வியாழன், 6 ஆகஸ்ட், 2015

சகல அயோக்கியரகளையும் வெட்கப்படவைத்த தினமணி வைத்தி!

editorரலாறு கண்ட அயோக்கியர்களை விஞ்சிவிட்டார் தினமணி வைத்தி. கொன்றவனுக்கு தீபாராதனைக் காட்டிவிட்டு செத்தவர் மீதே கத்தியைச் செருகும் ஆளைப் பார்த்ததுண்டா? பார்க்காதவர்கள் ( 03-08-15 ) தினமணி தலையங்கத்தில் பார்க்கலாம். ” தன்னை காந்தியவாதி என்று கூறிக்கொள்ளும் ஒருவர் செல்லிடைப்பேசி கோபுரத்தில் ஏறி அதன் உச்சிக்கு சென்று அமர்ந்ததும் , தற்கொலை செய்து கொள்வேன் என்று அச்சுறுத்தியதும் எப்படி சரி? சசிபெருமாள்… நடத்திய போராட்டம் அறப்போராட்டமும் அல்ல, காந்திய வழிமுறையும் அல்ல.. சசிபெருமாள் வன்முறையாளராக மாறிவிட்டது மிகப்பெரிய சோகம்..” குன்ஹாவின் தீர்ப்புக்குப் பிறகு ‘அகிம்சை வழியில்’ போராடிய அம்மாவின் வழிமுறையில் அமைந்த அரசு விளம்பரங்களை வாங்கிக்கொள்ளும் அப்பாடக்கர் ‘காந்தியவாதி’ வைத்தியின் வேத வாக்கியம் இது. அடுத்த இழவெடுத்த  ராஜ்ய சபா எம்பியோ அல்லது மந்திரியோ நிச்சயம் இவன்தாய்ன் 

‘வாழும் காந்தி ‘ அம்மா இருக்கட்டும், வைத்தி வறண்டும் காந்தியே கூட அம்பேத்கார் தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக “இரட்டை வாக்குரிமை ” கோரிக்கையை முன்னெடுத்த போது எரவாடா சிறையில் ‘சாகும் வரை உண்ணாவிரத’மிருக்க சம்மணம் போட்டவர்தானே ! இப்படி பல ‘சாகும் வரைகளால்… ‘ பிரிட்டிஷ் அரசை வாழவைத்தவர் காந்தி. சசிபெருமாள் கையாண்ட நடைமுறை தன்னை வருத்திக்கொள்வது.
என்ன ! காந்தி உச்சியில் ஏற பிர்லாவின் உதவி கிடைத்தது, பரிதாபம்! சசிபெருமாளுக்கு ஒரே ஒரு செல்லிடப்பேசி கோபுரம்தான் கிடைத்தது. காந்தி தற்கொலைப் பாதைக்கு மிரட்டினால் அகிம்சை ! சசிபெருமாள் உயிரை பணயம் வைத்து தன்னை வருத்திக் கொண்டால் வன்முறையா? தள்ளாடும் தமிழகத்தை தூக்கி நிறுத்த தன்னுயிர்பாராது களம் புகுந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை தாக்கிச் சிதைக்கும் போலீசின் அத்துமீறலை அனைத்து பத்திரிகைகளும் படத்தோடு போட்டு முகத்திரையை கிழிக்கையில் ‘வன்முறை எதிர்ப்பாளர்’ வைத்தி மட்டும் செய்தியை வேண்டா வெறுப்பாய் ‘உள்’ குத்து விட்டு, காக்கிகள் செய்த கொடுமையையும் தனது அகிம்சை அடிக்கட்டில் அமுக்கி விட்டார்.
SASI_PERUMAL
காந்தியவாதி சசி பெருமாளை வன்முறையாளர் என்று சொன்ன ஒரே ஆள் தினமணி வைத்திதான்!
சசிபெருமாள் கோபுரத்தில் ஏறியதையே சகிக்க முடியாத வன்முறையாக வரையறுக்கும் இந்த வாய்ப்பாட்டுக்காரர், போராடும் மாணவக் கழுத்தில் ஏறும் போலீசின் பூட்சை மட்டும் கண்டு கொள்ளாமல் ஒன்பது துவாரங்களிலும் ஊமையாகிக் கிடக்கிறார்.
தமிழகத்தை சாகடிக்கும் மதுவை ஒழிக்கும் கருவியாக சசிபெருமாளின் உடலைப் பயன்படுத்தும் போராட்டக்காரர்களை பார்த்து மட்டும் கச்சம் வரிந்து கட்டி கருவுகிறார், “உடலைப் பெற்றுக்கொள்ள மாட்டோம் என்று அடம் பிடிக்கிறார்கள், இப்படி ஒவ்வொரு பிரச்சனைக்கும் போராட்டம் என்ற பெயரில் தற்கொலை, தீக்குளிப்பது என்று எல்லோரும் தொடங்கி விட்டால் சட்டம்- ஒழுங்கு என்னவாகும்? நிர்வாகம் எப்படி நடைபெறும் ? ” ( தினமணி- தலையங்கம் ) வைத்தியின் வயித்தெரிச்சல் இது ! உலகமே குடிகார அரசுக்கு எதிராக காறித் துப்பும் வேளையில், அரசின் கருத்துக்கு ஒளியூட்ட ஜெயா டி. வி. க்கு தேடினாலும் கிடைக்காத ஒரே கொள்ளிக்கட்டை இந்தத் தலையங்கம்.
கைது செய்யப்பட்ட மாணவர்களின் சட்டையைக் கிழிப்பதும், கட்டையில் அடிப்பதும்தான் சட்டம்-ஒழுங்கா? வைத்தி அளந்து கொட்டும் சட்டப்படியே, கைது செய்ய பிடித்தவர்களை அடிப்பதும், ஆபாசமாய் பேசுவதும் , கல்லால் அடிப்பதும், கழுத்தை நெறிப்பதும் அகிம்சையின் அடையாளங்களா? மயக்கமடைந்த ஒரு மாணவிக்கு உதவி செய்யும் மாணவிகளையும் தடுத்து, அடித்து இழுப்பதுதான் நிர்வாக நடைமுறையா? இந்த பயங்கரவாத நிர்வாகத்துக்காகத்தான் வைத்தியின் வன்மனம் துடிக்கிறதே ஒழியே, தன்னை விட யோக்கியமாய், சமுகப் பொறுப்பாய் செயல்பட்ட மாணவர்கள் வதைபட்டற்காக ஒரு வருத்தமும் இல்லை. இப்பொழுதுதான் தெரிகிறது போலீசின் கைகளில் இருந்த முழுக்கல் ‘அகிம்சாமூர்த்தி ‘ வைத்தியின் மூளை!
மதுவை ஒழிக்க பாடுபடுவர்களிடம் வந்து ஒரு ‘நூல்’ பிசகாமல் “நீ அகிம்சாவாதியா? ” என்று அளவு பார்க்கும் இந்த யோக்கியர் ஆர்.எஸ்.எஸ். குருமூர்த்தி, ” அசோகர் போரை வெறுத்தது தவறு, அர்ச்சுனனுக்கு போர் உபதேசம் செய்த கிருஷ்ணனை போல வாய்ப்பில்லாமல் போயிற்று, அணுகுண்டு வேண்டும்! என்று வல்லரசு வன்முறைக்கு மனதை பிசையும் கட்டுரையை கட்டம் கட்டி பிரசுரிப்பது ஏன்? அமித்ஷாவுக்கும், மோடிக்கும் இந்த பூணூல் அளவு பொருந்துமா? அடிபட்டவனிடம் வந்து அகிம்சை உபதேசம்! அடிப்பவனிடம் போய் கீதா உபதேசம்! இதுதான் அவாளின் ‘தர்மம்’! மாக்யவல்லி, காந்தி , ராஜாஜி என்று சுற்றி வளைப்பதை விட பேசாமல் டாஸ்மாக் கடைக்கு போலீசோடு போய் காவலுக்கு உட்காரலாம் வைத்தி. பின்னே! நிர்வாகத்தை எப்படி நடத்துவது?!
தலித்துக்களுக்கு உருவாக்கப்பட்ட சேரியிலேயே டாஸ்மாக் கடைகள் இருக்க வேண்டுமாம்! – தினமணி வைத்தியின் விச யோசனை!
போராடும் மக்களிடம் வந்து வன்முறை கூடாது என்று நிபந்தனை விதிக்கும் இந்த நியாயவான், சமூக வன்முறையான மதுவை இறக்கிவிடும் அரசுக்கு மட்டும் எந்த நிபந்தனையும் இல்லாமல் வழங்கும் ஆலோசனை என்ன தெரியுமா? ” இலவசத்துக்கு விடுதலை தரவேண்டும், கல்லூரி, பள்ளி, வழிபாட்டுத்தலங்கள் அருகிலிருக்கும் மதுக்கடைகளை அகற்றி மெல்ல, மெல்ல ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறத்துக்கு கடைகளை கொண்டு செல்ல வேண்டும்…”.
ஊருக்கு உள்ளே, வெளியே எங்குமே மதுக்கடைகள் வேண்டாம் என்று தமிழகம் வீறு கொண்டு போராடும் தருணத்தில், நத்தம் விசுவநாதன் பதவிக்கே ஆபத்து வரும் வகையில் அம்மாவுக்கு உடனடி ஆலோசனை வழங்குகிறார் வைத்தி.
” ஊருக்கு வெளியே.. ஒதுக்குபுறத்தில்” முன்பு தாழ்த்தப்பட்டவர்களை வைத்த வர்ண கொடூரம் இப்போது பாட்டிலை மட்டும் வைத்தால் போதும் என்கிறது. “செத்தாலும் விட மாட்டான் புரோகிதன்” என்று பெரியார் எவ்வளவு சரியாகச் சொல்லி இருக்கிறார். சசிபெருமாள் மரணத்தின் அரசியலை எல்லோரும் மக்களுக்காக விரிவுபடுத்தும் வேளையில், இந்தச் சந்தர்ப்பத்திலும் ‘ ஊருக்கு வெளியே.. ஒதுக்குப்புறத்தில்’ என்பது மீண்டும் உழைக்கும் மக்கள் , தாழ்த்தப்பட்டவர்கள் தலையில் போதையை ஏற்றுவதைத் தவிர வேறென்ன?
உங்களுக்கு மயிலாப்பூர் ஊர் என்றால், எங்களுக்கு மாங்கொல்லை குடிசைகள்தான் ஊர், உங்களுக்கு திருவல்லிக்கேணி ஊர் என்றால், அயோத்திகுப்பம்தான் எங்கள் ஊர்… உங்களுக்கு புரசைவாக்கம் ஊர் என்றால், எங்களுக்கு புளியந்தோப்பு ஊர்.. இப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒதுக்குப்புறத்தில், ஊருக்கு வெளியே உழைக்கும் மக்களின் வசிப்பிடங்கள்.. இதில் எந்த ஊருக்கு வெளியே வைப்பது?
கடை கூடவே கூடாது என்று மக்கள் களம் காணும் இந்தநேரத்தில் .. இப்போதைக்கு இப்படி ‘கடையை வைத்துக்கொள்ளலாம்’ என்று அம்மாவுக்கே யோசனை வழங்குவதை விட ஒரு கொடிய வன்முறை இருக்க முடியுமா? கொள்கைகள் வேறாக இருக்கலாம், ஒரு குடிகாரனின் காலைத்தொட்டு குடிக்காதீர்கள் என்று கேட்டுக்கொண்ட அறுபது வயது சசிபொருமாளையே வன்முறையாளர் என்று வாய்கூசாமல் கூறும் வைத்தியை விட ஒரு வன்முறையாளன் உலகில் உண்டா?

  • துரை.சண்முகம் வினவு.com 

கருத்துகள் இல்லை: