புதன், 12 பிப்ரவரி, 2020

கேரளா ..பெற்றோரை தவிக்கவிட்ட 15 ஆயிரம் பேர் மீது வழக்கு

மாலைமலர் : கேரளாவில்  கடந்த 4 ஆண்டுகளில் இதுபோன்றோர் மீது 15 ஆயிரத்து 650 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
திருவனந்தபுரம்: வயதான மற்றும் நோய் பாதித்த பெற்றோரை பிள்ளைகள் பராமரிக்காமல் அவர்களை தவிக்க விடும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மேலும் பலர் தங்கள் பெற்றோரை முதியோர் இல்லங்களில் சேர்த்துவிடும் அவலமும் நடந்து வருகிறது.
அதேபோல பெற்றோரின் சொத்துக்களை அபகரித்துக்கொண்டு அவர்களை நடுவீதியில் விட்டுச் செல்கிறார்கள். இதுபோன்ற புகார்கள் சமீபகாலமாக அதிகரித்து உள்ளதால் பெற்றோரை தவிக்க விடும் பிள்ளைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கேரளாவிலும் வயதான பெற்றோரை பிள்ளைகள் ஆதரவற்ற நிலையில் விடும் சம்பவங்கள் நடைபெறுவதால் அதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பாக கேரள சட்டசபையில் சமூக நலத்துறை மந்திரி சைலஜா பேசும்போது கூறியதாவது:- வயதான பெற்றோரை கவனிக்காத பிள்ளைகள் மீது வழக்கு பதிவு செய்ய சட்டத்தில் இடம் உண்டு.
பெற்றோரை தவிக்கவிடும் பிள்ளைகளுக்கு 3 மாதம் வரை ஜெயில் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அதேப்போல இந்த 2 தண்டனைகளும் சேர்த்து விதிக்கப்படவும் சட்டத்தில் வழிவகை உள்ளது. ஜெயில் தண்டனை கேரளாவில் பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் இதுபோன்றோர் மீது 15 ஆயிரத்து 650 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 2019-2020-ம் ஆண்டு இதுவரை 3 ஆயிரத்து 227 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: