புதன், 1 மார்ச், 2017

போராட்டத்தில் நக்சலைட் ஊடுருவல் : எச்.ராஜா

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக சில பிரிவினைவாத நக்சலைட்டுகள் ஊடுருவி உள்ளன என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.
பண்டிட் தீனதயாள் உபாத்யாயா நூற்றாண்டு விழா மற்றும் மத்திய பாரதிய ஜனதா அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச். ராஜா பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், "இந்தியா முக்கிய கால கட்டத்தை கடந்து கொண்டிருக்கிறது. அமெரிக்கா உட்பட பல நாடுகளும் இந்தியாவின் வளர்ச்சியை உற்று நோக்குகிறது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு அம்சமும் நமக்கும் கிடைக்க வேண்டுமென்று உலக நாடுகள் எண்ணுகின்றன. இதற்கு ஒரே காரணம் பிரதமர் நரேந்திர மோடியின் சிந்தனைதான். அனைத்து துறைகளிலும் நாட்டை சமமாக முன்னேற்ற வேண்டுமென்பதில் பிரதமர் மோடி உறுதியாக உள்ளார். அதற்கான திட்டங்களை வகுத்து ஆட்சி நடத்துகிறார். தமிழ்நாட்டில் திமுக, அதிமுக-விற்கு மாற்றாக பாரதிய ஜனதா ஆட்சி வர வேண்டும்" என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து பேசிய எச். ராஜா, "அமெரிக்காவில் ஷேல் கியாஸ் எடுப்பதால்தான் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வெகுவாக குறைந்து வருகிறது. நாட்டிலே குஜராத்தில் தான் எண்ணெய் வயல்கள் அதிகம். மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சி செய்த போதுதான் மீத்தேன் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு கம்யூனிஸ்டு எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஜல்லிக்கட்டு பிரச்னை நடந்த போது பிரிவினை சக்திகளும், நக்சலைட்டுகளும் மாணவர்கள், இளைஞர்களிடையே ஊடுருவி உள்ளன என நான்தான் முதலில் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தேன். அதே போல் தற்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்திலும் மத்திய அரசுக்கு எதிராக பிரிவினைவாத, நக்சலைட்டுகள் ஊடுருவி உள்ளன. தமிழகத்தில் முதுகெலும்பு உள்ள ஆட்சி இல்லாததால் தான் இந்த நிலைமை. மக்கள் வேண்டாம் என்று சொன்னால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தாது" என்றார்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: