திங்கள், 27 பிப்ரவரி, 2017

நெடுவாசல் ... ஜல்லிகட்டு போராட்டத்தை விட வலிமையான போராட்டம் வெடிக்கப்போகிறது?


மின்னம்பலம் :மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான நெடுவாசல் மக்களின் போராட்டம் இளைஞர்களின் போராட்டமாக உருமாறியிருக்கிறது. நெடுவாசல் கிராம மக்கள் ஒரு நாள் அடையான உண்ணா விரத போராட்டத்தை நேற்று மேற்கொண்டனர். தமிழகம் முழுவதும் இருந்து திரண்டு நெடுவாசல் கிராமத்திற்கு வருகை தந்த 3000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். இவர்கள் யாவரும் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கல்லூரி மாணவர்கள், ஐடி நிறுவனங்களில் பணிபுரிவோர், வியாபாரம் செய்வோர், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் என பலரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக மோட்டார் சைக்கிளில் பேரணியாக எட்டு பேர் கொண்ட குழு ஒன்று திருச்சியிலிருந்து புறப்பட்டு நெடுவாசலைநோக்கி வந்துள்ளது. இதையறிந்த காவல் துறையினர் திருச்சி விமான நிலையத்தின் அருகே வழிமறித்து அவர்களின் மோட்டர் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த மாணவர்கள் எட்டு பேரையும் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். அந்த இளைஞர்கள் மீது பெயிலில் வெளியில் வர முடியாத பிரிவுகளில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். அந்த இளைஞர்கள் திருச்சி சிறை கைதிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து திருச்சி சிறையில் உள்ள 150 கைதிகளும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இந்த தகவல் நெடுவாசல் போராட்டக்காரர்களுக்குத் தெரிய வந்தது. உடனே அந்த எட்டு இளைஞர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பி போராடத்தொடங்கினர். நேரம் செல்லச் செல்ல போராட்ட களம் சூடுபிடிக்கத் தொடங்கியது. திரைப்பட இயக்குநர்கள் தங்கர்பச்சான் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் நெடுவாசலுக்கு வந்து போராட்டத்தில் பங்கேற்றனர். இருவரும் அனல் பறக்கும் வகையில் உரைவீச்சு நிகழ்த்தி தங்கள் ஆதரவை நெடுவாசல் மக்களுக்குத் தெரிவித்தனர். இதே போல் நெடுவாசல் கிராமத்தில் பிறந்து வளர்ந்த திரைப்பட பின்னணிப் பாடகர் செந்தில்தாஸும் தன் தாய் மண்ணுக்காகப் போராட நெடுவாசல் கிராமத்திற்கு வந்திருந்தார். அவர் தாய் மண்ணைக் காக்கவும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்க்கும் விதத்திலும் ஒரு பாடலை இயற்றி பாடி தாய் மண்ணுக்கு சமர்பித்தார். அதை போராட்ட களத்தில் செந்தில்தாஸ் பாட, உணர்ச்சி கொந்தளிப்பில் ஆர்ப்பரித்தது மக்கள் வெள்ளம். நாளுக்கு நாள் தீவிரமடையும் நெடுவாசல் போராட்டம் இந்தியாவை மீண்டும் தமிழகத்தை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

கருத்துகள் இல்லை: