வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

திருமாவுக்கு தூண்டில் போட்ட பாஜக ! விடுதலை சிறுத்தைகள் பிளவுபடும் அபாயம் ! ஆளூர் ஷாநவாஸ் போர்க்கொடி !

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் பொதுச்செயலர் ரவிக்குமாருக்கும் துணைப் பொதுச்செயலர் ஆளுநர் ஷாநவாஸுக்கும் இடையே மோதல் பகிரங்கமாக வெடித்துள்ளதால் அக்கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியை ரவிக்குமார் தொடர்ந்து ஆதரித்து வருகிறார் என்பது ஆளுநர் ஷாநவாஸின் குற்றச்சாட்டு. அண்மையில் தலித்துகள் தொடர்பாக பிரதமர் மோடி பேசியதை ஊடகங்களில் ரவிக்குமார் ஆதரித்து கருத்து கூறியிருந்தார்.
இதில் கடும் அதிருப்தி அடைந்த ஆளூர் ஷாநவாஸ் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் திருமாவளவனுக்கு ஒரு பகிரங்க கடிதம் என்ற தலைப்பில் ஒரு பதிவை வெளியிட்டார். பின்ன ஷாநவாஸ் அப்பதிவை நீக்கிவிட்டார்.
 ஆளூர் ஷாநவாஸ் நீக்கிய பதிவு இது:
அன்புள்ள தலைவர் அவர்களுக்கு, நம் கட்சி பொதுச்செயலாளரின் செயல்பாடுகள் மிகுந்த வேதனையை அளிக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய், பிரதமர் மோடி ஆகியோர் சராசரி அரசியல்வாதிகள் அல்ல. பதவிக்காக பா.ஜ.க.வில் இணைந்து முன்னேறியவர்களும் அல்ல. சாதியைப் பாதுகாக்கும் இந்துத்துவத்தை கொள்கையாக ஏற்றுக் கொண்டு, ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் உருவாகி அரசியலுக்கு வந்தவர்கள்.

 அவர்கள் சிரித்தாலும், அழுதாலும், சிந்தித்தாலும், எழுதினாலும், பேசினாலும், செயல்பட்டாலும் அனைத்திலுமே ஆர்.எஸ்.எஸ்ஸின் வேர் இருக்கும். அவர்களின் அசைவுகள் ஒவ்வொன்றையும் தீர்மானிப்பது ஆர்.எஸ்.எஸ்.தான். இது உலகறிந்த உண்மை என்பதாலேயே அவர்கள் எந்த வேடமிட்டு வந்தாலும் அதை ஜனநாயக முற்போக்கு சக்திகள் நிராகரித்து வருகின்றனர்.
 அந்தவகையில் திருவள்ளுவரை வைத்து தருண் விஜய் நடத்திய நாடகத்தை தமிழகம் அடையாளம் கண்டு கொண்டது. ஆனால், பொதுச்செயலாளரின் முயற்சியால் நம் கட்சி தருண் விஜய்யை ஆதரித்தது.
 பா.ஜ.க அரசு புரட்சியாளர் அம்பேத்கரை புகழ்வதும், அவருக்கு விழா எடுப்பதும், சிலை வடிப்பதும், நினைவகம் எழுப்புவதும் அப்பட்டமான அரசியல் நடவடிக்கை என்று நாடே தூற்றுகிறது. ஆனால், பொதுச்செயலாளர் அவர்கள் அதற்காக மோடியைப் பாராட்டி வெளிப்படையாக எழுதுகிறார்.

அண்மைக்காலமாக பசுவின் பெயரால் தலித்கள் தாக்கப்படுவதை எதிர்த்து இந்தியா முழுவதும் தலித் கிளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதன் தீவிரத்தை உணர்ந்த மோடி, "தலித்களைத் தாக்காதீர்கள் என்னைத் தாக்குங்கள்" என பேசினார். மோடியின் இந்தப் பேச்சு அனைவராலும் விமர்சிக்கப்படுகிறது. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், என்னைத் தாக்குங்கள் என ஒரு பிரதமரே சொல்வது அபத்தம். ஆனால், இந்த அபத்தப் பேச்சுக்காக மோடியைப் பாராட்டி நன்றி சொல்லியுள்ளார் நம் பொதுச்செயலாளர்.
பிரதமரே பேசிவிட்டதால் இனி தலித்கள் மீதான தாக்குதல் குறையும் என்று அதற்கு ஒரு காரணத்தையும் சொல்லியுள்ளார். ஆனால், பிரதமர் அப்படி பேசிய பிறகுதான், ஆந்திராவில் பசு பாதுகாப்பு கும்பலால் தலித்கள் தாக்கப்பட்ட கொடுமையும் நடந்துள்ளது.
இந்துத்துவத்தை எதிர்த்து தீவிரமாகப் போராடுவது, மாநாடு நடத்துவது என நம் கட்சியின் செயல்பாடுகள் ஒருபுறமும், இந்துத்துவ சக்திகளான தருண் விஜய்யை ஆதரிப்பது மோடியை பாராட்டுவது என பொதுச்செயலாளரின் அணுகுமுறை மறுபுறமும் தொடர்வதால் கட்சியின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகிறது
ஒரே நேரத்தில் ஒரே விசயத்தில் மோடியை எதிர்த்து கட்சியும், மோடிக்கு நன்றி சொல்லி பொதுச்செயலாளரும் கருத்து சொன்னால் அது பொதுவில் குழப்பத்தையும் ஐயத்தையுமே ஏற்படுத்தும். அதுதான் தற்போது நடந்து வருகிறது.
இது கட்சியில் உள்ள என்போன்ற பலருக்கும் நெருக்கடியை ஏற்படுத்துகிறது. இப்படி தொடர்ந்து பொதுச்செயலாளர் இயங்கி வருவது, மதச்சார்பற்ற சக்திகளிடையே பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இதை அவ்வப்போது உங்கள் கவனத்துக்கும் கொண்டு வந்துள்ளேன். எனினும், கட்சி நலன் கருதி இதுவரை நான் இதுகுறித்து பொதுவில் கருத்து ஏதும் தெரிவித்ததில்லை. ஆனால், நிலைமை எல்லை மீறிச் செல்வதால் இதுகுறித்து வெளிப்படையாகப் பேசும் நிலைக்கு ஆளாகியுள்ளேன்.
இதில், தலைவர் என்ற வகையில் கட்சியின் நிலைப்பாட்டை நீங்கள் உறுதிபட தெளிவுபடுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். மிக இளம் வயதில் எனக்கு பொறுப்பு வழங்கி, வேட்பாளராக்கி அழகு பார்த்தவர் நீங்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உரத்து முழங்குபவன் என்கிற ஒரே தகுதியின் அடிப்படையிலேயே அந்த அங்கீகாரத்தை வழங்கினீர்கள். அதன்படி எப்போதும் என் குரல் சமரசமின்றி ஒலிக்கும். நன்றி! இவ்வாறு ஷாநவாஸ் பதிவிட்டிருந்தார்.
இது பெரும் சர்ச்சையை கிளப்பியதால் தம்முடைய பதிவை நீக்கி மற்றொரு பதிவை ஷாநவாஸ் போட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது: தலைவருக்கு எழுதிய கடிதத்தை பொதுவில் வைத்ததில் தோழர்கள் பலருக்கும் வருத்தம். அதைப் புரிந்து கொண்டு நீக்கியுள்ளேன். எனினும், பிரச்சனையின் அடிப்படையே பொதுச்செயலாளர் பொதுவில் வைத்த கருத்துகள்தான். அதற்கு எதிர்வினை பொதுவில் வரும்போது அதைப் பற்றி அதே தளத்தில் பேச வேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது எனக் கூறியிருக்கிறார். இப்படி மோடிக்கு எதிராக கட்சியும் மோடிக்கு ஆதரவாக கட்சியின் பொதுச்செயலரும் செயல்படுவதால் திருமாவளவன் கடும் நெருக்கடிக்குள்ளாகியிருப்பதாகவே கூறப்படுகிறது.

Read more at://tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை: