ஞாயிறு, 10 மே, 2020

ஸ்டாலின் : பொருளாதார குழுவில் மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சிக

பொருளாதார குழுவில் மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள்:  ஸ்டாலின்மின்னம்பலம் : பொருளாதார வளர்ச்சி குறித்த ஆய்வுக் குழுவில் கூடுதல் உறுப்பினர்களை சேர்க்க வேண்டுமென ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா ஊரடங்குக்குப் பிறகான தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி குறித்து ஆய்வு நடத்துவதற்காக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநரும், முன்னாள் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவருமான சி.ரங்கராஜன் தலைமையில் தமிழக அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது.
24 பேர் கொண்ட இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக மாநில நிதித் துறைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் இருப்பார். குழுவின் உறுப்பினர்களில் இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன், டிவிஎஸ் மோட்டார்ஸ் தலைவர் வேணு சீனிவாசன், இந்தியன் வங்கி எம்.டி பத்மஜா உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர்

இதனை வரவேற்று இன்று (மே 10) அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “இந்தக் குழுவில் 24 உறுப்பினர்கள் இடம் பெற்றிருந்தாலும் - பொருளாதார நிபுணரான தலைவர் மற்றும் தொழிலதிபர்கள் தவிர - எஞ்சிய அனைவருமே அதிகாரிகளைக் கொண்ட உயர்நிலைக் குழுவாகவே அமைந்திருப்பது சிறப்பானதுதானா எனத் தோன்றுகிறது” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
குறிப்பாக, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும், தொழிலாளர்களும் - 35 லட்சத்திற்கும் மேலான அமைப்புசாராத் தொழிலாளர்களும், விவசாயிகளும், நெசவாளர்களும், மீனவர்களும், “கொரோனா” ஊரடங்கால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தாலும் - அவர்கள் சார்பில் எந்தவொரு பிரதிநிதியும் இடம்பெறவில்லை என்பது வருத்தமளிப்பதாகவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அடங்கிய சட்டமன்ற அரசியல் கட்சிகளின் சார்பில்கூட பிரதிநிதிகள் நியமிக்கப்படவில்லை என்பது ஆச்சரியத்தைத் தருவதாகவும் கூறியுள்ள ஸ்டாலின்,

மக்கள் வேலையில்லாமல் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இந்தக் குழுவிற்கு அளிக்கப்பட்டுள்ள ஆய்வு வரம்புகள் பெரும்பாலும் வரி வருவாயைப் பெருக்குவதில் மட்டுமே அரசு கவனம் செலுத்துகிறது என்பதைக் காட்டுகிறது. பேரிடர் நிலவும் ஒவ்வொரு நாளும் மாநிலத்தின் தொழில் வளர்ச்சியையும் - பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்ற அடிப்படையைத் தவிர்த்துவிட்டு - மூன்று மாதங்களில் அறிக்கை கொடுத்தால் போதும் என்று உயர்நிலைக் குழுவிற்கு கால நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது” என்று கூறியுள்ளார்.
இந்த உயர்நிலைக் குழுவில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், மாநிலத்தின் மூன்று பெரும் தொழில்களான வேளாண்மை - நெசவுத் தொழில் - மீன்பிடித் தொழில் ஆகியவற்றைச் சேர்ந்த பிரதிநிதிகளையும், சட்டமன்றத்தில் பங்கேற்றுள்ள அரசியல் கட்சிகள் ஆகியவற்றின் சார்பில் உறுப்பினர்களையும் நியமித்திட வேண்டும் என்றும். மூன்று மாதங்கள்வரை காத்திராமல், ஒரு மாதத்திற்குள் இடைக்கால அறிக்கையினைப் பெற்று, அனைத்து மட்டத்திலும் உரிய ஆலோசனை நடத்தி - மக்களை மேலும் பாதிக்காத வகையில், பொருளாதார மறுகட்டமைப்பு மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், “மாநிலத்தில் தொழில் வளர்ச்சி மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை மீட்கவும், மக்களின் இயல்பு வாழ்க்கையைத் திரும்பவும் உருவாக்கி நிலைநிறுத்தவும், போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அனைத்துப் படிநிலைகளிலும் ஒருங்கிணைப்பை உருவாக்கிடத் தேவையான முயற்சிகளை இப்போதிருந்தாவது தொடங்கிட வேண்டும். அதற்கு திமுக ஒத்துழைப்பு அளிக்க தயாராக இருக்கிறது” என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.
எழில்

கருத்துகள் இல்லை: