செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015

விஜய்: செல்போனில் படத்தை எடுத்து எங்க பொழப்புல மண்ண போடுறாங்க...

ரசிகர்களின் பலத்த ஆரவாரங்களுக்கு மத்தியில் மேடைக்கு வந்த விஜய், “இந்தப் படத்தில் எனக்கு ஜோடிகளாக இரண்டு பெண் புலிகள் நடிச்சிருக்காங்க. புலிக்கு பிறந்தது பூனையாதுன்னு நிரூபித்து கொண்டிருக்கும் உலக நாயகன் கமல் சாரின் மகள் ஸ்ருதிஹாசன். மும்பை நமக்கு கொடுத்திருக்கிற இரண்டாவது குஷ்பூ ஹன்சிகா. இன்னும் நந்தித்தா ஒரு சின்ன கதாபதிரத்தில் ஆனா, முக்கியமான கதாபாத்திரத்தில் நடிச்சிருக்காங்க. அவங்களையும் பாராட்டனும்.
இதில் ஒரு தைரியமான கதாபாத்திரதில், தன்னுடைய அழகாலையும் நடிப்பாலையும் இந்தியாவையே கட்டிப்போட்ட, நம்ம தமிழ்நாட்டில் வளர்ந்த சிவகாசி மத்தாப்பு, ஸ்ரீதேவி மேடம். ஹீரோவா இருந்தப்போ சின்னத்தம்பியா வாழ்ந்தவரு, இன்னைக்கு இருக்கிற ஹீரோஸ் கிட்ட அண்ணன் தம்பியா பழகுறவரு... நம்ம பிரபு சார் அவர்கள். பொதுவா, ஒரு ஹீரோ, இன்னொரு ஹீரோ நடிக்கிற படத்தில் வில்லனா நடிக்க அவ்வளவு ஈசியா ஒத்துக்கமாட்டாங்க... கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப்பின் பெருந்தன்மைக்கு என் நன்றி. 23 ஆம் புலிகேசி படத்தில் நம்ம எல்லோரையும் ரசிக்கவைத்த சிரிக்கவைத்த சிம்பு தேவன், இதில் எல்லாம் கலந்து ஒரு புது முயற்சியை கையாண்டிருக்கார். எல்லா படத்துக்கும் புது முயற்சின்னு சொல்றது வழக்கம். ஆனா, புலி உண்மையாகவே புது முயற்சி தான். ஹிந்தி சினிமாவின் முக்கியமான கேமரா மேன் நட்ராஜ், ஹீரோவா சதுரங்கவேட்டை ஆடினார், இப்போ கேரமா மூலமா புலி வேட்டை ஆடியிருக்கார்.

பொதுவா தாரதப்பட்டையெல்லாம் அடிச்சு புலியை ஓடவைப்பாங்கன்னு கேள்வி பட்டிருகேன். ஆனா இவரு புலியை ஆடவச்சிருக்காரு. அவருதான் தேவி ஸ்ரீ பிரசாத். வந்த நாளில் இருந்து இந்த நாள் வரைக்கும் தன்னுடைய இடத்தை அப்படியே தக்க வைத்திருக்கும் கவிஞர் வைரமுத்து. பொதுவா, பரிட்சை எழுதுறவங்க அதிகமாகவும், மார்க் போடுறவங்க கம்மியாகவும் இருப்பாங்க. ஆனா, சினிமாவுல மார்க் போடுறவங்க அதிகமாகவும் பரிட்சை
எழுதுறவங்க கம்மியாகவும் இருக்காங்க. புலி படத்துக்கு எத்தனை மார்க்குன்னு நீங்கதான் சொல்லனும். படத்தைப் பார்த்துட்டு சொல்லுங்க... ‘தியேட்டர்ல’...! 

ஒரு படத்துல தயாரிப்பாளார்கள் பணத்தையும் மற்றவர்கள் உழைப்பையும் போடுறாங்க... ஆனா, சிலர் எதையும் போடாம, செல்போனில் படத்தை எடுத்து எங்க பொழப்புல மண்ண போடுறாங்க... அதுல அவங்களுக்கு என்ன சந்தோஷமோ தெரியல. நான் என் படத்துக்காக மட்டும் பேசல, எல்லா ஹீரோஸ் படங்களுக்காகவும் தான் பேசுறேன். இது எப்படி இருக்குன்னா... வயித்துல ஆரோக்கியமா வளர்ந்துகொண்டிருக்கும் ஒரு குழந்தையை... சுகப்பிரசவம் ஆவதற்கு முன்னாடியே சிசரியன் பண்ணி சாகடிக்கிற மாதிரி இருக்கு. எனக்கு உண்மையா ஒருத்தர வெருக்கத்தெரியும். பொய்யா ஒருத்தர நேசிக்கவே தெரியாது. 

என் தொடக்க காலத்தில் என்னைப் பற்றி வந்த விமர்சனங்கள் எல்லாமே எல்லாருக்கும் தெரிந்தது தான். அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டிருந்தால், இன்னைக்கு உங்க முன்னாடி விஜய்யா நான் நின்னிருக்க முடியாது. வெற்றிக்கு பின்னாடி ஆண், அல்லது பெண் இருப்பதாக சொல்வார்கள். ஆனா, என் வெற்றிக்கு பின்னாடி நிறைய அவமானங்கள் தான் இருக்கிறது. என்னை நோக்கி வந்த விமர்சனங்களை என்னை வேகப்படுத்துகிற பெட்ரோலாக எடுத்துக் கொண்டேனே தவிற, என்னை எரிக்கிற நெருப்பாக அதை எடுத்துக்கொள்ளவில்லை. 

ஒருவரை அவர் சின்ன வயதில் பலரும் குறை சொல்லிக்கொண்டே இருப்பார்களாம். அவரும் அதை சரி செய்து கொள்வாராம். வளர்ந்த பிறகு அவர் பெரிய தொழிலதிபர் ஆகிட்டாரு. அவரை குறைசொன்னவர்கள் அவர் கம்பெனியில் ஊழியர்களாக இருந்தார்கள். அவர் தான் பில்கேட்ஸ். புரியுது... நீ என்ன பெரிய பில்கேட்ஸா? அப்படின்னு கேக்குறீங்க தானே... தெரியாம சொல்லிட்டேன் மன்னிச்சுருங்க... கடவுள் முன்னாடி மண்டிபோட்டா, யார் முன்னாடியும் எழுந்து நிக்கலாம். நமக்கு தான் எல்லாம் தெரியும், மற்றவர்களுக்கு எதுவும் தெரியாதுன்னு நினைக்க வேண்டாம். நமக்கு அத்தனையும் கற்றுக்கொடுத்தவர்கள் மற்றவர்கள் தான். 

இன்றைக்கு இருக்கிற இளைஞர்கள் மத்தில் நாட்டுப்பற்று இல்லைனு சொல்றாங்க. அதை நான் ஒத்துக்கமாட்டேன். அதை இந்தியா - பாக்கிஸ்தான் கிரிக்கெட்  மேட்ச் நடக்கும் போது பார்க்கலாம். என்ன ஒன்னு, விளையாட்டா எடுத்துக்க வேண்டிய விஷயத்தை சீரியஸா எடுத்துக்கொள்கிறோம். சீரியஸா எடுத்துக்க வேண்டியதை நாம விளையாட்டாக் கூட எடுத்துக்ககொள்வதில்லை. நான் சொல்ற இந்த விஷயங்களை கேட்டு ஒட்டுமொத்தமா எல்லாரும் திருந்திடுவாங்களான்னா... அது நடக்காத காரியம். நடித்த பல்லாண்டு வாழ்க படத்தில்  ‘ஒரு மனிதனின் முகத்தை சரி பண்ணா, இந்தியா மேப்பே சரியாகுது. ஒவ்வொரு மனிதனையும் சரி பண்ணா ஏன் இந்தியாவே சரியாகாது’ என்று எம்.ஜி.ஆர் சொல்வார். இதெல்லாம் ஏன் உங்ககிட்ட பேசுறேன்னு தெரியவில்லை. உங்ககிட்ட சொல்லனும்னு தோணுச்சு. 

அடுத்த நிமிடம் நிச்சயம் இல்லாத வாழ்க்கை. முடிந்த வரைக்கு எல்லோரையும் சந்தோஷப்படுத்தி வாழுங்க. சினிமாவை தொழிலா கொடுத்த ஆண்டவனுக்கும், அதுக்கு அஸ்திவாரமா இருக்கும் ரசிகர்களுக்கும் என் நன்றி. எனக்கும் என் ரசிகர்களுக்கும் மற்றவர்களை வாழவைத்து அழகு பார்ப்பதுதான் பிடிக்கும். என்ன நண்பா...” என்று விஜய் கேட்டது... தலைவா என முழங்கினார்கள் ரசிகர்கள் nakkheeran,in 

கருத்துகள் இல்லை: