வியாழன், 13 பிப்ரவரி, 2020

நீட் ஆள் மாறாட்டம்- 10 பேரை பிடிக்க பேஸ்புக், டுவிட்டர் உதவியை நாடிய போலீஸ்

நீட் தேர்வுநீட் தேர்வில் ஆள் மாறாட்டம்- 10 பேரை பிடிக்க பேஸ்புக், டுவிட்டர் உதவியை நாடிய போலீஸ்மாலைமலர் : நீட் தேர்வு முறைகேடு வழக்கில் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட 10 மாணவ-மாணவிகளை பிடிக்க சிபிசிஐடி போலீசார் பேஸ்புக், டுவிட்டர் உதவியை நாடி உள்ளனர்.
சென்னை: நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தமிழக மாணவர்கள் பலர் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து இருப்பது கடந்த ஆண்டு தெரிய வந்தது.
தேனி மருத்துவ கல்லூரியில் படித்து வந்த சென்னை மாணவர் உதித் சூர்யா, தனது தந்தையும் டாக்டருமான வெங்கடேசன் மூலமாக இந்த முறைகேட்டில் ஈடுபட்டது முதலில் அம்பலமானது.
இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் சிக்கிய உதித் சூர்யா, வெங்கடேசன் இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பான தகவல்கள் வெளியானது.
மேலும் பல மாணவர்கள் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் மூலமாக டாக்டர் படிப்பில் சேர்ந்து இருப்பது வெட்ட வெளிச்சமானது.

இதனைத் தொடர்ந்து சென்னை மாணவர்களான பிரவீன், அவரது தந்தை சரவணன், ராகுல், அவரது தந்தை டேவிஸ், இர்பான், முகமது சபி ஆகியோரும் பிடிபட்டனர்.
நீட் ஆள் மாறாட்ட விவகாரத்தில் தேர்வு எழுதாமல் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்கள் பிடிபட்ட நிலையில், அவர்களுக்காக தேர்வு எழுதிய மாணவர்கள் யார்-யார்? என்பது தெரியாமலேயே உள்ளது.

நீட் தேர்வு நுழைவு சீட்டில் ஒட்டப்பட்டிருந்த போட்டோக்களை கைப்பற்றிய போலீசார் அந்த போட்டோக்களை வெளியிடாமலேயே அவர்களை தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். ஆனால் மோசடியாக தேர்வு எழுதியவர்களை நெருங்க முடியவில்லை.

இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 11-ந்தேதி மாலையில் நீட் தேர்வை முறைகேடாக ஆள் மாறாட்டம் மூலம் எழுதியவர்களின் போட்டோக்களை வெளியிட்டனர். 2 மாணவிகள் மற்றும் 8 மாணவர்களின் போட்டோக்களை வெளியிட்ட போலீசார் அவர்கள் பற்றிய விவரங்கள் எதுவும் தெரியாமல் இருப்பதால் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று கூறி இருந்தனர்.

இதற்காக 9443884395 என்ற செல்போன் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என்று கூறி இருந்தனர். போட்டோவில் இருப்பவர்களை தேடி கண்டு பிடிக்க வெளி மாநிலங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

டெல்லி, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களில் உள்ள சில நீட் தேர்வு மையங்களிலேயே ஆள் மாறாட்டம் செய்து 10 பேரும் தேர்வு எழுதி இருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த மாநிலங்களிலும் போலீசார் தேடுல் வேட்டை முடுக்கி விட்டுள்ளனர். ஆதார் மையங்களில் இவர்களின் புகைப்படம் மற்றும் முகவரி ஏதும் உள்ளதா? என்பது பற்றியும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

பேஸ்புக், டுவிட்டர் ஆகியவற்றின் மூலமாகவும் 10 பேர் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக இந்த அமைப்புகளுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் முறைப்படி கடிதமும் எழுதி உள்ளனர்

கருத்துகள் இல்லை: