வியாழன், 9 நவம்பர், 2017

எம் ஆர்,கே, பன்னீர்செல்வம் : தூர் வாரியதில் ஊழல்! கடலூர் ..200 கோடி ரூபாய் எங்கே?

விகடன் : கடலூர் மாவட்டத்துக்கு வெள்ளத் தடுப்புப் பணிக்காக ஒதுக்கப்பட்ட 200 கோடி ரூபாய் எங்கே? என்று கேள்வி எழுப்பியுள்ளார், தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.
 இதுகுறித்து அவர் கூறுகையில், "கடலூர் மாவட்டத்தில் வெள்ளத் தடுப்புப் பணிகள், சாலைகள் அமைத்தல், ஏரி, குளங்கள் தூர் வாரியதில் மெகா ஊழல் நடந்துள்ளது. இதுகுறித்து நீதிமன்றம் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்த வேண்டும். தொகுதி அமைச்சர் எம்.சி.சம்பத் வெளியில் சென்று மழை பாதிப்புகளைப் பார்வையிடாமல், மக்களைச் சந்திக்காமல், கடலூர் மாவட்டத்தில் மழை பாதிப்புகள் ஏதும் இல்லை என்று கூறியிருக்கிறார்.
ஆனால், மழையால் ஒரு வாரமாக விவசாயக் கூலிகள் வேலை வாய்ப்பை இழந்து வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்ததால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்றவாறு மாவட்ட நிர்வாகமும் அவருக்கு ஜால்ரா தட்டிக்கொண்டிருக்கிறது. மழையால், சமீபத்தில் போடப்பட்ட வேப்பூர் - விருத்தாசலம், கடலூர் -சேலம் சாலைகள் மற்றும் நகரத்தில் உள்ள சாலைகள், குண்டும் குழியுமாகிக் கிடக்கின்றது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.


அரசு மருத்துவமனையில், மின் கசிவால் கட்டடத்தைத் தொட்டால் ஷாக் அடிக்கிறது. சித்த மருத்துவப் பகுதியில் மேற்கூரை எப்போது தலையில் விழுமோ என்றே தெரியவில்லை. நோயாளிகளை அப்புறப்படுத்தினால் போதுமா? இதற்கு நிரந்தரத் தீர்வு வேண்டும். மாவட்டத்தில் நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிக்காக ஒதுக்கப்பட்ட 200 கோடி ரூபாய் எங்கே? அந்த நிதியில் எங்கு, என்ன வேலை நடக்கிறது என்று விவசாயிகள்மூலம் குழு அமைத்து, அரசு அதைக் கண்காணிக்க வேண்டும்" என்றார் அவர்

கருத்துகள் இல்லை: