புதன், 29 ஏப்ரல், 2020

புலிகளால் ஈழப்போராளிகள் உயிரோடு கொழுத்தப்பட்ட நாள் 29- April 2006

50 THOUGHTS ON “TELO இயக்கப் போராளிகள் அழிக்கப்பட்டு 34 ஆண்டுகளின் பின் : சபா நாவலன்”
sivamathi
ரெலோ தலைவர் சிறீசபாரத்தினம் மற்றும் சக தோழர்கள் விடுதலைப் புலிகளால் சகோதரப் படுகொலை செய்யப்பட்ட 25வது வருட நினைவஞ்சலிக் கூட்டத்தில் வாசுதேவன் ஆற்றிய உரை.
மகாத்மா காந்தியடிகள் கூறிய ஒரு வாசகம்! கண்ணுக்கு கண் என்பது உலகை குருடாக்கிவிடும்.
மன்னிப்பு இல்லையேல் எதிர்காலம் இல்லை என்று நிற வெறிக்கெதிராக குரலெழுப்பிய Desmond Tutu ஆணித்தரமாக கூறுகிறார். மன்னிப்பு என்பது மறப்பதற்காக அல்ல! மாறாக மன்னிப்பு இல்லாவிட்டால் மனித எதிர்காலம் இல்லாது போய்விடும் என்று கூறுகிறார். இன்று நான் உங்கள் முன்நின்று உரையாற்றுவது எனது கடந்த காலத் தவறிற்கு பிராயச்சித்தம் தேட அல்ல. நாம் விட்ட தவறுகளை நீங்கள் இன்று மன்னித்தபோதும் நாம் இறக்கும் வரை அது நம்முடன் கூடவே பயணித்து அது எம்மை சித்திரவதை செய்யும். ஆனால் இன்று நீங்கள் என்னை இங்கு பேச அழைத்ததன் மூலம் அந்த சித்திரவதையில் இருந்து ஒரு சிறிய அசுவாசத்தை பெற உதவியிருக்கிறீர்கள். அதற்கு நான் உங்களிற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன்.
தொடர்ந்து பிரச்சாரம் செய்வதால் பொய் உண்மையாகாது; யாவரும் கவனிக்கவில்லை எனில் உண்மை பொய் ஆகாது.

பொது மக்கள் துணையின்றியும் உண்மை நிலைத்து நிற்கும். அது தன்னிலையுடையது. மகாத்மா காந்தியவர்கள் கூறிய இன்னுமெரு வாசகம். 1986 சித்திரை மாதம் 29ம் திகதி எமது தேசிய விடுதலைப் போராட்டம் தனது சாவு மணியை அடிக்க தொடங்கிய நாள்! நானும் எனது சகாக்களும் ஏன் எதற்கு என்று கூட கேள்வி கேட்க திரணியற்று மனித அவலம் ஒன்றிற்கு துணை போன நாள்!
பருத்தித்தித்துறை இராணுவ முகாமை தாக்க பல படையணிகளுடன் பயிற்சி பெற்ற நாம் திடீரென்று விடுதலைப் புலிகளின் யாழ் தளபதி கிட்டுவால் ஒரு அவசர கூட்டத்திற்கு அழைக்கப்படுகிறோம். நாம் ரெலோ மீது தாக்குதல் நடத்த போகிறோம் என்று கூறியவுடன் எமக்கு எதுவுமே புரியவில்லை. எமது போராளிகளை அவர்கள் கைப்பற்றி வைத்திருக்கிறார்கள் அவர்களை மீட்க நாம் கல்வியங்காட்டை சுற்றிவளைக்கப் போகிறோம் என்ற விளக்கத்துடன் பாரிய சகோதரப் படுகொலைக்கான திட்டமிடல் தொடங்குகிறது. அதீத விசுவாசம் கொண்டவர்கள் தலைமை கூறியதை விட மோசமான மனிதவதைகளை செய்தனர்! தலைமைக்கு பணிந்தவர்கள் தலைமை கூறியதை அப்படியே செய்தார்கள். மனிதாபிமானமுள்ளவர்கள் விறைத்துப் போய் செய்வதறியாது திகைத்து நின்றனர். சரணடைந்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்! தூங்கியவர்கள், தூங்க முடியாது வருத்தத்தில் படுத்திருந்தவர்கள், தப்பியோடியவர்கள் வெள்ளைக்கொடி பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்று ஒருவரைக் கூட மிச்சம் வைக்காது வேட்டையாடல் நடைபெற்றது.
தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்காக தம்மை அர்ப்பணிக்க தயாராக இருந்த நூற்றுக்கணக்கான போராளிகள் தெருநாயை சுடுவது போல் வேட்டையாடப்பட்டார்கள். ஆனால் மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். 3 நாட்களாக கல்வியங்காட்டு சந்தியில் காவல் கடமையில் இருந்த எனக்கு கோப்பி முதல் 3 நேர உணவும் தந்து உபசரித்தார்கள். தமிழ் மக்களின் விடுதலைக்காக என்று கட்டியெழுப்பிய மற்றைய இயக்கங்கள் தம் சொந்த சகோதர்கள் வேட்டையாடப்படுகையில் கைகட்டி மௌனமாக வேடிக்கை பார்த்தார்கள்!
நரபலி எடுத்துக் களைத்த அனைவரும் மீண்டும் முகாம் திருப்புகிறோம். மனச்சாட்சி உறுத்தியவர்கள் ஒரு சிலர் ஒளிவில் சிகரட் புகைக்க ஒதுங்கி பேசா மடந்தைகளாக அப்படியே மௌனத்து போனோம்! பயம் ஒரு புறம்! போராட்டம் சூன்யமாகி விட்டதே என்ற ஆதங்கம் ஒரு புறம்! கொல்லப்பட்டவர்கள் எம்மவர்கள் என்ற மனச்சாட்சியின் உறுத்தல் ஒரு புறம்! அன்று முதல் நாம் ஒரு நடைபிணமாகவே மாறி விட்டோம். ஆனால் அந்த வேதனை ஆறுவதற்கு முன்பே ஆயுதங்களை கட்டி தாக்குதலுக்கு தயாராகச் சொல்லி மீண்டும் ஒரு கட்டளை மே 6ம் திகதி அதிகாலை வருகிறது! தலையிடி காய்ச்சல் என்று சாக்கு கூறிய இரண்டு போராளிகள் தும்புக்கட்டையால் நையப்புடைக்கப்பட்டதை பார்த்ததும் எல்ப் ட்ரக்கில் முண்டியடித்தபடி கோழைகளாக அடுத்த கொலைக்களத்திற்கு புறப்பட்டோம்.
அன்று கோண்டாவில் சுற்றிவழைப்பில் எனக்கு கோண்டாவில் பஸ் டிப்போவிற்கு அருகில் காவல் கடமை! ஒரு வயது முதிர்ந்தவர் என்னுடன் பேசினார். நான் கொஞ்சம் விரக்தியாக பேசியதாலே என்னவோ துணிந்து ஒரு விடயத்தை கூறினார். தம்பி துவக்கெடுத்தவனுக்கு துவக்காலை தான் சாவு! இது எல்லாம் ஒரு பெரிய அழிவிலைதான் முடியும்! மேலை ஒருத்தன் பாத்துக் கொண்டிருக்கிறான் எண்டதை மறந்திடாதை என்று கூறிவிட்டு போய்விட்டார். சில மணித்துளிகளுக்குள் ரெலோ இயக்க தலைவரும் சுட்டுக்கொல்லப்பட்டு விட்டார் என்று வோக்கியில் செய்தி வந்தது. 1986 மே மாதம் ஒரு புகையிலைத் தோட்டத்தில் மறைந்து நிராயுதபாணியாக இருந்த சிறீ சபாரத்தினம் அவர்கள் கையை உயர்த்தியபடி கிட்டு பேசுவோம் பேசித் தீர்ப்போம் என்று கூறியபடி வெளியில் வந்து கிட்டுவின் மெய்ப்பாதுகாவல் கடமையிலிருந்த சாந்தமணியின் அருகில் சென்று அவரின் துப்பாக்கியை பறிக்க முற்பட்டதாகவும் உடனடியாக கிட்டு அவரை சுட்டுக்கொன்றதாகவும் வோக்கி டோக்கி அலறியது! இந்தியாவுடன் சேர்ந்து புலிகளை அழிக்க சதி செய்த ரெலோ புலிகளால் அழிக்கப்பட்டது என்று செய்தி எங்கும் அலறியது.
எல்லாம் முடிந்து விட்டது. ரெலோ இயக்கம் மக்களிடம் களவெடுத்த பொருட்கள் என்று பல கண்காட்சிகள் யாழ் நகரில் காட்டப்பட்டது. அண்மையில் நான் யாழ்ப்பாணம் சென்ற போது கூட எனது நண்பர் கூறினார் ரெலொ களவெடுத்த படியால்தான் புலியள் அவையை அழிச்சவை என்று! பாவம் அந்த அப்பாவி மக்களிற்கு இன்றும் தெரியாது கண்காட்சியில் காட்டப்பட்ட பொருட்களில் முக்கால்வாசிக்க மேற்பட்ட பொருட்கள் எமது இயக்கத்தால் கொள்ளையடிக்கப்பட்டவை என்று…
சரியாக 22 ஆண்டுகள் கழித்து 2009 மே மாதம் தொலைக்கட்சி ரேடியோ ஏன் உலகம் எல்லாமே அலறியது வெள்ளைக்கொடியுடன் பேசச் சென்றவர்கள் சுட்டக்கொல்லப்பட்டார்கள் என்று!
அன்று கோண்டாவிலில் அந்த பெரியவர் என்ன சொன்னாரே அது நடந்தேறி விட்டது! வெள்ளைக் கொடி, சரணடைவு, நிராயுதபாணியாக கொலை என்று நாம் மீளவும் இன்று அங்கலாய்கிறோம்… ஆத்திரப்படுகிறோம்… அவமானப்படுகிறோம். ஆனால் அன்றும் இது நடைபெற்றது. யாரும் ஆத்திரப்படவில்லை, அவமானப்படவில்லை, ஐநாவிடம் சென்று நியாயமும் கேட்கவில்லை!
25 ஆண்டுகள் சென்று விட்டது இன்று கூட இதைப்பற்றி ஒரு சுயவிமர்சனத்தை செய்யவோ குறைந்த பட்சம் ஒரு பொது மன்னிப்பு கேட்க கூட தயாராக இல்லை. கேட்க ஆயத்தப்படுத்தியவரையும் துரோகியாக்கி இறுதியில் அவரின் மன்னிப்பையும் காட்டிக்கொடுப்பு என்று ஏளனம் செய்கிறார்கள்.
இன்று நானும் ஒரு துரோகி! காரணம் நான் பழசை கிளறுகிறேனாம். நாம் செய்வதெல்லாவற்றையும் கூட்டி அப்படியே மறைத்து விட வேண்டும்! அதை சும்மா கிளறுவதால் என்ன பயன்? செய்தவர்கள் இன்று இல்லை! ஆனால் உவன் மகிந்தனை விடக்கூடாது. இவர்கள் எல்லாம் இன்றும் மறக்கும் ஒரு விடயம் எவன் ஒருவன் தனது கடந்தகாலத்தை மறக்கிறானோ அவன் மீண்டும் அதையே செய்ய முயல்வான் என்பதே!
எம் தமிழ் தலைமைகள் எல்லாம் அன்று முதல் இன்று வரை தமது அதிகாரங்களை தக்க வைப்பதிலேயே குறியாக இருந்தார்களே ஒழிய மக்கள் நலன் மீது எந்த வித அக்கறையும் இருக்கவில்லை. இவ்வளவு அவலம் வந்து முடிந்த பின்னரும் ஒரு மீளாய்வுக்கு தயார் இல்லை!
அவசர அவசரமாக கட்சி கட்டுவதிலும் தேர்தல் வைப்பதிலும் குறியாக இருக்கின்றனர். ஜனநாயகப் பண்புகள் அற்ற அமைப்புகளை கட்டியெளுப்புவதுடன் ஆயுதங்களை விட பலமான ஊடகங்கள் இன்று கைகளில் வைத்துக் கோண்டு ஆராஜகம் செய்து வருகின்றனர். உண்மைகள் மக்களிடம் போனால் செல்வாக்கு போய்விடும் என்ற பயத்தில் சுயநலம் கொண்ட மிருகங்களாக மாறி நடந்து மடிந்த போரில் குற்றுயுரும் குலை உயிருமாக தப்பியவர்களின் நியாயமான கோபங்கள் ஆதங்கங்கள் பேன்றவற்றை இன்று உயிருடன் குழிதோண்டிப் புதைக்கின்றனர். அந்த மக்களின் பட்டினிச் சாவில் இன்று தம் வெட்கங்கெட்ட அரசியலை செய்கின்றனர்.
50 வருடகாலமாக எதைப் பேசினோமோ அதையே இன்றும் பேசுகிறோம். உலக மாற்றம் பற்றிய எந்த சிந்தனையும் இன்றி அடுத்தவனை குறை கூறுவதிலும் எமது தவறுகளுக்கு நியாயம் கதைத்தபடி அடுத்தவன் தவறுகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதிலேயெ நாம் கண்ணும் கருத்துமாக நிற்கிறோம்.
காலாகாலமாக வேரூன்றி பெரு விருட்சமாக வடக்கில் வாழ்ந்து வந்த முஸ்லீம் சகோதரர்களை ஒரு இரவிற்குள் விரட்டியடித்து விட்டு சிங்களவன் எங்கடை காணியைப் பறிக்கிறான் என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறோம். அந்த சமூகத்திடம் குறைந்த பட்சம் மன்னிப்புத்தான் கேட்க வேண்டாம் அது சரியென்று வியாக்கியானம் கொடுத்து அவர்களை இன்னமும் அவமானப்படுத்துகிறீர்கள். இலங்கை ஒரு பல கலாச்சாரங்களை, பல இனங்களை, பல மதங்களை கொண்ட ஒரு நாடு என்பதை மறந்து எனது சாதி உயர்ந்து நிற்க வேண்டும் என்ற சுயநலமும் மற்றவனை வீழ்த்த வேண்டும் என்ற ஆவேசமும் தான் எங்களை நோக்கிய சிங்கள பேரினவாதத்தை வளர்த்தது என்பதை நாம் என்று உணரப்போகிறோம்?
காலணித்துவ ஆட்சியின் பின் இலங்கையில் இனங்களிற்கிடையிலான சந்தேகங்களை வைத்து அரசியல் செய்த தமிழ் சிங்கள தலைமைகள் தான் இனவாத அரசியலைத் தோற்றுவித்தன. இதே சந்தேகங்கள்தான் இன்று எம் எல்லாரிடமும் பல்வேறு பிளவுகளை தோற்றுவித்தும் வருகிறது. இதற்கு நாம் முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் இலங்கை என்ற அழகிய தீவில் மக்கள் என்றுமே நிம்மதியாக வாழ முடியாது.
புலம்பெயர் மண்ணில் வாழும் மக்கள் இன்று ஆத்திரம் கொண்டவர்களாகவும் பழிக்கு பழி என்ற சிந்தனையை மட்டுமே தம்முள் வைத்தபடி இனவாத அரசியலை வளர்த்து வருகிறார்கள். தமிழ் மற்றும் சிங்கள இனவாதிகளிற்கு இவர்கள் இன்னமும் தீனி போட்ட வண்ணமுள்ளனர். கண்ணுக்கு கண் என்பது உலகை குருடாக்கிவிடும் என்பதை பற்றியெல்லாம் இவர்களிற்கு கவலை இல்லை! நான் குருடானாலும் பரவாயில்லை என் எதிரியை குருடாக்க வேண்டும் என்ற ஆவேசம் தான் அவர்களிடம் மிஞ்சி நிற்கிறது.
இன்று இந்த நிகழ்வு நடைபெறுவது கூட பலருக்கு தெரியாது. தெரிந்தாலும் அது பற்றி அக்கறையில்லை! இதுதான் எம் சமூகத்தின் சாபக்கேடு. தம் தவறுகளை திருத்த முயலாதவர்கள் எப்படி அடுத்தவனை திருந்தச்சொல்ல முடியும்?
யுத்தம் முடிவடைந்து இன்று இலங்கையில் இனங்களிற்கிடையிலான உறவு வளர்வதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்தள்ளது. புலம்பெயர் மண்ணில் உள்ளவர்கள் முதலில் தங்கள் கோபங்கள் ஆத்திரங்களை மறக்க வேண்டும். கடந்த 30 ஆண்டுகாலப் பகுதியில் நடந்த ஒவ்வொரு விடயங்களையும் பக்க சார்பற்று நேர்மையுடன் திரும்பி பார்க்க வேண்டும். தாம் விட்ட தவறுகளிற்கு மன்னிப்பு கோர வேண்டும். தமக்கிழைக்கப்பட்ட அநீதிக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டாது அந்த தவறு திரும்பவும் நடைபெறாதிருக்க என்ன செய்ய முடியும் என்று சிந்திக்க வேண்டும். அதற்கான ஒரு பொறிமுறையை உருவாக்க வேண்டும். இதற்கு நாம் முதலில் மன்னிக்க தயாராக வேண்டும். தென் ஆபிரிக்காவில் நடைபெற்ற நிறவெறிப் போராட்ட முடிவு இன்று எமக்க ஒரு நல்ல பாடமாக இருக்கிறது.
இலங்கையர் அனைவரும் தான் சாராத இன மத கலாச்சாரங்கள் இலங்கையின் ஒரு கொடை என்பதை உள்வாங்க வேண்டும். அதையும் பாதுகாத்து வளர்ப்பது எமது கடமை என்பதை நம் மனதில் நிலை நிறுத்த வேண்டும். இதன் முலமாக இனங்களிற்கிடையிலான உறவு மேம்படுவதுடன் இன விரேதாங்களும் சந்தேகங்களும் அற்றுப்போகும் ஒரு சூழல் உருவாகும்.
சகோதர படுகொலைகளை நாம் மன்னித்து ஒன்றுபட்டு முன்நோக்கி நகர வேண்டும். இதற்கு எல்லா இயக்கங்களிலுமிருந்து போராட சென்று மரணித்தவர்களை ஒன்றாக நினைவு கூர நாம் ஒரு பொதுவான தினத்தை தெரிந்தெடுக்க வேண்டும். இந்த தினம் எமது கடந்தகால இயக்க மோதல் காயங்களிற்கு ஆறுதல் கொடுக்கும் ஒரு தினமாக அமையவேண்டும். அன்று அனைவரும் தாம் முன்விட்ட பிழைகளை நேர்மையுடன் மனம் விட்டு பேச வேண்டும்.
எமது போராட்டத்திற்கு தலைமை வகித்த எல்லா தலைவர்களும் இன்று எம்முடன் இல்லை. அவர்கள் யாருமே தம் தவறுகளிற்கு மன்னிப்புக் கோரவில்லை. ஆனால் இந்த நாளில் நான் சார்ந்த அமைப்பு செய்த சகல தவறுகளிற்கும் அந்த அமைப்பில் ஒரு காலத்தில் இருந்தவன் என்ற முறையிலும் இதனால் அன்று நான் செய்திருக்க கூடிய சகல தவறுகளிற்கும் இன்று உங்களிடம் ஒரு பொது மன்னிப்பை கோருகிறேன்.
உலகில் மாற்றம் வரவேண்டுமாயின் அது உன்னுள் தான் ஆரம்பிக்க வேண்டும் என்ற காந்தியடிகளின் வாசகத்துடன் எனது உரையை முடிக்கிறேன்

கருத்துகள் இல்லை: