திங்கள், 10 பிப்ரவரி, 2020

தெலுங்கு மக்களுக்கான அரசியல் கட்சி .. ரெயிடில் சிக்கிய ராம் மோகன் ராவ் தீவிரம்!

தெலுங்கு மக்களுக்கான அரசியல் கட்சி: ராம் மோகன் ராவ் தீவிரம்!மின்னம்பலம் : ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது செயலாளராகவும், அரசின் தலைமைச் செயலாளராகவும் இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ராம் மோகன் ராவ் இப்போது வெளிப்படையான அரசியல் நடவடிக்கைகளில் இறங்கிவிட்டார்.
ஜெயலலிதா இறந்த சில நாட்களிலேயே சேகர் ரெட்டி, ராம் மோகன் ராவ் ஆகியோரது வீடுகளைக் குறிவைத்து மத்திய அரசின் வருமான வரித்துறை அதிரடி ரெய்டு நடத்தியது. ‘அம்மா இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா?’ என்று கேட்ட ராம் மோகன் ராவ் பின்னர் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டார். தொழில் முனைவோர் மேம்பாட்டுக் கழகத்தில் பணி நியமனம் செய்யப்பட்டு பின் ஓய்வு பெற்றார்.

சர்ச்சைகளுக்கு பஞ்சம் வைக்காத ராம் மோகன் ராவ் இப்போது தமிழகத்தில் தெலுங்கு சமுதாய மக்களை ஒன்று சேர்க்கும் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். சில மாதங்களாகவே கோவை, சேலம், ஈரோடு, தூத்துக்குடி என்று பயணித்து தெலுங்கு மக்களை ஒன்று சேர்க்கும் வேலைகளை செய்து வந்த ராம் மோகன் ராவ் பிப்ரவரி 8 ஆம் தேதி மதுரையில், திருமலை நாயக்கரின் 437 ஆவது பிறந்தநாள் விழாவில் இந்த ஒருங்கிணைப்பை பகிரங்கப்படுத்தியிருக்கிறார்.
ஆந்திராவில் பவன் கல்யாண் கட்சியில் முக்கியப் பங்காற்றும் ராம் மோகன் ராவ் தமிழ்நாட்டில் செய்து வருவது பற்றி இந்த ஒருங்கிணைப்பில் கலந்த்கொண்ட விடுதலைக் களம் அமைப்பின் தலைவர் கொ.நாகராஜனிடம் பேசினோம்.
“தமிழகத்தில் தெலுங்கு சமூக மக்களின் ஒருங்கிணைப்பு இல்லாததால் கல்வி, வேலைவாய்ப்புகளில் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை. இன்றைய தமிழக அரசில் தெலுங்கு மக்களின் பிரதிநிதியாக இருக்கக் கூடியவர் அமைச்சர் கடம்பூர் ராஜூ மட்டும்தான். ஆந்திராவில் அரசியல் பணியில் ஈடுபட்டிருந்த ராம் மோகன் ராவிடம் தமிழகத்திலும் இதுபோல ஒன்றுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்று சொன்னோம். அதன்படியே அவர் களமிறங்கியிருக்கிறார்.
தமிழகத்தில் சிதறிக் கிடக்கிற நாயக்கர், தொட்டிய நாயக்கர், கவரா நாயுடு, கம்மவர் நாயுடு, வெளம நாயுடு, போயர் உள்ளிட்ட சமூக அமைப்புகளை ஒருங்கிணைப்பதே எங்கள் பணி. இதன் அடுத்த கட்டமாக 2021 சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு மக்களை ஒன்றிணைத்து புதிய அரசியல் கட்சியை ஏற்படுத்துவோம். அதற்கு ராம் மோகன் ராவ் தலைமை தாங்குவார். வழிகாட்டுவார். தலைமைச் செயலாளராக இருந்துவிட்டு எம்.எல்.ஏ.வாக இருக்க அவர் விரும்பவில்லை. எனவே அவர் தேர்தலில் போட்டியிடுவது பற்றி ஆர்வம் இல்லாமல்தான் இருக்கிறார். ஆனாலும் அவரது ஒருங்கிணைப்பில் தெலுங்கு மக்களுக்கான அரசியல் கட்சி தமிழகத்தில் உருவாகும்” என்கிறார் நாகராஜன்.
-ஆரா

கருத்துகள் இல்லை: