் தண்டனையே இனி ஜெயஸ்ரீ போன்ற சிறுமிகளையும் பெண்களையும் காப்பாற்றும். இந்தக் கொடூர கொலைக் குற்றத்தில் ஆளுங்கட்சியான அதிமுகவினர் சம்பந்தப்பட்டுள்ளதால், காவல்துறையினர் பெயரளவிற்குச் செயல்படாமல், சட்டத்தின் முழு வலிமையையும் நியாயமாகவும் வேகமாகவும் பயன்படுத்த வேண்டும். விரைந்து உச்சபட்ச தண்டனை கிடைக்கும்படிச் செய்ய வேண்டும். ஏற்கனவே, பொள்ளாச்சி பாலியல் குற்றத்தில் சம்பந்தப்பட்ட பலர் சட்டத்தின் பிடியிலிருந்து நழுவியுள்ள நிலையில், விழுப்புரத்திலும் அந்த நிலைமை ஏற்படக்கூடாது என்பதையும், ஜெயஸ்ரீயின் கொடூர மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க தி.மு.க துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் இதுபோன்ற கொடிய நிகழ்வுகள், மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்பதை உணர்ந்து காவல் துறையினர், ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் சாய்ந்துவிடாமல், நடுநிலையோடு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ஆளும் அதிமுகவின் கூட்டணியில் இருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ் இதுகுறித்து கூறுகையில், “ பத்தாம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ முன்பகை காரணமாக பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியளிக்கிறது. இது கொடூரமான செயல். ஜெயஸ்ரீயை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். ஆயிரம் முன் பகை இருந்தாலும் மனிதமும், இதயமும் உள்ளவர்களால் வாழ வேண்டிய சிறுமியை உயிருடன் எரிக்கும் குரூரத்தை அரங்கேற்ற முடியாது. இதற்குக் காரணமானவர்களுக்கு விரைந்து தண்டனை வழங்கப்பட வேண்டும். அது இத்தகைய கொடியவர்களுக்குப் பாடமாக அமைய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
"ஜெயஸ்ரீ கை - கால்களைக் கட்டிப்போட்டு, வாயில் துணி வைத்துத் தீவைத்துக் கொளுத்திய கொடூரச் செயல் மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. இக்கொடூரச் செயல் செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும். மகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குறிப்பிட்டுள்ளார்.
”பெரியவர்களுக்குள் இருக்கும் குடும்பப்பகைக்கு குழந்தையை எரித்துக் கொல்வதெல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாத கொடூரமான செயல். இதற்குக் காரணமானவர்களுக்கு எவ்வித பாகுபாடும் இன்றி விரைந்து தண்டனை வழங்கப்பட வேண்டும். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கடுமையான சட்டங்களால் மட்டுமே நிறுத்தப்படும் என்பதை உணர்ந்து அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
“காவல்துறையினர் ஆளுங்கட்சியின் அழுத்தத்திற்கு ஆளாகி விடாமலும், சிறுமியை கொலை செய்தவர்களை ஜாமீனில் வெளியே விடாமலும் சிறார் நீதி சட்டம் 2015 இன், கீழ் சிறப்பு விரைவு நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி, விரைந்து கடுமையாக தண்டிக்க ஆவன செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
-கவிபிரியா

கருத்துகள் இல்லை: