ஞாயிறு, 9 பிப்ரவரி, 2020

A.R. முருகதாஸை கிழித்த T.R! வீடியோ


மின்னம்பலம் : ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த தர்பார் திரைப்படத்தால் ஏற்பட்ட இழப்பிற்கு, நஷ்ட ஈடு கேட்டு விநியோகஸ்தர்கள் போராடி வருகின்றனர். இந்த நிலையில் இதுகுறித்து நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.
சென்னை-காஞ்சீபுரம்-திருவள்ளூர் மாவட்ட வினியோகஸ்தர்கள் சங்க தலைவரான டி.ராஜேந்தர் சென்னையில் நேற்று(பிப்ரவரி 9) மாலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அவர் உரையாற்றும் போது, “லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த தர்பார் திரைப்படம் நஷ்டத்தை சந்தித்ததாக விநியோகஸ்தர்கள் பல்வேறு சங்கங்களிலும் புகார் அளித்து வருகின்றனர். அதே புகாரை எங்கள் சங்கத்திலும் அளித்திருந்தனர். விநியோகஸ்தர்கள் விளக்கில் விட்டில் பூச்சி விழுவதை போல் விழுந்துவிட்டார்கள். தர்பார் படத்தை அதிக விலைக்கு வாங்கி இருக்கக் கூடாது.

பேட்ட படத்தின் அளவிற்கு படம் விற்பனை செய்யப்பட்டிருந்தால் கூடப் பரவாயில்லை. ஆனால் இதற்கு விலை அதிகமாகக் கொடுத்துவிட்டார்கள். பொங்கலுக்குள் தர்பார் பழைய படமாகிவிட்டது. இது ஒரு தமிழ் படம் என்கிறார்கள், ஆனால் படத்தை தமிழகத்தில் எடுக்கவில்லை, படத்தில் தமிழை தவிர இந்தியையே பெரும்பாலானவர்கள் பேசுகின்றனர் என விநியோகஸ்தர்கள் புலம்புகின்றனர். இது ஒரு டப்பிங் படம் போன்று தான் தோன்றியது.
விநியோகஸ்தர்கள் இயக்குநர் முருகதாஸை சந்திக்க சென்றுள்ளனர். ஆனால் இயக்குநர் முருகதாஸ் விநியோகஸ்தர்கள் மீது வழக்கு தொடுத்துள்ளார். மூத்த இயக்குநர் என்னும் முறையில் முருகதாஸிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். உங்களுக்கென ஒரு சங்கம் இருக்கின்றது. முதலில் அங்கு புகார் அளிக்காமல் போலீசையும், நீதிமன்றத்தையும் நாடியது ஏன்? விநியோகஸ்தர்கள் உங்களை சந்திக்க மூகமுடி அணிந்து வந்தார்களா? கூட்டமாக வந்தார்களா? கத்தியோடு வந்தார்களா? அவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டதற்கு மூத்த இயக்குநர் என்னும் முறையில் மிகுந்த வருத்தமடைகிறேன். விநியோகஸ்தர்கள் பொய் கணக்கு கொடுக்கிறார்கள் என்று நீங்கள் கூறினால், நாங்கள் கணக்கு காட்டுகிறோம் நீங்கள் வாதாட தயாரா?
இவர்களுடைய படத்தை வாங்கியவர்களை காப்பாற்ற முடியாதவர்களா? தமிழகத்தை காப்பாற்ற போகிறார்கள்?
ஒரு வேளை அவர்கள் கைது செய்யப்பட்டால் எங்கள் சங்கத்தின் சார்பில், தமிழகம் முழுவதும் உள்ள விநியோகஸ்தர்களையும் எங்களுக்கு ஆதரவான தயாரிப்பாளர்களையும் திரட்டி நாங்கள் குரல் கொடுப்போம்” என்று தெரிவித்தார்.
-இரா.பி.சுமி கிருஷ்ணா

கருத்துகள் இல்லை: