எவ்வளவோ பாரம்பரிய பெருமையும், கல்வித்திறமையும்
இருந்தாலும்கூட எஸ்.சி. என்று எங்களை இழிவாக அழைக்கிறார்கள். இந்த இழிநிலை
மாற இடஒதுக்கீட்டையும் கூட இழக்கத் தயாராக இருக்கிறோம்’என்று மதுரையில்
தேவேந்திரகுல வேளாளர்கள் அறிவித்துள்ளது புதிய விவாதங்களை கிளப்பியுள்ளது.
மதுரையில் தேவேந்திரர் தன்னார்வ அமைப்பின் சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற
பிரதிநிதிகள் மாநாட்டில், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பங்கேற்றார். இதில்
பேசிய அறக்கட்டளை தலைவர் தங்கராஜ், “தேவேந்திர சமுதாயத்தினர் தாழ்த்தப்பட்ட
சமுதாயத்தினர் கிடையாது. இவர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் அல்ல,
பசுவை தெய்வமாக வணங்குபவர்கள். மீனாட்சியம்மன் கோயில் உட்பட பல கோயில்களை
கட்டியவர்கள். நம்மளுக்கு வேற சந்தேகமுங்கோ , யார்யாரோ ராஜ்யசபா லோக்சபா சட்டசபை சீட்டு வாக்குறுதிக்காக சூதாடுராய்ங்கோ
இவ்வளவு பாரம்பரியமிக்க எங்கள் சமுதாயத்தை 1935-ல்
இங்கிலாந்து அரசு தவறாகப் பட்டியல் இனமென்று அறிவித்துவிட்டது. எங்களுக்கு
எஸ்சி என்ற அவப்பெயரும் வேண்டாம், அதனால் கிடைக்கிற இடஒதுக்கீடும்
வேண்டாம்”என்றார். இந்த கோரிக்கையை ஆதரித்து அமித்ஷா, குருமூர்த்தி
ஆகியோரும் பேசினர்.
இது பட்டியலின மக்கள் மத்தியில், குறிப்பாக தேவேந்திரகுல வேளாளர்கள்
மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இக்கோரிக்கை பற்றி அந்த
சமுதாயத்தைச் சேர்ந்த பிரமுகர்கள் சிலரிடம் கருத்து கேட்டோம்.
எம்.கிருஷ்ணசாமி (சமூக ஆர்வலர்):
இந்தியாவில் எஸ்.சி.க்கு மட்டுமல்ல பி.சி., எம்.பி.சி. உள்ளிட்ட பிற
பட்டியலில் இருப்பவர்களுக்கும் இடஒதுக்கீடு உள்ளது. ஆனால், அவர்களைப் பற்றி
யாரும் எதுவும் பேசுவதில்லை.
எங்களை மட்டும் ‘எஸ்.சி. கோட் டாவில் வேலைக்கு வந்தவன்’என்று இழிவாகப்
பேசுகிறார்கள். பி.சி. கோட்டாவில் வந்தவர்களை மெரிட்டில் வந்தவர்களைப்போல
பார்ப்பதும், எங்களைப் போன்றவர்களை இழிவுபடுத்துவதும் தான் சமூகநீதியா?
தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து நாங்கள் அனுபவிக்கும் சலுகைகளைவிட,
அடைகிற அவமானங்களும், இழப்புகளும் தான் அதிகம். இன்னொரு 20 ஆண்டுகள்
கஷ்டப்பட்டால், இடஒதுக்கீட்டின் தேவையின்றியே எங்களால் சாதிக்க முடியும்.
இக்கருத்தை ஓங்கி ஒலிக்கும் அளவுக்கு தேவேந்திர குலத்தவர்களிடையே
ஒற்றுமையில்லை. என்றாலும் கூட, மதுரையில் நடந்த நிகழ்வு ஒரு மைல் கல் என்று
சொல்லலாம்.
கே.பி.மாரிக்குமார் (ஸ்பார்க் அகடமி நிறுவனர்):
என்னுடைய அகடமியில் கள்ளர் முதல் பள்ளர் வரை பல ஜாதியைச் சேர்ந்தவர்கள்
படிக்கிறார்கள். வி.ஏ.ஓ. முதல் குரூப்-2 வரை பல போட்டித் தேர்வுகளில்,
எஸ்.சி. பிரிவைச் சேர்ந்தவர்கள் தங்கள் கோட்டாவைத் தாண்டி பொதுப்பிரிவிலும்
அதிகளவில் வெற்றி பெறுகின்றனர்.
அதேபோல எஸ்.சி. கோட்டாவுக்கான கட் ஆப் மார்க்கானது, எம்.பி.சி.
கோட்டாவுக்கான மதிப்பெண்ணைவிட அதிகம் உள்ளது. காரணம், எஸ்.சி. கோட்டாவில்
உள்ள மாணவர்கள் படிப்பிலும், பொது அறிவிலும் சிறந்தவர்களாக திகழ்கிறார்கள்.
சட்டப்படிப்பில் நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட காரணம், அதில் மிக
அதிகமாக தாழ்த்தப்பட்டோரே தேர்ச்சி பெற்றது தான் என்பது ஊரறிந்த ரகசியம்.
தமிழகத்தில் எந்த ஜாதியினரும் தங்களை பிசி என்றோ, எம்பிசி என்றோ அழைப்பதை
ஏற்பதில்லை. ஆனால், பாரம்பரியமிக்க தேவேந்திரகுல வேளாளர்கள் எஸ்.சி.
என்றும், தலித் என்றும் அழைக்கப்படுகிறார்கள். இந்த இழிவு நீங்க வேண்டும்
என்பதற்காக, இடஒதுக்கீட்டைகூட இழக்கத் தயாராக இருக்கிறோம்.
செந்தில் மள்ளர் (மள்ளர் மீட்பு கழகம்):
மதுரை மாநாட்டு கோரிக்கைகளை நாங்கள் வரவேற்கிறோம். இது ஒரு தனிப்பட்ட
அமைப்பின் கோரிக்கை கிடையாது, ஒட்டுமொத்த சமூக சிந்தனையாளர்களின் கோரிக்கை.
இக்கோரிக்கைக்காக சாத்தூரில் வருகிற 29-ம் தேதி நாங்கள் மாநாடு
நடத்துகிறோம்.
நாங்கள் எஸ்சி இல்லை என்று 20 ஆண்டுகளாகப் போராட்டம் நடத்துகிறோம். எங்களை
உடனடியாக தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து நீக்குங்கள். எம்பிசி,
பிசியிலோ, அல்லது தனிப்பட்டியலிலோ சேருங்கள். எஸ்சி என்றால், பொதுத்துறை
வங்கிகள் கூட அதிக கடன் வழங்க தயங்குகின்றன.
எஸ்.சி. என்ற இழி பெயரால், எங்களால் தொழில் நடத்த முடியவில்லை. அரசியல்
நடத்த முடியவில்லை. கிறிஸ்தவராக, முஸ்லிமாக மதம் மாறினாலும், அவலங்கள்
தொடர்கிறது.
ஜான் பாண்டியன் (தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழகம்):
தேவேந்திரகுல வேளாளர் என்று ஒரே பெயரில் உட்பிரிவுகள் அழைக்கப்பட வேண்டும்
என்ற கோரிக்கையை வரவேற்கிறேன். ஆனால், இடஒதுக்கீடே தேவையில்லை என்று
சொல்வதை ஏற்க முடியாது. அது நடைமுறைக்கு சாத்தியமில்லாத ஒன்று. இந்த
மாநாட்டை நடத்தியவர்கள் எல்லாம் படித்தவர்கள் என்று அறிகிறேன். இடஒதுக்கீடு
இல்லை என்றால், அவர்கள் பெரிய படிப்புகளை படித்திருக்க முடியுமா?.
மருத்துவர் எம்.காளிராஜன் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், அதிமுக):
தேவேந்திரகுல வேளாளர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் நீக்கக் கோருவது, முற்றிலும் தவறான அணுகுமுறை.
இடஒதுக்கீடு இருந்ததால்தான் தாழ்த்த ப்பட்ட சமுதாயத்தில் பிறந்த நான்,
மருத்துவராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் ஆக முடிந்தது. இடஒதுக்கீடு
வேண்டாம் என்று சொன்னால், கிராமப்புற, ஏழை தேவேந்திரகுல மக்களின்
குழந்தைகள் யாரும் மருத்துவராக, ஐஏஎஸ் அதிகாரியாக, அரசு ஊழியராக, சட்டமன்ற
உறுப்பினராக, அமைச்சராக வர முடியாமல் போய்விடும்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தியுள்ள தங்கராஜ், ஆர்.எஸ்.எஸ்.காரர். தேவேந்திர
குல வேளாளர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து, தமிழக அரசின்
உதவியின்றி மத்திய அரசால் நீக்க முடியாது. அவ்வாறு நீக்க முயன்றால் நான்
சார்ந்துள்ள அதிமுகவும், அதை கடுமையாக எதிர்க்கும்.
ச.தங்கவேலு (மாநிலங்களவை உறுப்பினர், திமுக):
சமுதாயப் பிரச்சினை பற்றி கருத்து சொல்ல நான் விரும்பவில்லை.
இப்பிரச்சினையில் திமுக என்ன முடிவெடுக்கிறதோ அது தான் என்னுடைய
நிலைப்பாடும் tamil.thehindu.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக