வியாழன், 13 பிப்ரவரி, 2020

தமிழகத்தில் ஒவ்வொருவர் மீதும் 45 ஆயிரம் ரூபாய் கடன் சுமை ..பி டி ஆர் பழன்வேல் தியாகராஜன்

மின்னம்பலம் :தமிழக அரசு வாங்கும் கடனில் 18 சதவிகிதத்தை வட்டி கட்டவே செலவிடுவதாக திமுக குற்றம்சாட்டியுள்ளது.
தமிழகத்திற்கான பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்கவுள்ளது. காலை 10 மணிக்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்து, புதிய திட்டங்கள் தொடர்பான அறிவிப்பையும் வெளியிடுகிறார். ஆனால், தமிழக அரசின் கடன் மட்டுமே 4 லட்சம் கோடியாக அதிகரித்திருப்பதாகவும், நிதிச் சுமையில் தமிழக அரசு இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (பிப்ரவரி 13) செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினரும், திமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளருமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், “அதிமுக ஆட்சிக்கு வரும்போது தமிழக அரசின் கடன் தொகை 1 லட்சம் கோடியாக இருந்தது. ஜெயலலிதா மறைவின்போது 2 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது 4 லட்சம் கோடியை தாண்டிவிட்டது. தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை 23, 500 கோடியாக உள்ளது” என்று குற்றம்சாட்டினார்.

தற்போதுள்ள அரசு கடந்த 3 வருடங்களில் 1.50 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளதாக சாடிய அவர், “அதில், 60 சதவிகிதத்தை மட்டுமே முதலீடு செய்துள்ளனர். 22 சதவிகிதம் மக்கள் திட்டங்களுக்கு செலவிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 18 சதவிகிதத்தை வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துவதற்கு பயன்படுத்தியுள்ளனர். அரசின் வட்டி செலவு மட்டும் கன்னாபின்னாவென்று அதிகரித்துள்ளது. நிதியமைச்சர் இதற்கு பதில் சொல்ல வேண்டும்” என்று சுட்டிக்காட்டினார்.
மேலும், “திமுக ஆட்சி முடியும்போது வட்டி செலவு ஆண்டுக்கு 8 ஆயிரம் கோடி. ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது 18 ஆயிரம் கோடியாக இருந்தது. கடந்த வருடம் மட்டும் 29 ஆயிரம் கோடி ரூபாயை வட்டியாக மட்டும் செலுத்தியுள்ளோம். கடனை வாங்கி அதன்மூலம் வட்டி கட்டுவதில் என்ன திறமை உள்ளது? கடனுக்கு வட்டி செலுத்த மட்டுமே அரசின் வருமானம் சென்றுவிட்டால் திட்டங்களுக்கு பணம் இருக்காது” என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தின் நிதி சூழல் கர்நாடகா, கேரளாவைப் போல அன்றி, பீகார், உத்திர பிரதேசம் போல ஆகிக்கொண்டிருப்பதாக நிதி ஆணைய தகவல்கள் தெரிவிக்கின்றன என்று குறிப்பிட்ட பழனிவேல் தியாகராஜன், “தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 10.5 விழுக்காடு உற்பத்தி சரிந்துள்ளது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தனிநபர் மீதும் 45 ஆயிரம் ரூபாய் கடன் உள்ளது” என்றும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: