திங்கள், 27 ஏப்ரல், 2020

பணக்காரர்களுக்கு 40 சதவீத வரி விதிக்க சிபாரிசு; வெளிநாட்டு கம்பெனிகளுக்கும் கூடுதல் வரி

 தினத்தந்தி :  கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிராக நாடு போராட உதவும் வகையில் பணக்காரர்களுக்கு 40 சதவீத வரி விதிக்கவும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கூடுதல் வரி விதிக்கவும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லி, கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது.
ஆனால் இந்த வகையில் பெரும் தொகையை செலவிட வேண்டிய தேவையும் எழுந்துள்ளது.
குறிப்பாக கொரோனா வைரஸ் தாக்கியவர்களுக்கு முன்வரிசையில் நின்று சிகிச்சை அளிக்கிற டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்களுக்கு சுய பாதுகாப்பு கருவிகள், முக கவசங்கள், சானிடைசர் வழங்கவும், நோயாளிகளுக்கு செயற்கை சுவாச கருவிகள் வாங்கவும், பொதுமக்களுக்கு பெருமளவில் சோதனை செய்வதற்கு சோதனை கருவிகள் வாங்கவும் பெரும்தொகையை மத்திய அரசு செலவிட்டு வருகிறது.
 அது மட்டுமின்றி சிறப்பு ஆஸ்பத்திரிகள், தனிமை வார்டுகள், படுக்கை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டியதும் இருக்கிறது.


நாடு முழுவதும் 40 நாள் ஊரடங்கு அமலில் இருந்து வருகிற நிலையில், நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்கிற வகையில், மத்திய வருமாய் துறை அதிகாரிகள் (ஐ.ஆர்.எஸ்.) சங்கம், ‘போர்ஸ்’ (கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிராக நிதி திரட்டும் வாய்ப்புகள்) என்ற அறிக்கையை மத்திய நேரடி வரிகள் வாரியம் சி.பி.டி.டி.யின் தலைவர் பி.சி.மோடியிடம் அளித்தது. அந்த அறிக்கையில் பல்வேறு சிபாரிசுகள் செய்யப்பட்டுள்ளன. அவை வருமாறு:-

* பணக்காரர்களுக்கு, அதாவது ஆண்டு வருமானம் ரூ.1 கோடிக்கு அதிகமாக சம்பாதிப்பவர்களுக்கு 30 சதவீதம் வரி விதிக்கப்பட்டு வருகிறது. இந்த வரியை 40 சதவீதமாக உயர்த்தலாம்.
 * ஆண்டு வருமானம் ரூ.5 கோடிக்கு அதிகமாக உள்ள பணக்காரர்களுக்கு மீண்டும் செல்வ வரியை அறிமுகம் செய்யலாம்.

* இந்தியாவில் செயல்படுகிற வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சர்சார்ஜாக (மிகை வரியாக) ரூ.1 கோடி முதல் ரூ.10 கோடி வரையிலான வருமானத்துக்கு 2 சதவீதமும், ரூ.10 கோடிக்கு அதிகமான வருவாய்க்கு 5 சதவீதமும் விதிக்கப்படுகிறது. இதை உயர்த்தலாம்.
 * கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிராக கூடுதல் நிதி திரட்டுவதற்கு வசதியாக ‘கொரோனா செஸ்’ என்ற பெயரில் கூடுதல் வரி வசூலிக்கலாம். இதன் மூலம் ரூ.15 ஆயிரம் கோடி முதல் ரூ.18 ஆயிரம் கோடி வரை நிதி திரட்ட முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 இந்த அறிக்கையை 50 இந்திய வருவாய் அதிகாரிகள் தயாரித்து இருக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான நடவடிக்கைகளுக்கு கூடுதல் பணம் தேவைப்படுவதால் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மத்திய அரசு ரூ.37 ஆயிரம் கோடி சேமிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: