புதன், 1 மார்ச், 2017

கோபிநாத்: எந்த கொம்பனையும் தொடவிடமாட்டேன்..! நெடுவாசல் என் சொந்த மண்..!


தங்களுடைய அதீத ஒற்றுமையின் மூலம் வாடிவாசலைத் திறந்து, ஜல்லிக்கட்டை நடத்திக்காட்டிய இளைஞர்கள்,
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
நெடுவாசலுக்கே சென்று போராட்டத்துக்கு ஆதரவளித்துத் திரும்பியுள்ள ‘நீயா நானா‘ கோபிநாத் வார இதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
நெடுவாசலில் இருந்து வெறும் நான்கு கி.மீ தூரத்தில் இருக்கும் சித்துக்காடுதான் என்னுடைய பூர்வீகம்.
பிறந்து வளர்ந்தது எல்லாம் நெடுவாசலில் இருந்து 20 கி.மீ தூரத்தில் இருக்கும் அறந்தாங்கி. ஒரு பிரபலம் என்பதை எல்லாம் கடந்து, இது என் ஊரின், என் மண்ணின் பிரச்னை. அதனாலே அங்கு சென்று போராட்டக்குழுவினருக்கு ஆதரவளித்துப் பேசிவிட்டு வந்தேன்.
ஆரம்பத்தில் இங்கு இடம் எடுத்தபோது மண்ணெண்ணெய் எடுக்க என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். அன்று இதுகுறித்து பெரிய விழிப்பு உணர்வு இல்லை, மண்ணெண்ணெய்தானே என அஜாக்கிரதையாக இருந்துவிட்டனர்.

பின்னர் தற்போது இதன்கேடு பற்றி அறியவரவும் மக்கள் எதிர்க்கத் தொடங்கியுள்ளனர். இந்தக் கேட்டினை வேறு யாரோ அந்நிய சக்திகள் வந்து சொல்லி, போராட்டத்தைத் தூண்டிவிடவில்லை.
பொதுவாகவே புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமானோர் வெளிநாட்டில் வேலை செய்கின்றனர்.
குறிப்பாக இதேபோன்ற பெட்ரோ கெமிக்கல் ஆலைகளிலும், எண்ணெய்க்கிணறுகளிலும் வேலை பார்க்கிறார்கள்.
எனவே இந்தத் திட்டத்தின் அனைத்துத் தீமைகளையும், இதன்மூலம் எதிர்காலத்தில் நடக்கப்போகும் எதிர்வினைகளையும் அவர்கள் அறிந்துள்ளனர்.
அவர்கள் எடுத்துச் சொல்லியதன் மூலம் இந்தத் திட்டத்துக்குப் பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இத்தனை நாளாக எடுத்த கழிவுகளே மக்காமல் அப்படியே கிடக்கிறது. இன்னும் இந்தத் திட்டம்,
எத்தகைய கழிவுகளை வெளியேற்றி மண்ணை நாசம் செய்யப்போகிறது என அதைப்பார்த்தாலே தெரியும். பாதுகாப்பு செயல்பாடுகள் எதுவுமே இருப்பதாகத் தெரியவில்லை.
தமிழகத்தின் நெற்களஞ்சியம் இங்கிருந்துதான் தொடங்குகிறது. நெற்களஞ்சிய தென் திசையின் துவக்கமாக உள்ள ஊர் இது.
புதுக்கோட்டையின் ஒரு பகுதி மிக வறண்ட பகுதி. அதை முன்னேற்ற உருப்படியான தொழிற்சாலைகளை ஏற்படுத்தலாம்.
அதை விட்டுவிட்டு இருக்கும் வளமான பகுதியை அழிக்கும் நோக்கில் திட்டங்களைக் கொண்டுவருகிறார்கள்’’ என்று படபடத்தவரிடம்
நெடுவாசல் பற்றி கேட்டபோது அவா் கூறியதாவது. “மிக மிக உறுதியாக இருக்கிறார்கள். ‘இங்கு மண்ணெண்ணெய்தான் எடுக்கப்போகிறோம். போர் போட்டு தண்ணீர் எடுப்பதுபோல்தான். இதன் மூலம் அரசு வேலைவாய்ப்புகள் உருவாகும்.
உங்கள் பிள்ளைகள் எல்லோருக்கும் வேலை கிடைக்கும்’ என அன்று உறுதியளித்ததால்தான் ஒப்புக்கொண்டோம் எனத் தெரிவிக்கிறார்கள்.
தங்கள் பிள்ளைகள் மூலம் நடக்கப்போகும் விபரீதம் குறித்து அறிந்துகொண்டு தற்போது எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
‘அவர்களுக்கு ஹைட்ரோ கார்பன் என்றால் என்ன? மீத்தேன் என்றால் என்ன? புரப்பைன் என்றால் என்ன என்கிற டெக்னாலஜியெல்லாம் தெரியவில்லை. அதனால்தான் எதிர்க்கிறார்கள்’ என்று சொல்லுகிறார்கள்.
உண்மையில் அது எல்லாமே ஒன்றுதான். எல்லாவற்றையும் விட அந்த மக்களுக்கு விவசாயம் நன்றாகவே தெரியும்.
உங்களுக்கு அறிவியல் தெரிந்ததைவிட, அவர்களுக்கு விவசாயம் நன்றாகவே தெரியும்.
இந்தத் திட்டம் தங்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் எனத் தெரிந்ததால் எதிர்க்கக் கிளம்பிவிட்டனர்.
இனி இதைத் தடுக்கமுடியாது. மாணவர்களும் இதைக் கையில் எடுத்துவிட்டனர்” என்றார்.
இந்தப் போராட்டத்தின் போக்கு எப்படி இருக்கும்’ என்று கேட்டபோது
‘‘மாணவர்களும் இளைஞர்களும் அதிகளவில் வரத் தொடங்கிவிட்டனர். இது ஒட்டுமொத்த சமூகப் போராட்டமாகத்தான் மாறும் என்று தெரிகிறது.
ஆனால் இது வெறும் நெடுவாசலுக்கான போராட்டம் மட்டும் அல்ல. எப்படி அலங்காநல்லூருக்கு மட்டுமான போராட்டமாக ஜல்லிக்கட்டு போராட்டம் இருக்கவில்லையோ,
அதேபோல் இந்த ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புப் போராட்டம் வெறும் நெடுவாசல் என்கிற கிராமத்துக்கான போராட்டமாக இருக்கப்போவதில்லை.
எங்கோ சென்னையில் இருக்கும் என் போன்றவர்களை இழுத்த மண், இன்னும் இன்னும் எங்கெல்லாம் அதற்கு ஊறு விளைகிறதோ அந்த மண்ணைச் சேர்ந்தவர்களையும் இழுக்கும்.
எனவே இது நெடுவாசலுக்கு மட்டுமான போராட்டம் இல்லை” என்று கா்ஜித்து முடித்தார்.
நன்றி : விகடன்

கருத்துகள் இல்லை: