ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

திருப்பதிக்கு வழிபட சென்ற 32 பேர் ரேணிகுண்டாவில் கைது: ஆந்திரா புறப்பட்ட தமிழக அரசு வழக்கறிஞர்கள்


சென்னையில் இருந்து கருடாத்ரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் திருப்பதிக்குச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 32 பேரை ஆந்திராவில் ரேணிகுண்டா போலீஸார் வெங்கடாபுரம் என்ற இடத்தில் கைது செய்து சிறையிலடைத்தனர். செம்மரம் வெட்டினர் என்று கைது செய்யப்பட்டவர்கள் மீது ஆந்திர வன பாதுகாப்பு சட்டம் 109, 120, 120-பி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நேற்று திருப்பதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. அவர்களை ஆகஸ்ட் 19ஆம் தேதி வரை சித்தூர் சிறையில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கைது செய்யப்பட்ட 32 பேரில் 29 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இதில் படவேடு அடுத்த மேல் செண்பகத்தோப்பு, கீழ் செண்பகத்தோப்பைச் சேர்ந்தவர்கள் மட்டும் 15 பேர். இவர்களை முறைகேடாக கைது செய்துள்ளது ஆந்திர போலீஸ் என்று குற்றச்சாட்டுகள் கைது செய்யப்பட்ட உறவினர்கள் தரப்பில் இருந்து வருகிறது.

கைது செய்யப்பட்ட ராஜேந்திரனின் மனைவி மேனகா கூறும்போது, ‘எனது கணவர் ராஜேந்திரன் மற்றும் உறவினர்கள் திருப்பதிக்குக் கோயிலுக்குச் செல்வதாக கூறி படவேட்டிலிருந்து நேற்று முன்தினம் பஸ்சில் சென்றனர். மறுநாள் காலையில் டிவி-யில் பார்த்த பின்புதான் எனது கணவரையும் உறவினர்களையும் ஆந்திர போலீஸார் செம்மரம் வெட்ட சென்றதாக கைது செய்தது தெரியவந்தது. இதைப் பார்த்ததும் நெஞ்சே அடைச்சுடுச்சு. அவங்க, செம்மரம் வெட்ட போகவில்லை. கோயிலுக்குதான் போனார்கள். ஆந்திர போலீஸ் வேண்டுமென்றே பொய் வழக்கு போட்டிருக்காங்க. அவர்களை எப்படியாவது மீட்டுத்தாங்க” என்கிறார் கண்ணீரோடு. இதே குரல்தான் ஒலிக்கிறது கைது செய்யப்பட்ட ஏனைய உறவுகளின் கண்ணீர்.
இதனைத் தொடர்ந்து, ‘தமிழகத்தைச் சேர்ந்த 32 பேர் கைது செய்திருப்பது கவலை அளிப்பதாகவும், அவர்கள் அனைவரும் வனத்துறை தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. மேலும், இந்த விஷயத்தில் நேரடியாகத் தலையிட்டு அவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுதவிர, ‘32 பேரையும் விடுவிப்பது தொடர்பாக பேசுவதற்காக தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள் இரண்டு பேரை ஆந்திராவுக்கு அனுப்புவதாக’ கடிதத்தில் தெரிவித்திருந்தார். அதற்கேற்ப இரண்டு வழக்கறிஞர்களும் இன்று ஆந்திரா புறப்பட்டு சென்றனர். முதற்கட்டமாக அனைவரையும் பிணையில் எடுக்கும் முயற்சிகளைத் தொடங்குகின்றனர். ஆந்திர வன பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதால் உடனடியாக பிணை கிடைப்பதில் சிரமம் உள்ளது. ஆனாலும், பிணையில் எடுக்க முழு முயற்சிகளை எடுப்பதாக அவ்விரு வழக்கறிஞர்களும் உறுதியளித்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. பெரும்பாலும் புதன்கிழமைக்குள் பிணைக்கான முயற்சிகள் தொடங்கப்பட்டுவிடும் என்கின்றனர். மறுபுறம் தமிழகத்தில் கைது செய்யப்பட்டவர்களின் ஆவணங்கள், புகைப்பட அடையாளங்கள் போன்றவை சேகரிக்கும் பணியில் வருவாய்துறை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.மின்னம்பலம்.கம

கருத்துகள் இல்லை: