வெள்ளி, 10 நவம்பர், 2017

இரட்டை இலை: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம்!

இரட்டை இலை தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில், தலைமைத் தேர்தல் ஆணையத்தின் தரப்பிலிருந்து ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மின்னம்பலம் :அதிமுக சசிகலா, பன்னீர்செல்வம் என இரு அணிகளாகப் பிரிந்தபோது ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு இரு அணிகளும் இரட்டை இலைச் சின்னத்தை சொந்தம் கொண்டாடியதால், சின்னம் முடக்கப்பட்டு மாற்றுச் சின்னங்கள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி தினகரன் தரப்பைத் தவிர்த்துவிட்டு இரு அணிகள் ஒன்றிணைந்ததைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த அணிகள் தரப்பும், தினகரன் தரப்பும் தங்களுக்குத்தான் இரட்டை இலைச் சின்னம் வேண்டும் என்று கூறித் தேர்தல் ஆணையத்தில் ஆவணங்கள் தாக்கல் செய்துள்ளன.

உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ளதால் விரைவில் இரட்டை இலை யாருக்கு என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்த நிலையில், அதற்கான அவகாசத்தை நவம்பர் 10வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து அக்டோபர் 6ஆம் தேதி தொடங்கிய இரட்டை இலை தொடர்பான இறுதி விசாரணை, ஏழு கட்டங்களாகக் கடந்த 8ஆம் தேதி வரை நடைபெற்றது. அன்றைய தினத்தில் இரட்டை இலை தொடர்பாக வாதங்கள் மீதம் இருப்பின் அதை எழுத்துபூர்வமாக வரும் 13ஆம் தேதிக்குள் சமர்பிக்க உத்தரவிட்டு, தீர்ப்பை நாள் குறிப்பிடாமல் தேர்தல் ஆணையம் ஒத்திவைத்தது.
இந்த சூழ்நிலையில் இரட்டை இலை குறித்து முடிவெடுக்கத் தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் கொடுத்த அவகாசம் இன்றுடன் ( நவம்பர் 10) முடிவடையவுள்ள நிலையில், தலைமை தேர்தல் ஆணையம் தரப்பிலிருந்து இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆவணத்தில் விசாரணை ஆரம்பித்தது முதல், எழுத்துபூர்வமான வாதத்தைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டது வரை, தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைத்தது ஏன் என்பது உள்பட பல்வேறு அம்சங்களையும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆவணங்கள் தாக்கல் செய்தது குறித்து நீதிமன்றம் பதிவேட்டிலும் தகவல் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் எப்போது தீர்ப்பு வரும் அல்லது தீர்ப்பு கூறுவதற்கு எத்தனை நாட்கள் ஆகும் என்பது பற்றி அதில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை: