செவ்வாய், 7 நவம்பர், 2017

கட்டலோனியாவும் தமிழகமும் - 1

catalonia கீற்று -க.இரா.தமிழரசன் :உலகெங்கிலும் ஒவ்வொரு தேசிய இனங்களும் ஒடுக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்து கொண்டிருக்கின்றன. தனக்கென தனி அரசுகளை அமைத்துக் கொள்ளும் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றன. அப்படி ஸ்பெயினிலிருந்து பிரிந்து கட்டலோனியா தேசமும் தனிநாடாக தன்னை 27.10.2017 அன்று பிரகடனபடுத்திக் கொண்டுள்ளது.
ஸ்பெயினின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக இருந்து வந்த கட்டலோனியாவில் தனிநாடு கோரி அக்டோபர் 1ல் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஸ்பெயின் நாட்டுடன் இணைந்து இருப்பதா..? அல்லது தனிநாடாக பிரிந்து செல்வதா..? என்பதை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்டது.

வாக்கெடுப்பு நடத்துவதே சட்டவிரோதமானது என்று ஸ்பெயின் அரசும், ஸ்பெயின் அரசியலமைப்புக்கு எதிரானது என்று கோரி நீதிமன்றமும் இந்த வாக்கெடுப்பை தடை செய்தது. ஆனாலும் கட்டலோனிய அரசு தடையை மீறி வாக்கெடுப்பை நடத்தியது. இதனால் ஆத்திரம் கொண்ட ஸ்பெயின் அரசாங்கம் வாக்கெடுப்பு நடக்கும் இடத்தில் ஆயிரக்கணக்கான காவலர்களை அனுப்பி கட்டலோனிய மக்கள் மீது கொடுந்தாக்குதலை நடத்தியது. அதையும் மீறி அந்த வாக்கெடுப்பை கட்டலோனிய அரசாங்கம் வெற்றிகரமாக நடத்தி முடித்தது. அந்த வாக்கெடுப்பில் கலந்துகொண்டு வாக்களித்தவர்கள் 90 விழுக்காடு மக்கள் தனி நாடாக பிரிந்து செல்வதே சரி என்று வாக்களித்தனர்.
இதனடிப்படையில்தான் கட்டலோனியாவின் பிரதமர் கார்லஸ் ப்யூக்மண்ட், ஸ்பெயினிலிருந்து கட்டலோனியா பிரிந்து தனிநாடாக உதயம் ஆகிவிட்டதாகவும், அதை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். உலக அரங்கில் புதிதாக தோற்றம் கொண்டுள்ள கட்டலோனியாவை ஸ்பெயின் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை, சர்வதேச நாடுகளும் இது ஸ்பெயினின் உள்நாட்டுப் பிரச்சனை, இதில் தலையிட மாட்டோம் என்று கூறியுள்ளனர். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் "தனிநாடு கோரி" வாக்கெடுப்பு நடத்தியதற்கே கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தார். இப்படியான சூழ்நிலையில் கட்டலோனியா குறித்தும், அந்நாட்டின் அறிவிப்பு குறித்தும் இந்தியாவின் கீழ் அடிமையாக இருக்கிற தமிழகம் எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்று விரிவாக பார்க்கலாம்.
ஸ்பெயின் நாட்டின் வடகிழக்குப் பகுதியில் கட்டலோனியா மாகாணம் அமைந்துள்ளது. கட்டலோனியாவில் பெரும்பகுதி மக்கள் பேசக்கூடிய மொழியாக கட்டலான் மொழியும், சிறுபான்மையினராக ஸ்பெயின் மொழி, ஆக்சிடான் மொழி பேச்சக்கூடியவர்களும் வசிக்கிறார்கள்.
ஐரோப்பா கண்டத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள நாடு ஸ்பெயின். ஐரோப்பா ஒன்றியத்தின் உறுப்பு நாடாகவும் இது உள்ளது. இந்தியாவைப் போலவே ஸ்பெயின் நாடும் பல மொழியினங்களை கொண்ட ஒரு நாடு. பேனா என்று அழைக்கப்படுகிற மொழியை பேசக்கூடிய மக்களை பெரும்பான்மையாகவும் பாஸ்க், கேட்டலான்,கேலிச்சியன், ஆக்சிடன் போன்ற மொழிகளும், இனவியன், கேன்டப்ரியர் போன்ற சிறிய மொழி குடும்ப மக்களும் வசிக்கிறார்கள்.
ஸ்பெயினின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக கட்டலோனியா திகழ்கிறது. தனக்கென தனி அரசியலமைப்பு சபை,தனி நாடாளுமன்றம்,தனி தேசிய கீதம், தனிக்கொடி மற்றும் தனித்த அரச முத்திரை கொண்டது. பார்சிலோனியா இதன் தலைநகரமாகவும் ஸ்பெயினின் இரண்டாவது பெரிய நகரமாகவும் விளங்குகிறது.
ஸ்பெயின் நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 25 விழுக்காடு கேட்டலோனியாவிலிருந்து தான் செல்கிறது. ஸ்பெயின் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 19 விழுக்காடு கேட்டலோனியாவில் உற்பத்தியாகிறது. மொத்த அந்நிய முதலீட்டில் 20 விழுக்காடு கட்டலோனியாவில் தான் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே கைத்தொழில் வளர்ச்சி ஏற்பட்டு தொழில் நகரங்களாக கட்லோனியாவின் பல நகரங்கள் உருவாகின. 8 மணி நேர வேலை நேரக் கோரிக்கையை ஸ்பெயின் நாட்டில் போராடி பெற்ற முதலாவது நகரம் கட்டலோனியாவின் தலைநகரமாக விளங்கக் கூடிய பார்சிலோனா தான். ஆண்டுக்கு 613 மில்லியன் டாலர் வரவுசெலவு கணக்குடன் உலகின் இரண்டாவது பணக்கார கால்பந்து கழகமாகவும் பார்சிலோனா கால்பந்து கழகம் உள்ளது.
தொழில் வளர்ச்சியும்,இயற்கை வளம் கொண்டதாகவும், ஸ்பெயின் அரசாங்கத்திற்கு அதிக வரி வருமானம் தரக்கூடியதாகவும் கட்டலோனியா இருப்பதால் தான்,ஸ்பெயின் கட்டலோனியாவை தன் "அடிமை நாடாக "வைத்திருக்க விரும்புகிறது.
கட்ட லோனியாவின் வரலாறு :
உலகெங்கிலுமுள்ள ஒவ்வொரு தேசிய இனமும் பல்வேறு பேரரசுகளால் அடிமைப்படுத்தப்பட்டும் போர்களால் சிதையுண்டும், பல்வேறு அரசுகளுக்கு கைமாறியுமே வந்துள்ளன. அப்படி கட்டலோன் மக்கள் வாழும் பகுதி ஆரம்பத்தில் ரோமானிய பேரரசின் கீழ் இருந்தது வந்தது. அதன்பின் பிரெஞ்சு நாட்டு மன்னர்களை கொண்ட விஸ்கோதிக் பேரரசின் கீழ் வந்தது. அதன்பின் கி. பி 760 ஆம் ஆண்டு வட ஆப்பிரிக்க அரபு பேரரசின் கீழ் வந்தது. கி. பி 760 முதல் கிபி 801 ஆம் ஆண்டுவரை ரவுசலின் பேரரசின் கீழ் வந்தது. இப்படி பல்வேறு பேரரசின் கீழ் அடிமைப்பட்டுக்கிடந்தது. 1716 ஆம் ஆண்டு முழுமையாக ஸ்பெயினின் காலனி நாடாக மாறியது. இந்த அடிமை நிலை 1930 வரை நீடித்தது.
1931-இல் இரண்டாவது அன்னிய இஸ்பானிய குடியரசின் கீழ் ஸ்பெயின் முதலாவது சுயாட்சி பிரதேசமாக கட்டலோனியா அறிவிக்கப்பட்டது. பிறகு நடந்த உள்நாட்டுப் போரினால் கொடுக்கப்பட்ட தன்னாட்சி அதிகாரம் பறிக்கப்பட்டது. உள்நாட்டுப் போரின் காரணமாக 1939 இல் சர்வதிகாரி பிரான்சில்வா பிராஸ்கோ ஆட்சியை பிடித்தார்.
பிராஸ்கோவின் ஆட்சியில் கட்டலோனியர்களின்அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டன. பிராஸ்கோவின் ஆட்சியில், ஸ்பானிய பெருந்தேசிய இன ஒடுக்குமுறையை மற்ற தேசிய இனங்கள் மீது செலுத்தப்பட்டது. அதில் அதிகம் பாதிக்கப்பட்டது கட்டலோனிய தேசிய இனம்தான்.
கட்ட லோனிய தன்னாட்சி அதிகாரம் மறுக்கப்பட்டதோடு, பொது இடங்களில் கூட கட்டலோன் மொழியை பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டது. கட்டலோன் பண்பாட்டு அடையாளங்கள் சிதைக்கப்பட்டன. குழந்தைகளின் பெயர்கள்கூட இஸ்பானிய மொழியில்தான் வைக்க வேண்டும் என்னும் சட்டம் இயற்றப்பட்டது. கட்டலோன் மக்களின் பாரம்பரிய திருவிழாக்கள், விளையாட்டுகள் தடை செய்யப்பட்டன. சர்வாதிகாரி பிராய்கோவின் மறைவு வரை தொடர்ந்தது.
சர்வதிகார ஆட்சி முடிவுக்கு வந்து குடியாட்சிக்கு மாறியதன் விளைவாக 1978 ஆம் ஆண்டு ஸ்பெயின் அரசியல் சட்டம் இயற்றப்பட்டு,17 தன்னாட்சி சமூகங்களையும்,இரண்டு தன்னாட்சி நகரங்களையும் உருவாக்கி,ஸ்பெயின் அரசு மதம் என்று எதுவும் கிடையாது என்று அறிவித்தது. இதனடிப்படையில் கட்டலோன் மீண்டும் தன்னாட்சி அதிகாரத்தை பெற்றது. தனக்கென தனியான பாராளுமன்றத்தை பெற்று, 1980 இல் நடைபெற்ற தேர்தலில் 135 பேர் கொண்ட நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது. இந்த தன்னாட்சி அதிகாரத்தின்படி காவல்துறை ,கல்வி, சுகாதாரம் மற்றும் பொதுநலன் ஆகியவற்றை கட்டலோனிய தன்னாட்சி பெற்றது. தனக்கென கொடி,தனி தேசிய கீதம்,தனி முத்திரைகளோடு இயங்கி வருகிறது.
(தொடரும்)

கருத்துகள் இல்லை: