வியாழன், 30 ஏப்ரல், 2020

அறிவிக்கப்படாமலேயே முழு முடக்கம்?

டிஜிட்டல் திண்ணை: அறிவிக்கப்படாமலேயே முழு முடக்கம்? மின்னம்பலம : “சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிகளில் கொரோனா பரவல் அதிகரிப்பும், மக்கள் வெளியே வருவதும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருந்ததன் காரணமாக ஊரடங்கைக் கடுமையாக்க எண்ணிய தமிழக அரசு 26ஆம் தேதியில் இருந்து 29ஆம் தேதி வரை இந்தப் பகுதிகளில் முழு ஊரடங்கை அமல்படுத்தியது. அதாவது மெடிக்கல், மருத்துவமனைகள் தவிர வேறு எந்தக் கடைகளும் திறந்திருக்காது என்று ஏப்ரல் 24ஆம் தேதி அறிவிக்க, ஏப்ரல் 25ஆம் தேதி சென்னை மற்றும் மதுரையில் கடுமையான மக்கள் திரள் வெளியே வந்தது. நான்கு நாட்களுக்கான காய்கறி, மளிகைப் பொருட்கள் வாங்குவதற்கு என்ற பெயரில் மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியே வந்தனர். இதனால் அன்று மாலை 3 மணி வரை கடை திறக்கும் நேரம் அதிகரிக்கப்பட்டது. இந்தப் பின்னணியில் 26 முதல் 29 வரை முழு ஊரடங்கு மேற்கண்ட மாநகராட்சிப் பகுதிகளில் கடுமையாக அமல்படுத்தப்பட்டது.

ஏப்ரல் 28ஆம் தேதி காலை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கண்காணிப்புக்காக அமைக்கப்பட்ட 12 குழுவினருடன் விரிவாக கலந்து ஆலோசித்தார். காலை முதல் பிற்பகல் வரை பின் மதிய உணவுக்குப் பின் என்று இந்த ஆலோசனை தொடர்ந்தது. இந்த ஆலோசனையின்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் தாலுகா அளவில் ஏற்பட்டிருக்கிற தொற்று விவரங்கள், ஆண்கள், பெண்கள், வயதானவர்கள், இளைஞர்கள், குழந்தைகள், தனிமைப்படுத்தப்பட்ட ஏரியாக்களின் பரப்பு, கடைகள் திறப்பு நேரம் என்று பல்வேறு விஷயங்கள் இந்தக் கூட்டத்தில் பேசப்பட்டிருக்கின்றன. அப்போது அதிகாரிகள், ‘மாநகராட்சிகளில் நாம் செய்திருக்கும் முழு முடக்கத்தை மே 3ஆம் தேதி வரை தொடர வேண்டும். அப்போதுதான் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும். இல்லையென்றால் 144 உத்தரவை நம் மாநகர மக்களுக்கு இயல்பு வாழ்க்கை போல ஆகிவிட்டது. எனவே மே 3 வரை இந்தக் கடுமையான ஊரடங்கைத் தொடர்ந்தால் தொற்று கட்டுப்பாட்டுக்குள் வரலாம்’ என்று தெரிவித்துள்ளனர். இதை கவனமாகக் கேட்டுக் கொண்டார். நேற்று ஆட்சியர்களுடனான ஆலோசனைக் கூட்டத்திலும் சில குரல்கள் இப்படி வந்த நிலையில்தான், ‘பேரூராட்சி, நகராட்சிக்குள் கொரோனா கட்டுக்குள் வந்தாலும், மாநகராட்சிக்குள் கட்டுக்குள் வரவில்லை’ என்று கவலை தெரிவித்தார் முதல்வர்.
கிட்டத்தட்ட மே 3ஆம் தேதிவரை முழு முடக்கத்தை சென்னை, மதுரை, கோவையில் நீட்டிக்க முதல்வர் திட்டமிட்ட நிலையில், ‘இதனால் மக்கள் மேலும் பீதியடைய நேரிடும். ஏற்கனவே ஒரு முழு முடக்கத்துக்கு முன் மக்கள் தடையை மீறி திரண்டதைப் போல இப்போதும் கடைகளுக்குச் செல்கிறேன் என்று திரண்டுவிட்டால் அது தேவையற்ற குழப்பங்களையும், விமர்சனங்களையும், தொற்றுப் பரவல் நிலையையும் உண்டாக்கும். எனவே முழு முடக்கத்தை அப்படியே வைத்துவிட்டு ஏற்கனவே இருக்கிறபடி தொடரும் என்று அறிவிப்போம். ஆனாலும் மாநகராட்சிகளில் கடுமையோடு நடந்து கொள்வோம்’ என்று முதல்வருக்கு சில மூத்த அதிகாரிகளும் அமைச்சர்களும் சொல்ல அதையும் யோசித்த பின்புதான் முழு முடக்கத்தை 29ஆம் தேதியோடு முடித்தார் முதல்வர்.

மேலும் மாநகரங்களில் முழு முடக்கம் என்பது அறிவிக்கப்படாமல் தொடரும் என்பதையும் சிம்பாலிக்காக தமிழக அரசின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
‘சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிப் பகுதிகளில், 29.4.2020 புதன்கிழமை இரவு வரை அமலில் இருக்கும் முழு ஊரடங்கு முடிவடையும் நிலையில், 26.4.2020க்கு முன்பு இருந்த நிலைப்படி ஊரடங்கு தொடரும். எனினும், 30.4.2020 (வியாழக்கிழமை) அன்று மட்டும் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களான காய்கறி, பழங்கள் மற்றும் மளிகைப் பொருட்களை வாங்குவதற்கு ஏதுவாக காலை 6 மணி முதல் மாலை 5

மணி வரை அத்தியாவசியப் பொருட்களை விற்கும் கடைகள் திறந்திருக்க அனுமதிக்கப்படும். 1.5.2020 (வெள்ளிக்கிழமை) முதல் மேற்கண்ட அத்தியாவசியப் பொருட்களை விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதிக்கப்படும். கொரோனா வைரஸ் நோய்த் தொற்று ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாகவும், அதிதீவிரமாகவும் பரவும் தன்மையுள்ள கடும் நோய் தொற்று என்பதால், பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க அவசரம் காட்டாமல், நிதானமாக, பொறுமை காத்து, சமூக இடைவெளியைக் கண்டிப்பாகக் கடைப்பிடித்து, முகக் கவசம் அணிந்து கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதில் இன்று 30ஆம் தேதி காலை முதல் மாலை வரை கடைகளைத் திறந்து வைப்பதற்குக் காரணமே அடுத்த மூன்று நாட்கள் கிட்டத்தட்ட அறிவிக்கப்படாத முழு முடக்கத்தைக் கடைப்பிடிக்கத்தான் என்கிறார்கள் அரசு வட்டாரத்தில்” என்ற மெசேஜை சென்ட் செய்துவிட்டு ஆஃப் லைன் போனது வாட்ஸ்அப்

கருத்துகள் இல்லை: