செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

காவல்நிலைய விசாரணையில் கீழக்கரை இளைஞர் படுகொலை: மமக கண்டனம்

தமிழகத்தில் தொடர்ந்து காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுபவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டு அதன்விளைவாக அவர்கள் மரணமடையும் காவல்பிடி மரணங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. இந்த வரிசையில் நேற்று இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகில் உள்ள மாயாகுளம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் சேக் அலாவுதீன் கொல்லப்பட்டுள்ளார்” என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“சேக் அலாவுதீன், திருட்டுக் குற்றச் சம்பவத்திற்காக கடந்த 2.8.2016 அன்று ஏர்வாடி காவல்நிலைய அதிகாரிகளால்  காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். அவர் காவல்துறையினரிடமிருந்து தப்பி ஓடும்போது திருப்புலானி அருகிலுள்ள பாலத்திலிருந்து தவறிவிழுந்து மரணமடைந்ததாகக் கூறி காவல்துறை இக்கொலையை மறைக்க முயற்சித்துள்ளது.
இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர் எத்தகைய குற்றப்பின்னணி கொண்டவராக இருப்பினும் அவரை தண்டிக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்குத்தான் உள்ளது. அந்த அதிகாரத்தை காவல்துறையினர் தம் கையில் எடுத்துக்கொண்டு விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களைத் தாக்கி அதன்விளைவாக அவர்கள் மரணிக்கும் நிகழ்வுகள் தொடர்வது அதிர்ச்சி அளிக்கிறது.
என்.சி.ஆர்.பி., என்ற தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்தியாவிலேயே மராட்டிய மாநிலத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தில்தான் காவல் சாவுகள் அதிகஅளவில் நடைபெற்று வருகிறது என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உச்சநீதிமன்றம், மோதல் சாவுகள்(என்கவுன்டர்) குறித்து அளித்த ஒரு தீர்ப்பின் அடிப்படையில் இவ்வழக்கு குற்றவியல் நடுவர் விசாரணைக்கு உத்திரவிடப்பட வேண்டும், இக்கொலையில் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மீது இந்தியக் குற்றவியல் சட்டம் பிரிவு 302ன் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும், மேலும் இதுபோன்ற சட்டவிரோத மரணங்களைத் தடுக்க தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், கொலை செய்யப்பட்ட சேக் அலாவுதீன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  thetimestamil.com

கருத்துகள் இல்லை: