வியாழன், 30 ஏப்ரல், 2020

சசிகலாவின் இரட்டை இலை சின்னம் ஆய்வு மனு தள்ளுபடி .. உச்ச நீதிமன்றம்

இரட்டை இலை சின்னம்: சசிகலா மனு தள்ளுபடி!மின்னம்பலம் : இரட்டை இலை சின்னம் தொடர்பாக சசிகலா தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தீர்ப்பு வழங்கிய டெல்லி உயர் நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமி-பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது செல்லும் என்று உத்தரவிட்டது. சசிகலா, தினகரன் ஆகியோர் தனித் தனியாக தாக்கல் செய்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதனிடையே கடந்த ஆண்டு மார்ச் 26ஆம் தேதி அமமுகவிற்கு குக்கர் சின்னம் ஒதுக்கக் கோரிய மனுவை விசாரித்த நீதிபதிகள், இரட்டை இலை தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை முடித்து வைப்பதாக தெரிவித்தனர். . இதனையடுத்து, இரட்டை இலை சின்னம் தொடர்பாக சசிகலா தரப்பிலிருந்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கை தற்போது விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு, “மறு ஆய்வு மனு மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட ஆவணங்களை நாங்கள் ஆய்வு செய்தோம். உத்தரவில் எந்த பிழையையும் எங்களால் கண்டறிய முடியவில்லை. ஆவணங்களிலும் பிழை என்பது மிக மிகக் குறைவாகவே உள்ளது. இதனால் மறு ஆய்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” எனத் தெரிவித்தனர்.
ஏப்ரல் 23ஆம் தேதியே இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதிலும், உத்தரவு இன்றுதான் உச்ச நீதிமன்ற இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டது.
எழில்

கருத்துகள் இல்லை: