சனி, 11 நவம்பர், 2017

திமுக அதிமுக வாக்குகள் கமலுக்கும் ரஜினிக்குமாம் ..அப்ப சீமான்?

Veera Kumar- Oneindia Tamil : சென்னை: அதிமுக வாக்குகளை ரஜினியும், திமுக வாக்கு வங்கியை கமலும் சூறையாடும் திட்டத்தோடு இருவரும் அரசியலில் களமிறங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வருங்காலத்தில் அரசியலில் ரஜினி vs கமல் என்ற சூழ்நிலையை உருவாக்க இருவருமே முடிவு செய்துவிட்டதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. கமல் தான் கட்சி துவங்க உள்ளதாக வெளிப்படையாக அறிவித்துவிட்டார். ஜனவரிக்கு பிறகு முழு வீச்சில் அரசியலில் அவர் இறங்குவார் என தெரிகிறது. கமல் அடிமட்ட அளவில் அரசியல் ஆயத்த வேலைகளை ஆரம்பித்துவிட்டார். மக்கள் பிரச்சினைகளை கேட்பது, மக்களின் பிரச்சினைகளை அறிவதற்காக ஆப் தொடங்குவது என்று அவர் அடிப்படையை பலமாக மாற்றிக்கொண்டுள்ளார். மேலும், பினராயி விஜயன், கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி என பாஜக இந்துத்துவா குறித்து கடும் கண்டனத்தை அவர் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். இந்து தீவிரவாதிகளும் உருவாகியுள்ளதாக கமல் தெரிவித்த கருத்து அவரை இடதுசாரி ஆதரவாளராக மக்களிடம் முன்னிருத்தியுள்ளது.

மேலும் திராவிடம் என்பது தொடர்ந்து நீடிக்கும் கருத்தாக்கம் என கமல் கூறியுள்ளார். இந்த கருத்துக்கள் அனைத்துமே, திமுகவின் அடிப்படை கொள்கைகளோடு தொடர்புள்ளது. கருணாநிதி உடல்நலக்குறைவால் தீவிர அரசியலில் ஈடுபடவில்லை. இந்த நிலையில் திமுக வாக்கு வங்கியை தனது பக்கம் திருப்ப கமலின் இந்த கருத்துக்கள் பெரிதாக உதவியுள்ளன.


இதை சமூக வலைத்தளங்களிலும் பார்க்க முடிகிறது. திமுக அனுதாபிகளாக அறியப்படுபவர்கள் கமலுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதேபோல ரஜினி வரும் டிச. 12ம் தேதி தனது பிறந்த நாளன்று புதுக்கட்சி துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது நோக்கம் அதிமுக வாக்குகளை ஈர்ப்பது. ஏனெனில் அதிமுக கட்சி தலைமைகள் தொடர்ந்து திரை ஆளுமைகளாலே ஆளப்பட்டுள்ளது. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா இருவருமே அவர்களின் தோற்றத்திற்காகவே மக்களை ஈர்த்தனர்.

குறிப்பிட்டு சொல்லும் எந்த ஒரு கொள்கையும் அக்கட்சிக்கு கிடையாது. ஆனால் இப்போது திரை பிம்பம் இல்லாமல் அதிமுக தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர். எனவே, ரஜினி போன்ற ஒரு ஈர்ப்பு கொண்ட நடிகருக்கு அதிமுகவுக்கு வாக்களிக்கும் பாமர வாக்கு வங்கி அப்படியே நகரும் வாய்ப்புள்ளது.

ரஜினியும் ஜெயலலிதாவை போலவே ஆன்மீக நம்பிக்கை கொண்டவர். அதைவிட அதிகம் என்றும் கூறலாம். திமுகவின் கடவுள் மறுப்பு கொள்கை பிடிக்காத வாக்கு வங்கியும் அதிமுகவுக்கு உள்ளது. இந்த வாக்கு வங்கியையும் ரஜினி ஈர்க்கலாம். ஆக, கமல் மற்றும் ரஜினி ஆகிய இரு துருவ அரசியலை நோக்கி தமிழக அரசியல் நகரும் வாய்ப்புள்ளது.

கருத்துகள் இல்லை: