nakkheeran.in t;எஸ்.பி. சேகர் : ஏறத்தாழ 43 ஆண்டுகாலமாக உச்சநீதிமன்றத்தில் காவிரி நீரை பெறுவதற்கு தமிழகம் போராடிக் கொண்டிருக்கிறது. போராடியது மட்டுமல்லாமல் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு போராட்டங்களையும் தொடர்ந்து நடத்தி வருகிறது. இதை மத்திய அரசு செவி சாய்க்காத நிலையில் உச்சநீதிமன்ற ம் காவிரி மேலாண்மை வாரியம் ஒழுங்காற்று குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது. அதன்மூலம் வழிகாட்டு முறைகளையும் தீர்ப்பாக வழங்கியுள்ளது. அதை மத்திய அரசு மதிக்கவில்லை. மீண்டும் மீண்டும் தமிழகம் போராடியது. அதன் பிறகு காவிரி ஆணையம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது. இவைகளுக்கு அதிகாரம் குறைவாக இருந்தாலும் கூட தமிழக மக்கள் அதை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் அதையும் ஏற்றுக் கொள்ள மனமில்லாத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தமிழக விரோத அரசாக மாறி உலக மக்கள் கவனம் முழுவதும் கரோனா பக்கம் இருக்கும் இன்றைய சூழ்நிலையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, மத்திய அரசு காவிரி ஆணையத்தை மத்திய அரசின் ஜலசக்தி துறையின் கீழ் கொண்டு வந்துள்ளது. அதை வன்மையாக கண்டிக்கிறோம். அதை கைவிட வேண்டும் .
மத்திய அரசின் போக்கைக் கண்டித்து காவிரி டெல்டா பகுதியிலுள்ள அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட கடற்கரையோர கிராமமான கீழ் குளத்தூர் கிராமத்தில் விவசாயிகள் மத்திய அரசு ஜல சக்திதுறையில் காவிரி ஆணையத்தை இணைப்பதை கண்டித்து விவசாயிகள் தங்களின் மாடுகளின் கழுத்தில் தங்கள் கோரிக்கைகளை பதாகைகள் எழுதி தொங்கவிட்டு எதிர்ப்பை தெரிவித்துள்ளனர் இது குறித்து விவசாய சங்க தலைவர் தங்க. சண்முகசுந்தரம், காவிரி மேலாண்மை வாரியம் தற்போது மத்திய அரசின் ஜலசக்தி துறையின் கீழ் இணைப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். ஜலசக்தி துறை எனப்படும் நீர்வள துறையோடு இணைக்கக் கூடாது. இந்த நடவடிக்கை என்பது கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை போல ஆகிவிடும். இதன் மூலம் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் மறுக்கப்படும். மத்திய அரசு இந்த செயல் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. கர்நாடக பாரதிய ஜனதா அரசுக்கு ஆதரவாக இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது என்கிறார் சண்முகசுந்தரம்.
மேலும், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் போர்க்காலத்தில் இதுபோன்ற பேரிடர் காலத்தில் மத்திய அரசு இது போன்ற செயல்களை செய்வதை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்ற எண்ணத்தில் சத்தமின்றி உத்தரவை பிறப்பித்துள்ளதாக விவசாயிகள் கோபத்துடன் தெரிவிக்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக