புதன், 8 நவம்பர், 2017

திருச்சி - சீதனம் பெண் அடித்துக் கொல்லப்பட்டதாக புகார், கணவர் கைது

பாலிமார் :திருச்சியில் வரதட்சனை கொடுமையால் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் புகாரில் கணவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருச்சி தில்லை நகர் 11 வது குறுக்குச் சாலையில் வசித்து வந்த கணபதி – ஜனனி தம்பதியருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகனும், ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். கணபதியின் குடும்பத்தினர் திருமணத்தின்போது 200 சவரன் நகை கேட்டதாகவும் ஆனால் ஜனனியின் குடும்பத்தினர் 60 சவரன் நகையும் 5 லட்ச ரூபாய்க்கு வீட்டு உபயோகப் பொருட்களும் கொடுத்து திருமணம் செய்துவைத்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதனால் கணபதி குடும்பத்தினர் ஜனனியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளனர் என்பது புகார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜனனியை மயங்கிய நிலையில் திருச்சியிலுள்ள காவேரி மருத்துவமனைக்கு கணபதி குடும்பத்தினர் கொண்டுவந்துள்ளனர். ஜனனியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகவும் பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும்படியும் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் கணபதி தனது மனைவி ஜனனியின் உடலை அரியலூர் மாவட்டத்திலுள்ள தனது சொந்த ஊருக்கு கொண்டுசென்று எரிக்க திட்டமிட்டுள்ளார்.
கணபதியின் நடவடிக்கையில் சந்தேகமுற்ற காவேரி மருத்துவமனை நிர்வாகத்தினர், திருச்சி தில்லை நகர் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து காவல்துறையினர் விரட்டிச் சென்றதால், கணபதி, காரை வழியிலேயே நிறுத்திவிட்டு தப்பியோடியுள்ளார். ஜனனியின் சடலத்தை கைப்பற்றி காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில், தனது மகள் ஜனனியை வரதட்சனை கேட்டு கொலை செய்துவிட்டதாக பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தலைமறைவாக இருந்த கணபதியை காவல்துறையினர் கைது செய்தனர். கணபதி மீது வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்துதல் உள்ளிட்ட பிரிவில் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். ஜனனி தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

கருத்துகள் இல்லை: