ஞாயிறு, 9 பிப்ரவரி, 2020

ரூ .84 கோடியில் ‘வாக்கி-டாக்கி’ வாங்கியதில் முறைகேடு: 14 தமிழக போலீஸ் அதிகாரிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

தமிழக காவல் துறைக்கு ரூ.84 கோடியில் ‘வாக்கி-டாக்கி’ வாங்கியதில் முறைகேடு:  14 போலீஸ் அதிகாரிகள் வீடுகளில் சோதனை  லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி நடவடிக்கை  தினத்தந்தி :  தமிழக காவல் துறைக்கு ரூ.84 கோடிக்கு வாக்கி-டாக்கி உள்ளிட்ட கருவிகள் வாங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக 14 போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். சென்னை, 2017-18-ம் ஆண்டுக் கான தமிழக அரசின் பட்ஜெட்டில் போலீஸ்துறையை நவீனமயமாக்க ரூ.47 கோடியே 56 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதி மூலம் தமிழக காவல்துறைக்கு 10 ஆயிரம் ‘வாக்கி-டாக்கி’ உள்ளிட்ட கருவிகள் வாங்குவதற்கு போலீஸ்துறையில் இயங்கும் தொழில்நுட்ப பிரிவு முடிவு செய்தது.
ஆனால் நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு மாறாக ரூ.83 கோடியே 45 லட்சம் ‘டெண்டர்’ ஒப்பந்தம் போடப்பட்டதாகவும், 10 ஆயிரம் கருவிகளுக்கு பதில் 4 ஆயிரம் கருவிகள் மட்டுமே வாங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
ஒரு வாக்கி- டாக்கியை ரூ.47 ஆயிரத்து 560-க்கு வாங்க வேண்டியதற்கு பதிலாக ரூ.2 லட்சத்து 8 ஆயிரம் விலையில் வாங்கப்பட்ட தாகவும், எனவே வாக்கி- டாக்கி கொள்முதலில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்று இருப்பதாகவும் புகார் எழுந்தது.

உள்துறை செயலாளர் கடிதம்

‘வாக்கி-டாக்கி’ டெண்டர் கொள்முதல் முறைகேடு குறித்து தமிழக அரசின் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, அப்போது தமிழக போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்த டி.கே.ராஜேந்திரனுக்கு கடந்த 2017-ம் ஆண்டு பரபரப்பு கடிதம் ஒன்றை அனுப்பினார்.

அந்த கடிதத்தில், ‘தமிழக போலீஸ்துறைக்கு வாக்கி- டாக்கி வாங்குவதற்கு விடப்பட்ட டெண்டரில் 11 விதி மீறல்கள் இருக்கின்றன. வாக்கி-டாக்கி கருவி மீதான ஜி.எஸ்.டி. வரி 28 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்ட பிறகும் 28 சதவீதம் கணக்கு காட்டப்பட்டுள்ளது என்பது போன்ற அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார்.

அவருடைய அறிக்கையை சுட்டிக்காட்டி, இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை

அதே சமயம், இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்த டி.கே.ராஜேந்திரன் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டிக்கு பதில் கடிதம் அனுப்பினார்.

இதற்கிடையே போலீஸ்துறையில் செல்போன், சி.சி. டி.வி. கருவிகள் உள்ளிட்ட தொழில்நுட்ப கருவிகள் வாங்கியதில் ரூ.350 கோடி ஊழல் நடந்து இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸ்துறை தொழில்நுட்ப பிரிவில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரைத்தது.

வீடுகளில் சோதனை

இந்த நிலையில் ஊழல் முறைகேடு நடைபெற்றதாக கூறப்படும் 2016-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றிய 14 போலீஸ் உயர் அதிகாரிகளின் வீடுகள், டெண்டர் எடுத்த நிறுவனத்தின் 2 இடங்கள் உள்பட மொத்தம் 18 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அதன்படி தொழில்நுட்ப பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக இருந்த அன்புச்செழியனின் கீழ்ப்பாக்கம் பால்பர் சாலை வீடு, பட்டினப்பாக்கம் போலீஸ் குடியிருப்பில் உள்ள கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், டி.எஸ்.பி. உதயசங்கர் உள்பட 14 போலீஸ் அதிகாரிகள் வீடுகளும் சோதனை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டன. சென்னையில் 17 இடங்களிலும், மதுரையில் ஒரு இடத்திலும் இந்த சோதனை நடைபெற்றது. அன்புச்செழியன் தற்போது இ-சேவை மையத்தின் இணை இயக்குனராக உள்ளார்.

இந்த சோதனை தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முக்கிய ஆவணங்கள் சிக்கின

தமிழக போலீஸ்துறைக்கு வாக்கி-டாக்கி, செல்போன், சி.சி.டி.வி. கருவிகள், டெப்லேட், ஜி.பி.எஸ்.கருவி, பேட்டரி உள்பட கருவிகள் வாங்குவதில் 2016-2018-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தொழில்நுட்ப பிரிவு போலீஸ் சூப்பிரண்டு (அன்புச்செழியன்) அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முறைகேடான செயல்பாடுகள் மூலம் அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுத்தி உள்ளார் என்று புகார் பெறப்பட்டது.

எனவே அரசு உத்தரவின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள், 2 தனியார் நிறுவனங்கள் மீது கடந்த 7-ந்தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக வழக்கில் சிக்கிய அதிகாரிகள், தனி நபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என 18 இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளன. அவற்றை பறிமுதல் செய்து தொடர்ந்து, விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

பரபரப்பு

டி.என்.பி.எஸ்.சி. நடத்திய குரூப்-4, குரூப்-2ஏ தேர்வு மோசடி வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை, கைது நடவடிக்கை என்ற பரபரப்பான சூழ்நிலையில், போலீஸ் உயர் அதிகாரிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கருத்துகள் இல்லை: