1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் இறுதித்
தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் யாகுப் மேமனுக்கு தூக்கு தண்டனை வழங்கியது.
கருணை மனு, தண்டனை நிறுத்தி வாய்ப்புக்கான கோரிக்கை என பல்வேறு வழக்கு
அறிஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் முயற்சிகளைப் புறந்தள்ளி
யாகுப் மேமனை இன்று (30-07-2015) அதிகாலை தூக்கில் போட்டுள்ளது இந்திய
அரசு.
1993- ஆம் மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி, இந்த
வழக்கில் சிபிஐ-க்கு உதவி பல்வேறு தகவல்களை அளித்த, இந்திய அரசை முழுமையாக
நம்பிய ஒருவரை அறமற்ற முறையில், கருணை காட்டாமல் கொலை செய்துள்ளது இந்திய
அரசு.
இந்த வழக்கில் யாகுப் மேமனின் ஒத்துழைப்பு அளப்பரியது என
முன்னாள் உளவுத் துறை அதிகாரி ராமன் அவர்கள் தன்னுடைய கட்டுரையில் உறுதி
செய்துள்ளார்.
மரண தண்டனை கூடாது எனும் குரல் ஒருபுறமும், யாகுப்பைப் போன்ற
பயங்கரவாதிகள் தப்பிக்கவே கூடாது என்று மறுபுறமும் விவாதங்கள் நடைபெற்றும்
வரும் இன்றைய நிலையில், ஒருவரை தூக்கிலிட்டுக் கொலை செய்வதன் மூலம்
பயங்கரவாதத்தை ஒழித்து விடமுடியும் என்பதே ஆகப்பெரிய முட்டாள்தனம்.
பயங்கரவாத ஒழிப்பு எனும் ஒரு காரணத்தை மட்டும் வைத்துக்
கொண்டுதான், அப்சல் குரு, அஜ்மல் கசாப், இப்போது யாகுப் மேமன் எனத்
தொடர்ந்து ரத்தம் குடித்து வருகிறது இந்திய மனசாட்சி! ஆனால், இன்றும்
பயங்கரவாத அச்சம் தொடர்ந்து இருந்துகொண்டு தான் இருக்கிறது.
பயங்கரவாத ஒழிப்பின் ஊற்றுக்கண்ணை அடைக்காமல், ஒரு சிலரை
தூக்கிலிடுவதன் மூலம் பயங்கரவாத ஒழிப்பு சாத்தியமில்லை என்பது இந்திய
அரசும், அதிகார வர்க்கமும் அறிந்ததுதான்.
யாகுப் மேமன் போன்றவர்களின் தூக்கு, லலித் மோடி உடனான பா.ச.க
தொடர்பு, வியாபம் ஊழல் போன்றவற்றிலிருந்து ஓரிரண்டு நாட்களுக்கு
வேண்டுமானால் இந்திய அரசுக்கு விலக்கு அளிக்குமே ஒழிய, பயங்கரவாதத்தை
தடுத்து நிறுத்திவிடாது.
யாகுப் மேமனைப் போன்று நம்பி வருபவர்களை கழுத்தறுக்கும்
இந்திய அரசு, அரசை முற்றிலுமாக வெறுக்கும் டைகர் மேமன் போன்றவர்களின்
நம்பிக்கையைக் தொடர்ந்து காப்பற்றி வருகிறது.
ஆம்! இந்தியாவுக்கு போகிறேன் என்று சொன்ன யாகுப்பிடம், டைகர்
மேமன் சொன்ன வார்த்தைகளை இன்று உண்மையாக்கியிருக்கிறது இந்திய அரசு. டைகர்
மேமனின் வார்த்தைகள்தான் இவை, ” காந்தியவாதியாக இந்தியாவுக்குப்
போகிறாய்; ஆனால் நீ கோட்சேவாக தூக்கிலிடப்படுவாய் ” visai.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக