திங்கள், 27 ஏப்ரல், 2020

8,538 பயிற்சி காவலர்கள் உடனடியாக பணியில் சேர உத்தரவு!

8,538 பயிற்சி காவலர்கள் உடனடியாக பணியில் சேர உத்தரவு!மின்னம்பலம் : கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து அதனைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 27) பயிற்சி காவலர்களை உடனடியாக பணியில் சேர உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தடுப்பு பணியில் தமிழக போலீசார் அயராது பணியாற்றி வருகின்றனர். கொரோனா பாதிப்புக்கும் ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 8,538 பயிற்சி காவலர்களை உடனடியாக பணியில் சேர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வில், 8,538 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு, 7 மாதங்கள் சட்டம் தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்படும். அதன் பிறகே அவர்களுக்கு பணி உத்தரவுகள் வழங்கப்படும்.
இந்நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது பயிற்சி பெற்று வரும் 8,538 காவலர்களை மே 3ஆம் தேதிக்குள் பணியில் சேர வேண்டும் என்று ஆயுதப்படை டிஜிபி கரண் சின்கா உத்தரவிட்டுள்ளார்.
பணியில் சேருவதற்கு முன்பாக 8,538 பேருக்கும் சுவாச பிரச்சினை மற்றும் காய்ச்சல் பரிசோதனை செய்வது கட்டாயம். சோதனையில் எதாவது பிரச்சினை என்றால் சம்பந்தப்பட்ட மாவட்ட சுகாதாரத் துறை சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-கவிபிரியா

கருத்துகள் இல்லை: