செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

சட்டசபை நிகழ்சிகளை நேரடியாக ஒளிபரப்ப தடை என்ன? உயர்நீதிமன்றம அரசு வக்கீலிடம்...

தமிழக சட்டமன்ற நிகழ்ச்சிகளை பொதுமக்கள் தெரிந்துகொள்ளும்விதமாக, தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிப்பரப்பு செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய்கி‌ஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் அட்வகேட் ஜெனரல் சோமயாஜி ஆஜராகி இந்த வழக்குக்கு விரிவான பதில் மனுவை தாக்கல்செய்ய கால அவகாசம் வேண்டும் என்று கேட்டார். கால அவகாசத்துக்கு ஒப்புக்கொண்ட நீதிபதிகள், நாடாளுமன்றத்தில் நடைபெறும் முக்கிய விவாதங்கள் பொதுமக்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ராஜ்யசபாவில் நடைபெறும் விவாதங்களும் இதுபோல் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. பல மாநிலங்களில் இந்த வசதி உள்ளது. அப்படி இருக்கும்போது, தமிழக சட்டசபையின் நிகழ்வுகள் ஏன் நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடாது? என்று கேள்வி எழுப்பினார்கள்.

மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் எலிசபத் சேஷாத்ரி, சட்டசபை நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்புக்கு பெரும் தொகை செலவாகும் என்று தமிழக அரசு கூறலாம். ஆனால், அண்டை மாநிலமான கேரளாவில், சட்டசபை நிகழ்வுகள் தேசிய தகவல் மையம் (என்.ஐ.சி.) மூலம் இலவசமாக இணைய தளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. அந்த முறையை தமிழக அரசு பின்பற்றலாம் என்று தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்யக்கோரி லோக் சத்தா கட்சியின் மாநிலத் தலைவர் டி.ஜெகதீசன் சென்னை உயர்நீதிமன்றத்தில், கடந்த 2012ஆம் ஆண்டு பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  மின்னம்பலம்.காம்

கருத்துகள் இல்லை: