வியாழன், 13 பிப்ரவரி, 2020

`மனிதனை மனிதன் சுமப்பதா?!’ -பல்லக்கில் பவனிவரும் நிகழ்ச்சியைத் தவிர்த்த தருமபுர ஆதீனம்


தரும்புர ஆதீனம்.
vikatan.com - மு.இராகவன் - பா.பிரசன்ன வெங்கடேஷ் : மனிதர்கள் சுமந்துசெல்லும் பல்லக்கில், தருமபுரம் ஆதீனகர்த்தர் செல்வதற்கு எதிர்ப்பு
தெரிவிக்கப்பட்டதால் பல்லக்கில் செல்வதைக் கைவிட்டு, ஆதீனகர்த்தர் கோயிலுக்கு நடந்தே சென்றது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
protestநாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள தருமபுர ஆதீனத்தின் புதிய ஆதீனகர்த்தராக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பொறுப்பேற்றுள்ளார். இவர், ஆதீன கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களுக்கும் சென்று வழிபாடு நடத்திவருகிறார். அப்போது, பக்தர்கள் அவரை ‘பட்டினப்பிரவேசம்’ எனப்படும் நிகழ்ச்சியாக, பல்லக்கில் அமர வைத்து, தோளில் சுமந்து கோயிலுக்கு அழைத்துச்செல்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு, சமீபத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி எதிர்ப்பு தெரிவித்தார். “ஆதீனகர்த்தரை பல்லக்கில் தூக்கிச்சென்றால் போராட்டம் நடத்தப்படும்” என அறிவித்திருந்தார்.

< இந்நிலையில், நேற்று திருப்பனந்தாளில் உள்ள அருணஜடேஸ்வரர் கோயிலுக்கு ஆதீனகர்த்தர் வருகைதந்தார். கோயிலுக்கு அருகேயுள்ள விநாயகர் சந்நிதியில், காசி மடம் சார்பில் முத்துக்குமாரசாமி தம்பிரான் சுவாமிகள் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கோயிலுக்கு அவரை பட்டினப்பிரவேசம் எனப்படும் பல்லக்கில் வைத்து சுமந்துசெல்ல தயார் நிலையில் இருந்தனர். அப்போது, திராவிடர் கழகத்தின் போராட்டம் குறித்து ஆதீனகர்த்தருக்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர். “இதில் எனக்கும் உடன்பாடில்லை” என்றுகூறி, பல்லக்கில் செல்வதைத் தவிர்த்துவிட்டு, கோயிலுக்கு நடந்தே சென்றார். இதற்கிடைஇதற்கிடையே, திராவிடர் கழகத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட திராவிடர் கழகத்தினர் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், கறுப்புக்கொடியுடன் கூடியிருந்தனர். அவர்களிடம் “ஆதீனகர்த்தர் பல்லக்கில் செல்லவில்லை” என்ற தகவலை போலீஸார் தெரிவித்தனர். அதனால் போராட்டக்காரர்கள் மகிழ்ச்சி அடைந்து ‘பெரியார் வாழ்க’ ‘அம்பேத்கர் வாழ்க’ ‘தருமபுர ஆதீனகர்த்தருக்கு நன்றி’ என்ற முழக்கங்கள் எழுப்பிவிட்டு கலைந்துசென்றனர். திராவிடர் கழகத்தின் வேண்டுகோளை ஏற்று பல்லக்கில் செல்வதைத் தவிர்த்த தருமபுர ஆதீனகர்த்தருக்கு பாராட்டையும் நன்றியையும் தி.க-வினர் தெரிவித்துள்ளனர். vikatan.com

கருத்துகள் இல்லை: