திங்கள், 27 பிப்ரவரி, 2017

நெடுவாசல் விவசாயிகளின் போராட்டம் ! – மக்கள் அதிகாரம்

நாடு முழுவதற்குமான கார்ப்பரேட் தொழில்களுக்கான மின் உற்பத்திக் குவிமையமாக (Power Cluster) தமிழகத்தை மாற்றும் பெரும் சதித்திட்டத்தின் ஒருபகுதியாக நமது காட்டுவளம், கடல் வளம், நீராதாரம் அனைத்தையும் சூறையாடுகின்றனர். – மக்கள் அதிகாரம்
சென்னை மெரினா, மதுரை அலங்காநல்லூர்-தமுக்கம், கோவை வ.உ.சி. மைதானத்தில் திரண்ட மாணவர்கள், இளைஞர்களின் வீரம் செறிந்த போராட்டம், தமிழர்களின் பண்பாட்டு உரிமையை மீட்பதற்கானது. அப்போதே அதை விவசாயப் பெருமக்களின் வாழ்வுரிமைக்கான எழுச்சியாக வளர்த்தெடுப்பதற்கான முயற்சியை தீவிரவாத சமூகவிரோதிகளின் ஊடுறுவல் என்ற பெயரால் போலீசு காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கி ஒடுக்கியது. ஆனால் அடங்காது, அத்துமீறும். இது வேறு தமிழகம்.
இன்று நெடுவாசலில் இயற்கை எரிவாயுக் கொள்ளை-அழிவுத் திட்டத்திற்கு எதிராக விவசாயிகளும், மாணவர்களும், இளைஞர்களும் கொதித்தெழுந்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஒன்றிணைய முடியாதவாறு, மெரினாவையும், தமுக்கத்தையும், வ.உ.சி மைதானத்தையும் முற்றுகையிட்டு எவ்வாறு தாக்கினரோ, அதே போல நெடுவாசல் கிராமத்தை சுற்றிவளைத்து போலீசும் அதிரடிப்படையும் உளவுப்படையும் குவிக்கப்பட்டுள்ளன.
சாலைகள் அனைத்தும் மறிக்கப்பட்டு தணிக்கை செய்யப்பட்டு போராட்டக்காரர்கள் வேட்டையாடப்படுகிறார்கள். நகரங்கள், கிராமங்கள் என்று பாராது தமிழகத்தின் அனைத்து முக்கியப் புள்ளிகளையும் போராட்டக்களமாக மாற்றுவதன் மூலம் சதிகாரர்களையும் அடக்குமுறை சக்திகளையும் முறியடிக்க முடியும்.
தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மறுத்து, இயற்கையான நீர் நிலைகளை அழித்து, டெல்டா மாவட்டங்களை குடிநீருக்கே அலையும் பாலைவனமாக்கி, இந்திய கார்ப்பரேட் தரகு முதலாளிய ஆளும் வர்க்கங்களின் நலனுக்காக விவசாயப் பெருமக்களை பஞ்சம் பிழைக்கும்படி வெளியேற்றியும், பேரழிவில் தள்ளியது. அதோடு நிற்காது, கீழே தள்ளியதோடு குழியும் பறிக்கும் விதமாக, வளர்ச்சி என்ற பெயரால், மக்களுக்கு பேராபத்து விளைவிக்கும் நாசகரத்திட்டங்களைத் திணிக்கின்றனர். நாடு முழுவதற்குமான கார்ப்பரேட் தொழில்களுக்கான மின் உற்பத்திக் குவிமையமாக (Power Cluster)  தமிழகத்தை மாற்றும் பெரும் சதித்திட்டத்தின் ஒருபகுதியாக நமது காட்டுவளம், கடல் வளம், நீராதாரம் அனைத்தையும் சூறையாடுகின்றனர். இதற்காக கடற்கரை நெடுக அணு உலைகள், அனல் மின் நிலையங்கள் நிறுவப்படுகின்றன. உள் மாவட்டங்களில் சிறு, குறு மின்னுற்பத்தி நிலையங்கள் நிறுவப்படுகின்றன. அவற்றின் கழிவுகள் கொட்டப்பட்டு, நீர், நிலம், காற்று அனைத்தும் நஞ்சாக்கப்படுகிறது. இந்த அழிவுகளையும் ஆபத்துகளையும் எதிர்த்து அண்டைமாநிலங்களில் மறுக்கப்படும் திட்டங்கள் எல்லாம் இங்கு மட்டும் இரகசியமாகவும் நைச்சியமாகவும் மூர்க்கமாகவும் திணிக்கப்படுகின்றன.
ஏற்கெனவே மீத்தேன் ஷேல் கேஸ் போன்ற பெயர்களில் நுழைய முயன்று மக்களின் கடும் எதிர்ப்பை சந்தித்த நிலையில் ஹைட்ரோகார்பன் என்று பெயரை மாற்றிக்கொண்டு நாசகரத்திட்டம் திணிக்கப்படுகிறது. தமிழர்களின் வாழ்வுரிமை பறிப்பு, மற்றும் பேரழிவுத் திட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை தனித்தனியே தன்னெழுச்சியாக நடத்தும் நம் மக்கள், ஆட்சியாளர்களின் துரோகங்களாலும் பிற ஓட்டுக்கட்சிகளின் சமரசங்களாலும்  ஏமாற்றப்படுகின்றனர். ஜல்லிக்கட்டு அனுமதி, மீத்தேன் ஷேல் கேஸ் கிணறுகள் மூடல் போன்ற ஒருசில தனிப்பட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதைப் போல, நெடுவாசல் இயற்கை எரிவாயு திட்டத்திற்கு தற்காலிகப் பின்வாங்குதல், ஆபத்தில்லாமல் திட்டம் என்ற உறுதிமொழி, விவசாயிகளின் பாதிப்பிற்கு நிவாரணம் போன்ற குறுக்குவழிகள் மூலம்  முடிவு கட்ட ஆட்சியாளர்கள் எத்தணிக்கிறார்கள். அமைப்பு சாரா நிறுவனங்களும் ( NGO –க்கள் ), சமரசவாத ஓட்டுக்கட்சிகளும்,  விவசாயிகளின் அடிப்படைப் பிரச்சினைகளையும் மக்கள் போராட்டங்களையும் குறுக்கி சிதைப்பதற்கு முயற்சிக்கின்றனர்.
மக்கள் தங்கள் பாதிப்புகளை எதிர்த்து உறுதியாக போராடினால் சமூகவிரோதிகள், தேசவிரோதிகள் என்று பூச்சாண்டி காட்டுவதும், போலீசே தீ வைப்பது, பின்லேடன் போன்ற பொய்ச்சாட்சியங்களை உருவாக்குவது, தடியடி – கண்ணீர் புகைக்குண்டு வீச்சு மட்டுமல்லாது, பெண்கள் குழந்தைகள் உள்பட போராளிகள் மீது வர்மப்பிடி – வக்கிர தாக்குதல்களை ஏவி ஆக்கிரமிப்பு இராணுவத்தைப்போல் ஒடுக்குகின்றனர். டெல்லியின் நேரடி எடுபிடியாக கொடூர தாக்குதல்களை நடத்துகிறது எடப்பாடியின் போலீசு.
இது விவசாயிகளுக்கு மட்டுமல்ல, அனைத்துப் பிரிவு மக்களுக்கும் வாழ்வா சாவா பிரச்சினை!

பசப்புகளுக்கு மசியாதே; ஒடுக்குமுறைகளுக்கு அஞ்சாதே; மக்கள் எழுச்சியே வெல்லும் !
காளியப்பன்,
பொருளாளர், மக்கள் அதிகாரம்.
நெடுவாசல் போராட்டத்தில் பங்கேற்பதற்கு தடை போடும் போலீசு!
பின்குறிப்பு: புதுக்கோட்டையிலும், நெடுவாசலிலும் நடந்து வரும் போராட்டத்தில் பகுதி வாழ் மக்கள், பல்வேறு அமைப்புகள், கட்சிகள், இயக்கங்கள் ஆகியோரோடு மக்கள் அதிகாரம் அமைப்பினைச் சேர்ந்த தோழர்களும் பங்கேற்று வருகின்றனர். ஆனால் நெடுவாசல் போராட்டத்தில் சேர்வதற்காக திரண்டு வரும் மக்கள் அதிகாரம் தோழர்களை போலீஸ் தடுத்து நிறுத்தி வெளியேற்றி வருகிறது. நேற்று 26.02.2017 ஞாயிறு அன்று மக்கள் அதிகாரம் அமைப்பினர் மூன்று வாகனங்களில் நெடுவாசல் சென்ற போது போலீஸ் அடாவடியாக அனுமதி மறுத்து திருப்பி அனுப்பியது. பிறகு சில தோழர்கள் பேருந்தில் சென்ற போதும் இறங்குமிடத்தில் அவர்களை அடையாளம் கண்டு  கிட்டத்தட்ட கைது செய்து போலீசு வாகனத்தில் கொண்டு சென்று புதுக்கோட்டையில் இறக்கியது. நெடுவாசல் போராட்டத்தில் மக்கள் அதிகாரம் தோழர்களை உள்ளே அனுமதிக்க முடியாது என்று  போலீசு வெளிப்படையாக கூறுவதோடு அமல்படுத்தியும் வருகிறது.
– வினவு

கருத்துகள் இல்லை: