புதன், 1 மார்ச், 2017

ஆஸ்கர் வெற்றி: பின்னணியில் இந்திய ஹைடெக் நிபுணர்களின் கடும் உழைப்பு!


ஆஸ்கர் விருது விழாவில் விஷுவல் எஃபெக்டுக்கான சிறந்த திரைப்பட விருதை The Jungle Book திரைப்படம் வென்றிருக்கிறது. எத்தனையோ விதமான Jungle Book திரைப்படங்களை ஹாலிவுட்டும், இந்தியாவும் கண்டிருக்கிறது. ஹாலிவுட் - இந்தியா என்று குறிப்பிட்டிருப்பதற்குக் காரணம் ருத்யார்டு கிப்ளிங் எழுதிய The Jungle Book புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கதைப்படி இந்திய வனாந்திரத்தில் விலங்குகளுடன் வசிக்கும் ஒரு சிறுவன் ஷேர் கான் என்கிற புலிக்கு பயந்து அமெரிக்க நகரத்துக்கு செல்வது தான் உண்மை நிகழ்வு.
இந்தக் கதையில் எத்தனையோ வெர்ஷன்கள் வெளிவந்தாலும் இந்தியக் காடுகளிலிருந்து குறிப்புகள் எடுக்காமல் எந்தத் திரைப்படமும் உருவாகியதில்லை.
ருத்யார்டு கிப்ளிங் இந்தக்கதையை எழுதியபோது அவர் எந்தக் காட்டிற்கும் சென்றதில்லை.

உலகம் முழுக்கவுள்ள காடுகளுக்குப் பயணப்பட்ட அவரது ஃபோட்டோகிராபர் நண்பர்களின் வாய்வழியும், புகைப்படத்தின் மூலமும் அறிந்தவற்றை வைத்து ஒரு கற்பனையான காட்டை உருவாக்கி தனது படைப்பை முடித்தார். இதனால் ஆஸ்கர் வென்றது இந்திய அணி என்று சொல்லிவிடவில்லை. The Jungle Book திரைப்படத்தின் விஷுவல் எஃபெக்டுக்கான சரிபாதி வேலைகள் லண்டனை அடிப்படையாகக்கொண்ட Moving Picture Companyயின் இந்தியாவின் பெங்களூரு கிளையில் தான் படமாக்கப்பட்டது. 300 பேர் கொண்ட பெங்களூரு MPC குழு இரவு பகலாக கடந்த இரண்டு வருடங்களை இதற்காக செலவுசெய்திருக்கின்றனர்.

இந்தியக் காடுகளை அடிப்படையாகக்கொண்டு உருவான திரைப்படம் என்பதால், இந்தக்குழுவிலுள்ள ஃபோட்டோகிராஃபர்கள் கிட்டத்தட்ட 10,000 ஃபோட்டோக்களை இந்தியக் காடுகளுக்குள் நுழைந்து எடுத்திருக்கின்றனர். அவற்றை அடிப்படையாக வைத்து இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகளின் இடங்கள் முடிவுசெய்யப்பட்டிருக்கின்றன. 14,000 கிலோமீட்டர்களை இதற்கான வளையத்துக்குள் கொண்டுவந்திருக்கிறார்கள். மிக முக்கியமாக இந்தத் திரைப்படத்தின் காட்சிகளில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு Frame-ம் Render ஆக 18 மணிநேரங்களை எடுத்துக்கொண்டிருக்கிறது.
ஒரு நொடி இடம்பெறும் காட்சியில் 22 Frame(3D என்றால் இது டபுள் மடங்காகும். அதாவது 44 Frameகள்) பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு Frame ரெண்டர் ஆவதற்கு 18 மணிநேரங்களா? என ஆச்சர்யப்படலாம். ஆனால், 18 மணிநேரம் என்பதே குறைவு தான். ஏனென்றால், Live Action அனிமேஷன் கிராஃபிக்ஸுக்காக MPC உருவாக்கியிருக்கும் சாஃப்ட்வேர் மூலம் விலங்குகள் ஃபோட்டோக்களால் உயிர்கொடுக்கப்பட்டு பிறகு அனிமேஷனில் அவற்றின் செயல்கள் வரையப்பட்டிருக்கின்றன. ஒரு Frameல் மட்டும் கிட்டத்தட்ட 70 முதல் 80 சூழ்நிலைகளை ஒன்றாக இணைத்திருக்கிறார்கள்.

உதாரணத்துக்கு மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டிருக்கும் காட்சியில் மோக்லி கிளையைப் பிடித்து தாவுவது தனி Layer. பகீரா எகிறும் காட்சி தனி Layer. கீழே பாலு என்கிற கரடி நீந்திச் செல்வது தனி, நீர் ஓடும் காட்சி தனி, பின்னால் மின்னும் சூரிய ஒளி, இடது புறமிருக்கும் காடு, வலது புறமிருக்கும் பாறைகள், பட்டாம்பூச்சிகள், விலங்குகள், நிழல்கள் என ஒவ்வொன்றும் தனித்தனி Frameல் உருவாக்கப்பட்டு, பிறகு ஒன்றாக Render செய்யப்பட்டிருக்கின்றன. இதற்குத்தான் ஒவ்வொரு Frameம் 18 மணிநேரம் எடுத்துக்கொண்டிருக்கிறது.

இவ்வளவு உழைப்பையும் கொட்டியிருக்கும் MPCயின் பெங்களூரு கிளைக்கு இது முதல் வெற்றி அல்ல. இதற்குமுன்பு இவர்கள் வேலை செய்த Life of Pi திரைப்படத்துக்கும் இதே விஷுவெல் எஃபெக்ட்ஸ் பிரிவில் 2012ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது. சென்ற வருடம் மட்டும் இவர்கள் பணிபுரிந்த The Martian மற்றும் The Revenant ஆகிய திரைப்படங்கள் ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டன இதே விஷுவெல் எஃபெக்ட்ஸ் பிரிவில். ஆனால், சிறந்த பணியின் காரணமாக Ex Machina திரைப்படத்துக்கு வழங்கப்பட்டது. இத்துடன் ஓய்ந்துவிடவில்லை இவர்களது ஆஸ்கர் போட்டி. இந்த வருடம் ரிலீஸாகக் காத்திருக்கும் Pirates of the Caribbean: Dead Men Tell No Tales மற்றும் Aliens:Covenant திரைப்படத்திலும் இவர்களது உழைப்பு இருக்கிறது. இவர்களுக்கும் ஆஸ்கர் வெற்றிக்கு வாழ்த்து சொல்வது சிறந்ததாக இருக்கும். மின்னம்பலம் சார்பாக வாழ்த்துக்கள்.
-சிவா  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: