சனி, 13 ஆகஸ்ட், 2016

அ.தி.மு.க., எம்.பி சத்தியபாமாவுக்கு கணவர் விவாகரத்து 'நோட்டீஸ்'... என்னை அடைத்து வைத்திருக்கிறார் கணவர் புகார்!

கோபி: திருப்பூர், அ.தி.மு.க., பெண் எம்.பி., சத்தியபாமாவுக்கு, அவரது கணவர் விவாகரத்து, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளார்.
திருப்பூர் எம்.பி., சத்தியபாமா, 1990ல், கோபி அருகே எலந்தக்காடு பகுதியைச் சேர்ந்த வாசுவை, காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சத்தியவசந்த், 24, என்ற மகன் உள்ளார். 2014 லோக்சபா தேர்தலில், சத்யபாமா அ.தி.மு.க., சார்பில், திருப்பூர் எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டார். அதன்பின் அவருக்கும், கணவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இந்நிலையில், வாசு சார்பில், அவரது வழக்கறிஞர் ஜாகீர் உசேன், சத்யபாமாவுக்கு அனுப்பியுள்ள விவாகரத்து நோட்டீஸ்:வாசுவுக்கும், உங்களுக்கும், 1990 மார்ச், 30ல் திருமணம் நடந்தது. வாசுவால், கோபி
நகராட்சி தலைவர் ஆனதும், அவரை உதாசீனப்படுத்த ஆரம்பித்தீர்கள். வாசுவுக்கு தெரியாமல், பல இடங்களில் அவர் பெயரில் கடன் பெற்றுள்ளீர்கள். லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தபோது, பலரிடம் பணம் பெற்று தங்களுக்கு கொடுத்துள்ளார்.
மேலும், அவரது விவசாய நிலங்களை அடமானம் வைத்து, இரண்டு கோடி ரூபாய் பெற்றுத்தர வற்புறுத்தி உள்ளீர்கள். அதன்பின், சிகிச்சை என்ற பெயரில் அவரை அடைத்து வைத்துள்ளீர்கள்.

மனம் போன போக்கில், வாசுவை தவிர்த்து, இரு ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறீர்கள். இனி உங்களுடன் சேர்ந்து வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், உங்களது செயல்கள், தன் நலனுக்கு ஊறு விளைவிப்பதாக இருக்கும் என, அவர் கருதுகிறார்.
எனவே, 1990ல் இருவருக்கும் ஏற்பட்ட திருமணத்தை ரத்து செய்ய, மனு தாக்கல் செய்வதற்கு தாங்கள் முன்வர வேண்டும். தவறும் பட்சத்தில், என் கட்சிக்காரரான வாசு, தங்கள் மீது விவாகரத்து வழக்கு தாக்கல் செய்வார்.அதனால் ஏற்படும் சகல செலவுகளுக்கும், நீங்களே முழு பொறுப்பேற்க நேரிடும்.இவ்வாறு நோட்டீசில் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வாசு கூறுகையில், ''என்னை ஒரு கோடி ரூபாய்க்கு கடன்காரன் ஆக்கியுள்ளார்; தன்னிச்சையாக செயல்படுகிறார். இரண்டு மாதமாக அவரிடம் பேச முயற்சிக்கிறேன்; பிடி கொடுக்க மறுக்கிறார். என் வாழ்க்கையை, நான் தீர்மானிக்க தயாராகி விட்டேன். அதற்காகத்தான் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன்,'' என்றார்.  நக்கீரன்.இன்

கருத்துகள் இல்லை: