செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015

ஷாஜி : நடுத்தெருச் சினிமா! 19 ஆண்டுகளுக்கு முன் ஒரு உன்னத திரைப்படம் ஸ்திரீ!


மலையாள சினிமாவின் எக்காலத்திற்குமுரிய இயக்குநர்களில் ஒருவர் என்று பெயர்பெற்ற கே.எஸ்.சேதுமாதவன் இயக்கிய படம் ஸ்திரீ. தெலுங்கு மொழியில் அவர் இயக்கிய ஒரே படம். தனது வாழ்நாளில் அவர் இயக்கிய கடைசிப் படமாகவும் அமைந்தது அது.தென்னிந்திய சினிமாவில் எனது மிகவும் பிடித்த நடிகைகளில் ஒருவரான ரோஹிணி அப்படத்தின் மையப் பாத்திரமான ரங்கி எனும் ஸ்திரீயாக நடித்தார். முக்கிய ஆண் பாத்திரமாக தலைவாசல் விஜய் வந்தார். ஆனால் அப்படம் ரங்கியின் கதை, அவளது வாழ்க்கை. கோதாவரிப் பிராந்தியத்தின் வட்டார வழக்கிலான பேசும் மொழியாலும், படிப்பறிவற்ற ஏழை மீனவப் பெண்ணின் உடல் மொழியாலும், நுட்பமான முகபாவனைகளாலும் ரோஹிணி அப்பாத்திரமாகவே வாழ்ந்தார். 1995ஆம் ஆண்டிற்கான தேசிய விருது அறிக்கையில் ரோஹிணியின் அந்த நடிப்பைக் குறிப்பிட்டு பாராட்டினார்கள் நடுவர் குழு. ஆனால் சிறந்த நடிகைக்கான தேசிய விருது அவருக்கு கிடைக்கவில்லை!
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்திரீ படத்தின் சிறந்த குறுவட்டுப் பிரதி ஒன்று என் கைக்கு வந்தது.
எத்தனையோ ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அப்படத்தைப் பார்க்கும்பொழுது மிகுந்த ஆச்சரியத்திற்குத்தான் ஆளானேன்! தரமான திரைப்படங்களை எடுப்பதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவான தெலுங்கு மொழியில் 19 ஆண்டுகளுக்கு முன்பே இத்தகைய ஒரு சினிமாவை எடுத்திருக்கிறார்களே! நம்பமுடியவில்லை. இன்று பார்க்கும்பொழுதும் அனைத்துத் தளங்களிலுமே வெகுச் சிறப்பான ஒரு திரைப்படம் ஸ்திரீ!
சென்ற வாரம் சென்னை திருவான்மியூரிலுள்ள பனுவல் புத்தகக் கடைக்குள்ளே இருக்கும்  சிறு திரையரங்கில் ஸ்திரீ திரைப்படத்தின் திரையிடலை ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு படத்தைப் பற்றிப் பேச முடியுமா என்று பனுவலின் பொறுப்பாளர் செந்தில்நாதன் கேட்டபோது எதுவுமே யோசிக்காமல் சம்மதித்தேன். படம் திரையிடப்பட்ட பின்னர் நடந்த கலந்துரையாடலில் தலைவாசல் விஜயும் ரோஹிணியும் பங்கேற்றனர்.
சிறந்த நடிகைக்கான தேசிய விருது ஸ்திரீ வழியாக தனக்கு கிடைக்காததில் வருத்தம் எதுவும் இல்லை என்று சொன்னார் ரோஹிணி. பேன்டிட் குயீன் படத்தில் கொள்ளைக்காரி பூலன் தேவியாக நடித்த ஸீமா பிஸ்வாஸுக்கு தான் அந்த ஆண்டின் சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. தனது நடிப்பைவிட விருதுக்குத் தகுதியானது அவரது நடிப்பு. அதனுடன் போட்டி போட்ட தனக்கு சிறப்புக் குறிப்பிடல் கிடைத்ததென்பதே மிகவும் பெருமைக்குரிய விஷயம் என்றார் ரோஹிணி!

ரோஹிணியின் நடிப்பைப் போலவே அவரது வார்த்தைகளும் அற்புதமானதாக எனக்குத் தோன்றியது. தான் என்பதைத் தவிர வேறு எதுவுமே முக்கியமில்லாத இந்த காலத்தில், போட்டி பொறாமைகளைத் தவிர வேறு எதுவுமே காணக்கிடைக்காத இடத்தில் உண்மையும் நேர்மையும் இன்னும் கொஞ்சம் மீதமிருக்கிறதே என்று எண்ணிக்கொண்டேன். எல்லையற்ற உண்மையும் நேர்மையும் வெளிப்படுத்திய இந்தியச் சினிமாவின் படைப்புகளைப் பற்றி, படைப்பாளிகளைப் பற்றி நான் எழுதப்போகிறேன். அறிவுரைகளுக்கு நன்றி. musicshaji.blogspot.in/2014/11/blog-post_15.html

கருத்துகள் இல்லை: