ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

சமஸ்கிருதத் திணிப்பு எதிர்ப்பு மாநாடு ! புதிய கல்வி கொள்கை - ஒருமைபாட்டுக்கு கேள்வி: தி.க மாநாடு


‘புதிய கல்விக் கொள்கை என்று சொல்லி சமஸ்கிருதத்தையும், இந்துக் கலாச்சாரத்தையும் திணிக்கும் மத்திய பாஜக அரசின் திட்டத்தை எதிர்த்து முறியடிப்போம்’ என்ற சூளுரையோடு தொடங்கியது திராவிடர் கழகத்தின், ‘சமஸ்கிருதத் திணிப்பு எதிர்ப்பு மாநாடு’. சென்னை பெரியார் திடலில் நடந்த இம்மாநாட்டில் மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ள புதிய கல்வித்திட்டம் மற்றும் சமஸ்கிருதத் திணிப்பை எதிர்த்து தி.க, திமுக, சிறுபான்மை கட்சியினர் மற்றும் கல்வியாளர்களும், கொள்கையாளர்களும் திரளாகப் பங்கேற்றனர்.
இம்மாநாட்டில் உரையாற்றிய தி.க தலைவர் கி.வீரமணி, “மத்திய அரசு இந்தியைத் திணித்தபோது தந்தை பெரியார் தலைமையில் தமிழகம் திரண்டு எதிர்த்துப் போராடி இந்தி திணிப்பை முறியடித்தது.

ராஜாஜியால் கொண்டு வரப்பட்ட குலக்கல்வித் திட்டத்தை தந்தை பெரியார் கட்டளையின் பேரில் ஒட்டுமொத்த தமிழர்களும் எதிர்த்து களம் கண்டு அத்திட்டத்தை முறியடித்தனர். தந்தை பெரியாருக்குப் பின்னர், இப்போது மீண்டும் இந்தி, சமஸ்கிருதம் திணிப்புகள், நவீன குலக்கல்வித் திட்டமாக இந்துத்துவக் கல்வித் திட்டம் ஆகியவற்றை கட்சிகள், ஜாதி, மத பேதங்களின்றி முறியடித்து வெற்றி பெறுவோம்” என்றவர், மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடும் விதமாக, “சமஸ்கிருதத் திணிப்பு, புதிய கல்வித்திட்டம் என்பதன் பெயரால் பண்பாட்டுப் படையெடுப்பு என்பது நாட்டின் ஒருமைப்பாட்டைக் கேள்விக்குறியாக்கி விடும். புதிய கல்விக் கொள்கை என்ற பெயரால் திணிக்கப்படும் ஒன்றை, இந்துக் கலாச்சாரத்தை ஒருபோதும் அனுமதியோம்” என்று எச்சரித்தார்.
மாநாட்டில் இந்தி ஆதிக்க எதிர்ப்பு வரலாற்றை விளக்கும் நூல்கள் மற்றும் சமஸ்கிருத ஆதிக்கத்தை, பண்பாட்டுப் படையெடுப்பை விளக்கும் நூல்கள் வெளியிடப்பட்டன. 1937ஆம் ஆண்டு இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போர் வரலாற்றை விளக்கும் நூலான 'தமிழன் தொடுத்தப் போர்', 1948ஆம் ஆண்டு இரண்டாம் இந்தி எதிர்ப்பு போரின்போது நடைபெற்ற மாநாட்டில் அறிஞர் பெருமக்களின் சொற்பொழிவு திரட்டு நூலான 'இந்திப் போர்முரசு', இந்தி ஆட்சி மொழியாக ஆதிக்கம் செலுத்தினால் ஏற்படும் ஆபத்துகளை விவரிப்பதுடன், இந்தி ஆதிக்க எதிர்ப்பு வரலாற்றை விளக்கும் நூலான 'மொழி உரிமை' ஆகிய நூல்களும், மொழிக்கலப்பு, பண்பாட்டுப் படையெடுப்பு, தமிழர் வாழ்வியல், விழாக்களில் சமஸ்கிருத ஆதிக்கம் ஆகியவற்றை விளக்கும் நூலான 'சமஸ்கிருத ஆதிக்கம்', செத்த மொழியான சமஸ்கிருதம் இல்லாமல் தமிழ்மொழிக்கு தனித்து இயங்கும் ஆற்றல் உண்டு, இணைப்பு மொழிக்கான தகுதி சமஸ்கிருதத்துக் கிடையாது என்பதை விளக்கும் நூலான 'சமஸ்கிருதம் இணைப்பு மொழியா?' சமஸ்கிருதம் பற்றி தந்தை பெரியாரின் ஆய்வுக்கட்டுரை தாங்கிய ஒரு சிறு நூல் உள்ளிட்ட நூல்கள் மாநாட்டில் வெளியிடப்பட்டன.   minnambalam.com

கருத்துகள் இல்லை: