புதன், 13 மே, 2020

பி. ஆர். ஷெட்டி .. 6.6 பில்லியன் டாலர்...சுமார் 51000 கோடி ரூபாய் .. மோடி கும்பலின் லேடஸ்ட் திருடன்

 https://economictimes.indiatimes.com/nri/nris-in-news/br-shetty-the-staggering-rise-and-incredible-fall-of-a-billionaire/articleshow/75381757.cms?fbclid=IwAR0TgqrIobPe6jlYK5Q2lO8fwtszoBMvKzoo9mlA30ASEqDgmm_1Td9vfqU
Shajahan R : வந்தேன் பாரத்!
பி.ஆர். ஷெட்டி (Bavaguthu Raghuram Shetty) கர்நாடக மாநிலத்தின் உடுப்பியில் பிறந்தவர். அரபு நாடுகளுக்குப் பிழைப்புக்காகச் சென்றவர், அங்கே மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கினார். NMC Health என்ற பெயரில் அமீரகத்தில் (ஐக்கிய அரபு எமிரேட்ஸ் - UAE) நாட்டிலேயே மிகப்பெரிய மருத்துவச்சேவை நிறுவனத்தை நடத்தி வந்தார்.
இளம் வயதிலிருந்தே ஜன சங், ஆர்எஸ்எஸ்சில் ஈடுபாடு கொண்டிருந்தவர். ஜனசங்க் கட்சிதான் பாஜக ஆனது. எனவே, பாஜகவுக்கு மிகவும் நெருக்கமானவர். நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமைக்கும் மிகவும் நெருக்கமானவர். பாஜகவுக்கு மட்டுமல்ல, மோடிக்கும் நெருக்கம். (1000 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான தயாரிப்பில் மகாபாரதம் திரைப்படம் எடுப்பேன் என்றவர்.) மோடி அரபு நாடுகளுக்குச் செல்லும்போது, அவரை விளம்பரப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தவர் இவர்தான் என்றும் கூறப்படுகிறது.

1970களில் வெறும் 8 டாலருடன் போய் இறங்கியவர், New Medical Centre என்ற பெயரில் சின்னதாய் ஒரு கிளினிக் திறந்தவர், எப்படி இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கினார் பார்த்தீர்களா என்று ஊடகங்கள் கதை சொல்வதற்குப் பொருத்தமான நபர் இந்த ஷெட்டி.
இதுவரைக்கும் சரி. அடுத்த ட்விஸ்ட்
ஷெட்டியின் NMCக்கு சொந்தமான நிறுவனங்கள் நிறைய உண்டு. NMC லண்டன் பங்குச் சந்தையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம். பல வங்கிகளிடமிருந்து பல்லாயிரம் கோடி கடன் பெற்ற நிறுவனம்.
நிறுவனத்தின் கணக்கு வழக்குகளில் பெரும் குளறுபடிகள் செய்யப்பட்டுள்ளன, பணம் திசைதிருப்பப்பட்டுள்ளது, கடன்கள் குறைத்துக்காட்டப்பட்டுள்ளன என்ற தகவல்கள் வெளியாக,
பங்குச்சந்தையில் அதன் மதிப்பு சரிய,...
அபுதாபி கமர்ஷியல் பேங்க் - 963 மில்லியன் டாலர்
துபாய் இஸ்லாமிக் பேங்க் - 541 மில்லியன் டாலர்
அபுதாபி இஸ்லாமிக் பேங்க் - 325 மில்லியன் டாலர்
ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு - 250 மில்லியன் டாலர்
பார்கிளேஸ் - 146 மில்லியன் டாலர்
.........................
உள்பட சுமார் 80 நிறுவனங்களிடம் NMC வாங்கியுள்ள கடன் தொகை 6.6 பில்லியன் டாலர். அதாவது, சுமார் 51000 கோடி ரூபாய் என்று தெளிவானது. (அதில் 34000 கோடி மோசடி என்று மதிப்பிடப்படுகிறது.)
அண்ணனுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறிவிட்டு இந்தியாவுக்கு ஓடி வந்து விட்டார் ஷெட்டி. (மோடிகளும் சோக்சிகளும் இந்தியாவிலிருந்து பணத்தை சுருட்டிக்கொண்டு வெளிநாடுகளுக்கு ஓடினார்களே அதேபோலத்தான்.)
Central Bank of the UAE - அமீரகத்தின் ரிசர்வ் பேங்க் போல - ஷெட்டியின் அனைத்து நிறுவனங்களின் கணக்குகளையும் முடக்கவும், சரிபார்க்கவும் உத்தரவிட்டது. ஷெட்டி சாம்ராஜ்யம் சரிந்தது.
ஷெட்டியை ஒப்படைக்குமாறு UAE கேட்டதா என்று தெரியவில்லை. UAEக்கான இந்தியத் தூதர், இந்தியப் பிரதமர் உள்பட இந்திய அரசின் உயர்மட்டத்தில் உள்ள எல்லாருடனும் ஷெட்டிக்கு உள்ள தொடர்புகளால் UAEயிடம் விஷயத்தை அடக்கி வாசிக்குமாறு கூறப்பட்டிருக்கலாம்.
இந்தியாவில் மோசடி செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு ஓடிவிட்டவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோருவது நியாயம் என்றால், வெளிநாட்டில் மோசடி செய்துவிட்டு இந்தியாவுக்கு ஓடிவந்து விட்டவரையும் அந்நாட்டிடம் ஒப்படைப்பதுதானே நியாயம்? ஆனால் இந்தியா இதுவரை அப்படி ஏதும் செய்யவில்லை, அதைப்பற்றிப் பேசவும் இல்லை. காரணம் ஒன்றே ஒன்றுதான் - அவர் பாஜக, மோடி, ஆர்எஸ்எஸ்-க்கு நெருக்கம். இது இருதரப்புக்கும் லாபம் தரும் கூட்டணி.
அடுத்த மிகப்பெரிய ட்விஸ்ட்.
NMC நிறுவனத்தின் தலைமை கணக்கு அதிகாரி சுரேஷ் கிருஷ்ணமூர்த்தி. ஷெட்டியின் மோசடியைத் தொடர்ந்து நிறுவனத்தில் தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. சுரேஷும் விசாரணை வளையத்தில் இருக்கிறார்.
வெளிநாட்டிலிருந்து இந்தியர்களை அழைத்துவர இந்திய அரசு சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்து வருகிறது அல்லவா? அதில், கருவுற்றவர்கள், முதியவர்கள், மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறவர்கள், மாணவர்கள், விசா காலம் முடிவடைந்தவர்கள் என தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை தரப்படும் என்றும் சொல்லப்பட்டது அல்லவா?
எல்லாம் பிம்பிலிக்கி பிலாப்பிதான்.
சுரேஷ் கிருஷ்ணமூர்த்தி, அவருடைய குடும்பத்தினர், வேலைக்காரப் பெண் உள்பட எல்லாரும் 7ஆம் தேதி அபுதாபியிலிருந்து புறப்பட்ட முதல் விமானத்தில் இந்தியாவுக்கு வந்து விட்டார்கள்.
இந்திய அரசுக்குத் தெரியாமல், இந்தியத் தூதரகத்தின் அனுமதி இல்லாமல், இதெல்லாம் சாத்தியமே இல்லை.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சோற்றுக்கு வழியின்றி ரயில் தண்டவாளத்திலேயே நடந்து செத்துக்கொண்டிருக்கும்போது, சாலையில் வாகனங்களில் அடிபட்டு சாகும்போது, பட்டினியால் மயங்கி விழுந்து செத்துக்கொண்டிருக்கும்போது...
இந்திய அரசுக்கு உண்மையில் யார் மீது அக்கறை என்று தெரிகிறதா?
வந்தே பாரத்!

கருத்துகள் இல்லை: