புதன், 1 மார்ச், 2017

நெடுவாசல் – நீதிமன்றத்துக்குப் போகாதே ! எச்சரிக்கை !

கூடங்குளம் நமக்கு ஒரு பாடம். அணு உலை நிறுவுவது என்பது அரசின் கொள்கை முடிவு. அதனை உச்சநீதிமன்றம் தடுக்கவில்லை. கெயில் வழக்கில் நீதி கேட்டு உச்ச நீதி மன்றத்துக்கு சென்ற விவசாயிகளுக்கும் இதே கதி தான் நேர்ந்தது.
எங்கள் நிலம், எங்கள் உரிமை!” “.யாரும் நீதிமன்றத்துக்குப் போகாதீர்கள்! மக்கள் மன்றத்தில் முடிவு செய்வோம்!” என்று போராடும் நெடுவாசல் வட்டார மக்கள் ஒரு அறிவிப்பு கொடுக்க வேண்டும். போராட்டத்தை காப்பாற்றுவதற்கும், நிலத்தைக் காப்பாற்றுவதற்கும் இது அவசியம். அவசரம்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் விரைவில் பொதுநல வழக்கு தொடரவிருப்பதாக, “என் தேசம் என் உரிமை” என்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எபினேசர் என்பவர் கூறியிருப்பதாக இன்றைய தமிழ் தி இந்து நாளேட்டில் செய்தி வெளிவந்திருக்கிறது.  வழக்கு தொடுப்பதன் விபரீத விளைவு தெரிந்துதான் இந்த இளைஞர்கள் செய்கிறார்களா தெரியவில்லை. வழக்கு தொடுப்பது என்பது நெடுவாசல் மக்களின் போராட்டத்தை தோற்கடிப்பதற்கு மட்டுமே பயன்படும் என்பதில் எள்ளளவும் ஐயம் வேண்டாம்.

கூடங்குளம் அணு உலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு நமக்கு ஒரு பாடம். அணு உலை நிறுவுவது என்பது அரசின் கொள்கை முடிவு. எத்தனை அறிவியல் ஆதாரங்களை அடுக்கினாலும் அதனை நீதிமன்றம் தடுத்திருக்காது. இருப்பினும், ஒரு அணு உலை நிறுவும்போது பின்பற்றப்பட வேண்டிய முறைகள் எதையும் கூடங்குளத்தில் அரசு பின்பற்றவில்லை என்பதால், அவற்றையெல்லாம் எடுத்துக் காட்டி, இவற்றின் காரணமாக மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை சொன்னால், உச்ச நீதிமன்றம் தடை விதிக்கக் கூடும் என்று நம்பி உச்ச  நீதிமன்றத்தில் மனுச்செய்யப்பட்டது.

உச்ச நீதிமன்றமும் அரசாங்கத்தை கடுமையாக கண்டிப்பதைப் போல பாசாங்கு செய்தது. இதைப் பார்த்து நீதி கிடைத்துவிடும் என்று மக்கள் பலர் நம்பினார்கள். முடிவில் அணு உலைக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி மக்களின் முதுகில் குத்தியது உச்ச நீதிமன்றம்.


கூடங்குளம், கெயில் அல்லது மீதேன் போன்ற திட்டங்கள் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் என்று தெரிந்துதான் மத்திய மாநில அரசுகள் இவற்றைக் கொண்டு வருகின்றன. கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளைதான் மத்திய மாநில அரசுகளின் கொள்கையாக இருக்கிறது. இதைத்தான் முன்னேற்றம் என்று எல்லா கட்சிகளும் பேசுகின்றன. மக்களின் விருப்பத்துக்கு விரோதமாக நிலத்தைக் கைப்பற்ற அரசுக்கு அதிகாரம் தரும் வகையில்தான் சட்டங்கள் உள்ளன.
நீதிமன்றம் என்பது ஏற்கெனவே என்ன சட்டம் உள்ளதோ அந்த சட்டத்தின் அடிப்படையில்தான் தீர்ப்பு வழங்கும். காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட விலங்கு என்று மத்திய அரசின் சட்டம் சொன்னதன் அடிப்படையில்தான் ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. அதனால்தான் சட்டத்தை மாற்று என்று நாம் போராடினோம்.
தற்போது அமலில் இருக்கும் சட்டங்களின் கீழ், ஹைட்ரோ கார்பன் திட்டத்தையோ, மீதேன் திட்டத்தையோ தடுக்க முடியாது. அரிச்சந்திரனே நீதிபதியாக இருந்தாலும், மேற்கூறிய சட்டங்களின் கீழ் நமக்கு நீதி கிடைக்காது. இந்த நாசகர திட்டத்துக்கு நீதிமன்றம் அனுமதி வழங்குவது தான் நடக்கும்.
“நிலத்தடி நீர் குறையக்கூடாது, கழிவு நீர் தேங்க கூடாது, சுற்றுச் சூழல் மாசுபடக்கூடாது” என்று ரொம்பவும் கண்டிப்பாக பேசுவது போல உதார் விட்டு, திட்டத்துக்கு அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கும். அதற்குப் பிறகு பாஜக அல்லது அதிமுக அரசுகள் என்ன செய்யும்? நீதிமன்றமே சொல்லி விட்டது. நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்படுகிறீர்களா அல்லது போலீசை அனுப்பவா என்று மக்களை மிரட்டும்.
எனவே, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் மனு போடுவது என்பது, கூரைக்கு கொள்ளி வைக்கும் வேலை. இதனை தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் விளைவு ஒன்றுதான்.
நெடுவாசல் மக்களே, போராட்டத்தை ஆதரிக்கும் தமிழக மக்களே, மாணவர்களே, எச்சரிக்கை!
சிலர் அறியாமையின்  காரணமாக நீதிமன்றம் போகலாம், சிலர் விளம்பரம் தேடுவதற்காக நீதிமன்றம் போகலாம், இந்த திட்டத்தை திணிக்கும் நோக்கத்துடன் பாஜக வினரே ஒரு ஆளை செட் அப் செய்தும் நீதிமன்றத்துக்குப் போகலாம். நீதிமன்றத்தில் வழக்கு போடுபவன் அசடா, அயோக்கியனா என்று நாம் கண்டு பிடிப்பது கடினம். அந்த ஆராய்ச்சி நமக்குத் தேவையில்லை. இப்போதுதான் ஜல்லிக்கட்டு கோரிக்கைக்காக தமிழகம் போராடி வெற்றி கண்டிருக்கிறது. நீதிமன்றத்தில் நீதி கிடைக்காமல்தான் மக்கள் மன்றத்தில் போராடி நாம் வெற்றி பெற்றோம். அவ்வாறிருக்கையில் யாரும் இப்படியொரு தவறான முடிவை எடுக்க கூடாது என்பதை வலியுறுத்துகிறோம். “என் தேசம் என் உரிமை” என்ற கட்சியினர் இந்த முடிவைக் கைவிடுவதாக உடனே அறிவிக்க வேண்டும்.
“எங்கள் நிலம், எங்கள் உரிமை!” “.யாரும் நீதிமன்றத்துக்குப் போகாதீர்கள்! மக்கள் மன்றத்தில் முடிவு செய்வோம்!” என்று போராடும் நெடுவாசல் வட்டார மக்கள் ஒரு அறிவிப்பு கொடுக்க வேண்டும். போராட்டத்தை காப்பாற்றுவதற்கும், நிலத்தைக் காப்பாற்றுவதற்கும் இது அவசியம். அவசரம்.
– வினவு
(அவசியம் கருதி நண்பர்கள் இச்செய்தியினை சமூகவலைத்தளங்களில் பரவலாக பகிருமாறும், பரப்புமாறும் கோருகிறோம்)

கருத்துகள் இல்லை: