புதன், 10 ஆகஸ்ட், 2016

விஜயகாந்த் பிரேமலதா மீதான 14 வழக்குகள் விசாரணைக்கு உயர்நீதிமன்றம் தடை

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் மீது தொடரப்பட்ட 14 அவதூறு வழக்குகள் மீதான விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகிய இருவர் மீதும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் சார்பில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. கடந்த 2012, 2013, 2014 ஆகிய காலகட்டங்களில் சென்னை, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பூர், நாமக்கல், நீலகிரி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இதுவரை விஜயகாந்த் மற்றும் பிரேமலதா ஆகியோர் மீது மொத்தம் 14 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரியும், விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா ஆகியோர் சார்பில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு நடந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் அஜ்மல்கான், வி.டி.பாலாஜி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அரசு தரப்பில் வழக்கறிஞர் இமிலியாஸ் ஆஜரானார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பி.என்.பிரகாஷ், விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் மீது சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் தொடரப்பட்ட 14 அவதூறு வழக்குகள் மீதான விசாரணைக்கும் தடை விதித்து உத்தரவிட்டார்.  tamilthehindu.com

கருத்துகள் இல்லை: