வியாழன், 13 பிப்ரவரி, 2020

வீரபாண்டி ராஜாவின் பார்வை ரஜினியின் பக்கம்?

வீரபாண்டி ராஜாவின் பார்வை ரஜினியின் பக்கம்?
 மின்னம்பலம் :  பிப்ரவரி 3 ஆம் தேதி திமுகவின் சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் பதவியிலிருந்து அகற்றப்பட்டு, மாநில தேர்தல் பிரிவு செயலாளர் என்ற டம்மி பதவிக்கு மாற்றப்பட்டார் வீரபாண்டி ராஜா. இந்த ஆபரேஷன் நடந்து பத்து நாட்கள் ஆகிவிட்ட நிலையில் வீரபாண்டி ராஜா கூடாரத்தில் ஏற்பட்ட சலசலப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக ஓய்ந்து வருகின்றன. அதேநேரம் ராஜா மீதான தலைமையின் கோபம் தீரவில்லை என்பதற்கான நிகழ்வுகளும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
ராஜாவின் மாவட்டப் பொறுப்பு பறிக்கப்பட்டதால், அவரது ஆதரவாளர்கள் சிலர் சேலத்திலுள்ள வீரபாண்டி ஆறுமுகத்தின் சிலைக்கு மாலை அணிவித்து அங்கே தலைமைக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். ராஜா மீதான நடவடிக்கையை பரிசீலனை செய்யுமாறு தலைமைக்கு கோரிக்கையும் வைத்தனர். இந்நிலையில் வீரபாண்டி ராஜாவின் பதவிப் பறிப்பைக் கண்டித்து சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சந்திரமோகன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல மாவட்ட ஐடி விங் ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார், துணை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோரும் பதவி விலகினார்கள். இந்நிலையில் பிப்ரவரி 6 ஆம் தேதி சந்திரமோகனை இளைஞரணியில் இருந்து நீக்கி முத்தனம்பாளையம் பி.அன்பழகனை மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக நியமித்தார் உதயநிதி. இதேபோல ஐடி விங் நிர்வாகிகளும் பிப்ரவரி 10 ஆம் தேதி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

ராஜா மீது தலைமையின் கோபம் சற்றே தணிந்திருந்தால் கூட... அவருக்காக ராஜினாமா செய்த நிர்வாகிகளை மீண்டும் சேர்த்திருப்பார்கள். ஆனால் ராஜாவின் மீது திமுக தலைவர் ஸ்டாலினுக்கும், உதயநிதிக்கும் நீடிக்கும் கோபம் காரணமாகவே இந்த பதவிப் பறிப்புகள் என்கிறார்கள். அந்தக் கோபத்துக்குக் காரணம் பற்றி திமுக தலைமைக் கழகத்தில் விசாரித்தபோது,
“ரஜினி மன்றத்தில் மாநிலப் பொறுப்பில் டாக்டர் இளவரசன் என்பவர் இருந்தார். சமீபத்தில் அவர் ரஜினி மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டார். டாக்டர் இளவரசனின் மகனுக்கு வீரபாண்டி ராஜா தன் மகள் மலர்விழியை மணமுடித்திருக்கிறார். அதனால் இளவரசனுக்கு ராஜா சம்பந்தி. இந்த உறவின் அடிப்படையில் இளவரசன் ரஜினிமன்றப் பொறுப்பில் இருந்தபோது, அவர் ராஜாவை ரஜினியிடம் அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது ராஜாவிடம் ரஜினி சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். பொதுவான அரசியல் பற்றிய அந்தப் பேச்சில் வீரபாண்டி ஆறுமுகத்தின் களப் பணி பற்றி விரிவாகக் கேட்டுத் தெரிந்துகொண்டிருக்கிறார். இதெல்லாம் மிகத் தாமதமாகவே திமுக தலைமைக்குத் தெரிந்திருக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து உள்ளாட்சித் தேர்தல் வரை ராஜா மீதான புகார்கள், ரஜினியை ராஜா சந்தித்தது தாமதமாகத் தெரிந்தது போன்ற காரணங்கள்தான் தலைமைக்கு அவர் மீது கோபத்தை குறையாமல் பார்த்துக்கொண்டிருக்கின்றன”என்கிறார்கள்.
இதுகுறித்து சேலத்தில் வீரபாண்டி ராஜா ஆதரவாளர்களிடம் பேசினோம். “அப்படியே ரஜினியை சென்று ராஜா சந்தித்திருந்தால் என்ன தவறு? முரசொலி மேடையிலேயே ரஜினிக்கு ஸ்டாலின் இடமளிக்கவில்லையா? இதற்காகவெல்லாம் கோபப்பட்டால் யாரும் அரசியல் செய்ய முடியாது. இளவரசன் மட்டுமா... வீரபாண்டி ராஜாவின் இன்னொரு சம்பந்தியான நீலா ஜெயக்குமாரும் ரஜினி மன்றத்தோடு தொடர்புடையவர்தான். சேலம் மாவட்டத்திலேயே பொறுப்பில் இருந்தவர்தான். எனவே ரஜினியை வைத்து ராஜா மீது கோபப்படுவதில் எந்த அடிப்படையும் இல்லை. இப்போதும் ரஜினியோடு ராஜாவுக்கு நட்பு தொடர்கிறதா என்பது பற்றி தெரியவில்லை” என்கிறார்கள்.
அதேநேரம், “ராஜாவின் தொடர்பு குறித்து தெரியாது. ஆனால், திமுக அதிமுகவைச் சேர்ந்த பலர் ரஜினியிடம் தொடர்பில் இருந்து வருகிறார்கள்” என்கிறார்கள் ரஜினி மன்ற நிர்வாகிகள்.
-வேந்தன்

கருத்துகள் இல்லை: