புதன், 8 நவம்பர், 2017

8-11- 2016 மக்கள் தெருவுக்கு துரத்தப்பட்ட நாள் ,... இன்றும் மறைக்கப்படும் பேரழிவு!

தொட்டுவிடும் தூரத்தில் வல்லரசு பூத்திருக்க கட்டியிருந்த கோவணத்தையும் களவாடிய நாள் இன்று 8-11-2016
மின்னம்பலம் :"சிறப்புக் கட்டுரை: துயர நாள் கொண்டாடும் பணமதிப்பழிப்பு!" பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொண்டு ஓராண்டு நிறைவுபெற்று இன்று இரண்டாமாண்டு தொடங்கியுள்ளது. ஓராண்டு நிறைவடைந்த போதிலும் இந்த நடவடிக்கை மேற்கொண்டதற்கான இலக்கு நிறைவேறியதா? இல்லை, என்பதே பதில். பின்னர் எதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது, அதனால் மக்கள் ஏன் துன்புற்றனர் போன்ற பல்வேறு கேள்விகள் நம்மிடையே மீதமுள்ளன.
பணமதிப்பழிப்பு என்றால் என்ன என்பதைச் சற்று அசை போடலாம். 2016ஆம் ஆண்டின் இதே நாள் நள்ளிரவில் இந்தியாவின் பெருமைக்குரிய பிரதமர் நரேந்திர மோடி தனது உரையைத் தொடங்கும்போது இதன் மாபெரும்
விளைவை மக்கள் எவரும் உணர்ந்திருக்கவில்லை. இன்று உங்களது உயிர் பறிக்கப்படுகிறது என்று கூறுவதைப் போலத் திடீரென வெளியாகியது அந்த அறிவிப்பு. நாட்டில் கள்ள நோட்டுகளும், கணக்கில் வராத கறுப்புப் பணமும் புரண்டோடுவதாகவும், அதை ஒழித்துக்கட்டுவதாகவும் சபதமேற்ற மோடி தனது உரையில் நோட்டுகளை ஒழித்துக்கட்டுவதாக அறிவித்தார். உயர் மதிப்பு நோட்டுகள்தான் கள்ள நோட்டு மற்றும் கறுப்புப் பணத்துக்கு
ஆதாரமாக இருப்பதாகக் கூறி, ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் அன்று முதல் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நோட்டுகளை வைத்திருப்பவர்கள் அவற்றை வங்கிகளில் செலுத்திவிட்டு அவற்றுக்கு மாற்றாக 100 ரூபாய் நோட்டுகளையோ 50 ரூபாய் நோட்டுகளையோ ஈடாகப் பெற்றுக்கொள்ளலாம் என்று மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் அறிவித்தன. அதிகத் தொகையை டெபாசிட் செய்பவர்களுக்கு அவற்றுக்கு ஈடாகக் குறைந்த மதிப்பு நோட்டுகளை எவ்வாறு வழங்க இயலும்? 120 கோடிக்கு மேல் மக்கள்தொகையையும் குறைந்த அளவு ரூ.100 மற்றும் ரூ.50 போன்ற குறைந்த மதிப்பு கொண்ட நோட்டுகளையும் கொண்ட இந்நாட்டில் அது சாத்தியமாகுமா? எனவே அவசர கதியாக, புதிய வடிவம் கொண்ட வண்ணமயமான ரூ.2,000 நோட்டுகள் அச்சிடப்பட்டு வங்கிகள் மூலமாக மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. இந்த நோட்டுகளில் பாதுகாப்பு சிப்புகள் இருப்பதாக வதந்திகள் பரவியது வேறு கதை!

மக்களை வாட்டி வதைத்த அறிவிப்பு:
நவம்பர் 8ஆம் தேதி நள்ளிரவு இந்த அறிவிப்பு வெளியானதே தெரியாமல் மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட நோட்டுகளை வைத்துக்கொண்டு தங்களது அன்றாடப் பணியில் ஈடுபட்டவர்களும் உண்டு. மிகவும் பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பலர் இந்த அறிவிப்பின் நோக்கமும் அதற்கான காரணமும் தெரிவதற்கு முன்னரே அதன் கொடிய விளைவுகளை அனுபவிக்கத் தொடங்கினர். வெறும் 100 ரூபாய் நோட்டை மட்டுமே வைத்துக்கொண்டு தங்களது அன்றாடத் தேவைகளை எவரால் பூர்த்தி செய்ய இயலும்?
அறிவிப்பு வெளியான அடுத்த நாளில் வங்கிகள் செயல்படவில்லை. இந்தப் புதிய நடைமுறைக்கு வங்கிகள் மாறுவதாகவும், ஏடிஎம்களில் நோட்டுகளை மாற்றியமைக்க வேண்டும் என்பதற்காகவும் அன்று வங்கிகள் இயங்கவில்லை. அன்றைய ஒருநாள் பாமர மக்கள் நரகத்தையே பார்த்திருக்கக்கூடும். உண்ண உணவு வாங்க இயலாமல் தவித்தவர்களும் உண்டு. பேருந்துக் கட்டணம் உள்ளிட்ட சிறு தேவைகளுக்குக்கூட சில்லறைகளுக்கான சேமிப்பு உண்டியலை உடைக்கும் நிலை உருவானது. புதிய ரூ.2,000 நோட்டுகளும் அதைத் தொடர்ந்து புதிய ரூ.500 நோட்டுகளும் அச்சிடப்பட்டு அவை மக்கள் அனைவரிடமும் வந்து சேரவே நாள்கள் பல ஆயின.
நவம்பர் 10ஆம் தேதி முதல் மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பழைய நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி, மோடியின் கறுப்புப் பண ஒழிப்புக் கனவுக்கு மக்கள் தங்களது பங்களிப்பை வழங்கத் தொடங்கினர். சில இடங்களில் சில உயிர்களும் தியாகம் செய்யப்பட்டன. வங்கிகளில் குவிந்த மாபெரும் வரிசைகளில் நெருக்கடியில் சிக்கி உயிரிழந்தவர்களின் பங்களிப்புதான் அது. இழந்த உயிர்களைக் கணக்கெடுத்து வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களும் எதிர்க்கட்சிகளால் மோடிக்கு எதிராக இன்னமும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
பணமதிப்பழிப்பு அறிவிப்பு வெளியானபோதே டிசம்பர் மாதம் 30ஆம் தேதிக்குள் மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்துவிட வேண்டும் எனவும், அதற்குப் பின்னரும் இந்த நோட்டுகளைக் கைகளில் வைத்திருந்தால் அபராதம் உள்ளிட்ட தண்டனைகள் விதிக்கப்படும் எனவும் மக்களின் நலனுக்காகவே இந்த ஜனநாயக நாட்டில் ஆட்சிபுரியும் மதிப்புக்குரிய மோடி அரசு அறிவித்தது. இதனால் வேறு வழியின்றி வேலைக்குச் செல்லாமல் காலையில் புறப்பட்டு வங்கிகளுக்குச் சென்று டெபாசிட் செய்தோ செய்யாமலோ மாலையில் வீடு திரும்பியவர்கள் ஏராளம்.
இவ்வளவு துன்பங்களை மக்கள் அனுபவித்தாலும் அரசின் இலக்கில் தங்களது பங்களிப்பை வழங்கவும், இந்தியா மிகப் பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுப்பதைப் பார்க்கவும், கறுப்புப் பணமே இல்லை என்ற நிலை உருவாகவும் அவர்கள் இத்துன்பங்கள் அனைத்தையும் அரவணைத்தனர். ஆனால், டிசம்பர் மாதம் நிறைவடைந்த பிறகு, கறுப்புப் பணத்தை அரசு ஒழித்ததா, எவ்வளவு கறுப்புப் பணம் கைப்பற்றப்பட்டது, கள்ள நோட்டுகள் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டனவா, எவ்வளவு கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன என்பன போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கான பதிலை அடைவதற்கு மக்கள் ஆர்வமாகவே இருந்தனர்; இன்னமும் இருக்கின்றனர்.
இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் மிகவும் ரகசியமானவை போலும். மக்களுக்கு அந்த ரகசியத்தை வெளியிடாமலேயே பேச்சுத் திறமை மிக்க மோடியும் அவரது அரசும் மவுனம் காத்துவருகிறது. வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட நோட்டுகளை ஒரு வருடம் ஆகியும் இன்னமும் எண்ணிக்கொண்டிருக்கும் ரிசர்வ் வங்கியின் நிலை மிகவும் வருந்தத்தக்கது.

மறைக்கப்படும் பேரழிவு:
நல்ல நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்கு இன்றைய நாளில் நமது அரசு மிகப் பெரிய கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்திருக்க வேண்டாமா? ஆனால், இந்த நாளைத் துக்க தினமாக அனுசரிக்க எதிர்க்கட்சிகள் முடிவுசெய்துள்ளது மிகவும் வருந்தத்தக்கதல்லவா? இது நாட்டின் மீது அக்கறையற்ற செயலல்லவா?
இந்த நாளைக் கொண்டாடாமல் பணமதிப்பழிப்பு என்ற வார்த்தையையே மத்திய அரசு மறந்துவிட்டது; மறைத்தும்விட்டது. 2016 நவம்பர் 8ஆம் தேதிக்குப் பிறகு ஒவ்வொரு மேடையிலும் மோடி பணமதிப்பழிப்பு என்ற வார்த்தையை மூச்சுக்கு ஒருமுறை சொன்னதை மேடையைச் சூழ்ந்திருந்தவர்களும் நாட்டு மக்களும் கேட்டிருப்பர். ஆனால் இன்றோ, இந்த வார்த்தை இதுபோன்ற கட்டுரைகளில் மட்டுமே வெளிவருவதைக் காண முடிகிறது. ஒன்றை மறைக்க இன்னொன்று என்பதுபோல, பணமதிப்பழிப்பின் கொடிய விளைவுகள் ஜி.எஸ்.டி. வந்த பிறகு மறைக்கப்பட்டது.
அப்படியானால், ஜி.எஸ்.டியின் கொடிய விளைவுகளும் விரைவில் வேறொரு திட்டத்தில் மறைக்கப்பட்டுவிடுமா?
கறுப்புப் பணத்தை ஒழிக்கவும், பதுக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வரவுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய அரசு கூறியது. இதை பாஜகவினரும் பெரும் மகிழ்ச்சியோடும் பெருமையோடும் கொண்டாடி மகிழ்ந்தனர். ஆனால், கறுப்புப் பணம் ஒழிக்கப்பட்டதா?
கறுப்புப் பணம் என்பது வீட்டுக் கொல்லைப்புறத்தில் மூட்டைகளில் பதுக்கப்படுவது அல்ல. உலகளவில் இருக்கும் வரிப்புகலிடங்களுக்குக் கறுப்புப் பணம் இடம் மாற்றப்பட்டு அங்கு முதலீடு செய்யப்பட்டிருக்கும். உள்நாட்டுப் பணத்தின் மதிப்பை நீக்குவதன் மூலம் கறுப்புப் பணத்தை ஒழிக்கும் திட்டமெல்லாம் மோடி போன்ற பொருளாதார வல்லுநர்களுக்கு மட்டுமே விளங்கக்கூடிய சிறப்புப் பெற்றவை.
இந்தியாவில் இருக்கும் கறுப்புப் பணம் ஒழிக்கப்பட்டதா? இந்தியாவில் இருக்கும் கறுப்புப் பணத்தின் அளவு மிகவும் சொற்பம். கறுப்புப் பணம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு அங்கு முதலீடு செய்யப்படும் அல்லது சில தில்லுமுல்லு வேலைகளால் இந்தியாவுக்கு வெள்ளையாக்கப்பட்டுக் கொண்டுவரப்படும். 500, 1000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு நீக்கப்படுவதால் வெளிநாடுகளில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் ஒழிந்துவிடுமா? அல்லது உள்நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட வெள்ளைப் பணம் தான் ஒழிக்கப்படுமா? அதற்கு நம் பொருளாதார அறிஞர் மோடிதான் பதிலளிக்க வேண்டும்.
அப்போது மோடி அரசின் பணமதிப்பழிப்பு நடவடிக்கை யாருக்கானது? இதன் பயன் என்ன? கறுப்புப் பணம் ஒழிக்கப்படாதென்றால் பிறகு யார் பயனுற இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது? இந்தியாவுக்கே உரித்தான் குள்ள முதலாளித்துவத்தின் விளைவுதான் இந்த நடவடிக்கை. பெரும் செல்வந்தர்களும், பணம் படைத்தவர்களும் அவர்களின் பணத்துடன் விளையாடவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.<>செந்தில் குமரன்
(இக்கட்டுரையின் தொடர்ச்சியை அடுத்த அப்டேட்டில் காணலாம்)

கருத்துகள் இல்லை: