வியாழன், 11 ஆகஸ்ட், 2016

போயஸ் தோட்டத்தில் டாஸ்மாக் திறக்கலாம்.. அம்மாவின் மரணதேசம்.. வினவு

விருதாச்சலத்தை அடுத்துள்ள மேலப்பாளையூர் டாஸ்மாக் சாராயக் கடையை அகற்றக் கோரி நடந்த முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்ற 13 பேரில் பதினோரு பேர் பிணையில் விடுவிக்கப்பட்டதற்கு மறுநாள் வினவு செய்தியாளர்கள் விருதாச்சலத்தில் இருந்தோம். கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்தில் பிணை கையெழுத்திட்ட பதினோரு பேரையும் சந்தித்தோம்.
சாராயம் அப்பகுதி மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் நாசகார விளைவுகளை விவரிக்க வார்த்தைகள் இல்லை… “அரசாங்கமே ஸ்கெட்ச்சு போட்டு மக்களுக்கு சுலோ பாய்சன் மாதிரி சாராயத்தை ஊத்தி சாவடிக்குது சார். சாராயம் குடிச்சி செத்தவன் சாவுக்கெல்லாம் யாரு காரணம்? அந்த சாவுக்கெல்லாம் கலெக்டர், டி.எஸ்.பி, எஸ்.பி மேல எப்.ஐ.ஆர் போடனும்” என்கிறார் முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவரும், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவருமான நந்தகுமார். மேலப்பாளையூர் டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர்களில் நந்தகுமாரும் ஒருவர்.

“டாஸ்மாக் வருமானத்தில் தான் அரசின் நலத் திட்ட உதவிகள் எல்லாம் செய்யப்படுகின்றன என்றும், இதை மூடி விட்டால் ஏழை மக்கள் பயன்பெறும் நலத் திட்ட உதவிகளுக்கு நிதி இல்லாமல் போய் விடும் என்றும் சொல்றாங்களே?”
“என்ன சார் நலத் திட்டம்? இலவசம் குடுக்கிறதைத் தானே சொல்றீங்க? ஒரு குடும்பத்துக்கு தர்ற மிக்ஸி, கிரைண்டர், இலவச சைக்கிள் எல்லாம் கூட்டிப் பார்த்தா ஐயாயிரம் வருமா? இந்த ஐயாயிரமும் அஞ்சு வருசத்துக்கான கணக்கு. இங்க ஒவ்வொருத்தனும் கூலிய வாங்கின கையோட அப்படியே தினமும் முன்னூறு ரூபாய்க்கு டாஸ்மாக்குக்கு மொய் வைக்கிறான். ஒரு மாசத்துக்கு ஒன்பதாயிரம் கணக்கு வருது… அப்ப வருசத்துக்கு எவ்வளவு, அஞ்சி வருசத்துக்கு எவ்வளவுன்னு நீங்களே கணக்குப் போட்டு பார்த்துக்கங்க… அதெல்லாம் சும்மா சார்.. எங்க தாலியறுத்துட்டு இலவசம் தாங்கன்னு யாரு அழுதா?”
”அப்ப அரசாங்கம் இலவசங்கள் ஏதும் தரக் கூடாதுன்னு சொல்றீங்களா?”
“முதல்ல இலவசம்னு சொல்லாதீங்க சார்.. இதெல்லாம் அவன் அப்பன் வீட்டு காசிலேர்ந்தா தர்றான்? எல்லாம் மக்கள் காசு தானே? என் பிள்ளைக்கு நான் உழைச்சி சோறு போடறேன்… நீ எனக்கு பிச்சையும் போட வேண்டாம் – சாராயத்த ஊத்தி தாலி அறுக்கவும் வேணாம்… நாங்களே விளைய வச்ச நெல்ல குடோன்ல போட்டு புளுக்க வச்சிட்டு எங்களுக்கே இலவசம்னு தர்றான்… நாங்க என்ன பிச்சைக்காரங்களா?”
”சரி உங்க போராட்டத்தை அரசாங்கம் எப்படி எதிர் கொள்கிறது?”
“எங்களை பிரிச்சி விட்டு மோத வைக்கலாம்னு பார்க்கறான் போலீசு.. .நாங்க ஜெயில்லேர்ந்து ஜாமீன்ல வெளிய வந்த உடனே அம்பேத்கர் சிலைக்கு மாலை போடப் போனோம். சாதிப் பிரச்சினை வரும்னு சொல்லி தடுக்கறான் போலீசு… அவர் எந்த சாதியா வேணும்னாலும் இருக்கட்டுமே… அவர் ஒரு பெரிய தலைவர்… இந்த நாட்டுக்கே தலைவர்… அப்படின்னா எங்களுக்கும் தானே அவர் தலைவர்? போலீசுகாரன் வேணும்னு மக்கள் மோதிக்கணும்னு இப்படிச் செய்யறான்”
”அடுத்த கட்டமா என்ன செய்யப் போறீங்க?”
”மேலப்பாளையூர்ல டாஸ்மாக் இல்ல. இனிமே திறக்க விடவும் மாட்டோம். சுத்து வட்டாரத்திலயும் திறக்க விடமாட்டோம்… அடுத்து எங்களோட அடிப்படை பிரச்சினைகள் நிறைய தீராம இருக்கு.. அதுக்கெல்லாம் போராடனும். நீங்களே பார்த்திருப்பீங்க.. இங்க சாலை வசதி சரியில்லை.. அப்புறம் பக்கத்துல அம்பிகா சுகர் மில் காரன் விவசாயிகளோட 40 கோடி ரூபாய பாக்கி வைச்சிருக்கான்.. அதை போராடி வாங்கனும்… ஏரிகளை எல்லாம் ஆக்கிரமிச்சு வச்சிருக்கான் ரியல் எஸ்டேட்காரன், அதை மீட்கனும்… நிறைய செய்ய வேண்டி இருக்குங்க”
அக்டோபர் 2015-ல் வினவு சார்பாக அங்கே சென்று எடுக்கப்பட்ட ஆவணப்படம் “அம்மாவின் மரண தேசம்”. அதில் இடம்பெறும் நந்தகுமாரின் நேர்காணல் இந்த வீடியோவில் முழுமையாக இடம்பெறுகிறது.

கருத்துகள் இல்லை: