சனி, 15 பிப்ரவரி, 2020

CAA, NRC NPR இஸ்லாமியர்களுக்கு மட்டுல்ல ... கடந்து சென்றால் ஹிட்லரின் ஜெர்மனியில் நடந்ததுதான் ...

Karthikeyan Fastura : வரலாற்றில் பல இடங்களில் மனிதர்கள் செய்யும் மிகப்
பெரும் பிழை தன்னை பாதிக்கும் வரை நாட்டில் என்ன அநியாயம்
நிகழ்ந்தாலும் கண்டும் காணாது செல்வது. உயிர்போகும் பிரச்சனை நிகழ்ந்து கொண்டிருந்தாலும் என்னை பாதிக்கவில்லை என்ற அளவில் அமைதியாகி விடுவது.
ஜெர்மனியில் நாசிசம் பரவிக் கொண்டு இருந்தபோது யூதர்கள் அதை பற்றிய பெரிய அக்கறை இன்றி பொருள் சேர்ப்பதில் குறியாக இருந்தார்கள். என்னவாயிற்று? அவர்கள் தலைமுறை தலைமுறையாக சேர்த்த தொழில், செல்வம், வீடு என்று அத்தனையும் இழந்து முகாம்களுக்கு இழுத்து செல்லப்பட்டார்கள்.
அடுத்து அவர்கள் அவ்வாறு இழுத்து செல்லப்படுவதையும், கூட்டம் கூட்டமாக, கொத்து கொத்தாக கொல்லப்படுவதை பார்த்து கண்டும் காணாதிருந்தார்கள் ஜெர்மானியர்கள். நாசிச வெறி உச்சகட்டத்திற்கு சென்று ஹிட்லர் கண்ணுமண்ணு தெரியாத அதிகார வெறியில் மிகப்பெரும் வல்லரசாக இருந்த ஜெர்மனியை உலகத்தின் வெறுப்புக்கு ஆளாக்கினார்.

ஒட்டுமொத்த உலகமும் கைகோர்த்து கொண்டு அவர்களை தாக்கி இறுதிப் போரில் பலத்த உயிர்சேதம், பொருள்சேதம் எல்லாவற்றையும் அனுபவித்தார்கள் ஜெர்மானியர்கள். ஜெர்மானிய மக்கள் தொகையே சரிந்தது. நாற்பது வருடங்கள் ஒட்டுமொத்த நாடே இரண்டாக பிளவுற்று ஒரு சிறைக்கூடாரமாக வாழ்ந்து வந்தது. இந்த கால கட்டத்தில் ஜெர்மானியர்கள் பிள்ளைகள் பெறவே அஞ்சினார்கள். அதன் விழைவு இன்றும் ஜெர்மனியில் முதியவர் மக்கள்தொகையே அதிகம். இன்றும் அவர்கள் மேல் உள்ள களங்கம் போகவில்லை. ஹிட்லரின் நாசிசத்திற்கு அன்றே மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தால் இன்று உலகின் மிகப்பெரும் வல்லரசு நாடுகளில் முதல் இரண்டு நாடுகளில் ஒன்றாக இருந்திருப்பார்கள். அத்தனை திறன்வாய்ந்த செல்வ செழிப்பான மிகப் பிரமாண்டமான நாடாக அன்று இருந்தது.
CAA, NRC NPR என்பது இஸ்லாமியர்களுக்கு
மட்டும் எதிரானது அல்ல. எல்லோருக்கும் எதிரானது. அதன் திரி இஸ்லாமியர்களிடம் ஆரம்பித்து கிறித்துவர்கள், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தவர்கள் என்று பயணித்து இறுதியில் இந்த திரியை பற்ற வைத்த பார்ப்பனீய சமூகத்திற்கும் கேடாக வந்து முடியும்.
மக்களுக்கும் பாசிஸத்திற்கும் நடக்கும் இந்த போரில் முன் வரிசையில் நின்று எல்லோருக்காகவும் அவர்கள் போராடிக் கொண்டு வருகிறார்கள். அவர்களோடு நிற்காவிட்டால் நாம் நம் எதிர்காலத்தை , நம் பிள்ளைகளின்
எதிர்காலத்தை தொலைத்துவிடுவோம். நான் ஏன் இத்தனை கவலையுடன் இந்த இரவில் எழுத வேண்டும். என் பிள்ளைகளுக்கு சொத்து சேர்த்தால் போதுமா.. சொந்தம் சேர்த்தால் போதுமா.. இந்த சமூகத்தை சமூக நல்லிணக்கத்தோடு வைத்திருந்தால் தானே அவர்களுக்கு எதிர்காலம்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் அமைதியாக நடந்த CAA,NRC எதிர்ப்பு போராட்ட கூட்டத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடத்தியது போலவே போலிக் கலவரத்தை உருவாக்கி அடக்குமுறையை ஏவிவிட்டிருக்கிறது இந்த அரசு. இதனால் தமிழ்நாடு முழுவதும் தேவையில்லாத பதட்டத்தை உருவாக்கிவருகிறது. எடப்பாடி அரசு செய்த ஆகப் பெரும் பிழை இதுவே.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் பொதுச்சமூகம் கடந்துசென்றால் நாளை என்பது எல்லோருக்குமே கேள்விக்குறி. காட்டு தீயில் பக்கத்து மரம் பற்றி எரியும் போதும் அசையாதிருந்து சேர்ந்து கருகிவிடும் மரம் போல மனுசனுமா இருப்பது ?
#TNstandWithMuslims #NoCAA #NoNRC

கருத்துகள் இல்லை: