ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

சசிபெருமாளுக்கு நடந்தது என்ன?: ஜெயசீலன் விளக்கம்

நாகர்கோவில்:சசிபெருமாள் இறப்பதற்கு முன்னர் அலைபேசி டவரில் நடந்தது என்ன என்பது பற்றி அவருடன் டவரில் ஏறிய உண்ணாமலைக்கடை பஞ்சாயத்து தலைவர் ஜெயசீலன் விளக்கமளித்த்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:டாஸ்மாக் கடையை அகற்ற மதுபோதை ஒழிப்பு மக்கள் இயக்கம் சார்பில் தீக்குளிப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. நானும், சசி பெருமாளும் மண்ணெண்ணை பாட்டிலுடன் அலைபேசி டவரில் ஏறினோம். பாதி துாரம் ஏறியதும் களைப்பு காரணமாக நான் இருந்து விட்டேன். ஆனால் சசி பெருமாள் உச்சிவரை சென்று விட்டார். அவர் எனக்கு மேலே சுமார் 100 அடி உயரத்தில் இருந்ததால் அவருடன் என்னால் பேசமுடியவில்லை. வெயில் கடுமையாக இருந்ததால் நேரம் செல்ல செல்ல களைப்பு ஏற்பட்டது. நீண்ட நேரம் ஆகியும் கலெக்டரோ, எஸ்.பி.யோ வரவில்லை.
ஆர்.டி.ஓ., தாசில்தார், டி.எஸ்.பி. என அதிகாரிகள் நின்று கொண்டிருந்தனர். அதிகாரிகள் மெத்தனம் காட்டியதால் எங்களுக்கு ஆதரவாக மக்கள் மறியலில் ஈடுபட்டனர். அதன் பின்னர் ஏழு நாட்களில் கடையை அகற்றுவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இந்த நேரத்தில் என்னால் கீழே இறங்க முடியாத அளவு சோர்வாக இருந்தேன். அப்போது தீயணைப்பு வீரர்கள் மேலே வந்தனர்.

நான் சசிபெருமாளை முதலில் கீழே இறக்கும்படி கூறினேன். எனது அருகில் ஒரு வீரர் இருந்தார். மற்றவர்கள் மேலே சென்றனர். தீயணைப்பு வீரரகள் சூழந்து நின்றதாலும், வெயில் கடுமையாக இருந்தததாலும், மேலே என்ன நடந்தது என்பதை என்னால் பார்க்க முடியவில்லை. சசிபெருமாளை கீழே கொண்டு வந்த போது அவரது மூக்கில் இருந்து ரத்தம் வந்து கொண்டிருந்தது. கழுத்தில் கயிறு இருந்தது. கயிறை உடனடியாக அகற்றாதது ஏன்? என்று தெரியவில்லை. சசிபெருமாளை டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் இறந்து விட்டதாக கூறினார்.

அதிகாரிகள் வேகமாக செயல்பட்டிருந்தால் சசிபெருமாளை காப்பாற்றியிருக்க முடியும். ஒரு உயிர் போன பின்னர் அந்த கடையை மூடியுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஒரு போலீஸ் அதிகாரி தரக்குறைவாக பேசியது கண்டிக்கத்தக்கது. சசிபெருமாளின் மரணம் மதுவிலக்குக்கு ஒரு படியாக அமைய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

சசிபெருமாள் பிரேத பரிசோதனை முடிவு :சசிபெருமாள் இறக்க மூச்சுதிணறல்தான் காரணம் என்று முதற்கட்டமாக மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
சசிபெருமாள் உடலை மூன்று டாக்டர்கள் குழுவினர் மருத்துவ பரிசோதனை நடத்தினர். இது முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. ஒன்றரை மணி நேரம் இந்த பரிசோதனை நடந்தது.
அவரது மரணத்துக்கு கயிறுகழுத்தில் இறுக்கி மூச்சுதிணறல் ஏற்பட்டதுதான் காரணம் என்று முதற்கட்டமாக தெரியவந்துள்ளது. எனினும் ரசாயன பரிசோதனை முடிவு வந்த பின்னரே இறுதியான முடிவு கூறமுடியும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

மருத்துவக்கல்லுாரியில் பரபரப்பான அந்த 7 மணி நேரம்

காலை 6.00: சசி பெருமாளின் தம்பி செல்வம், அவரது மகன் விவேக் மற்றும் உறவினர்கள் சிவப்பு குவாலிஸ் காரில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லுாரி ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அப்போது விரல் விட்டு எண்ணும் அளவுதான் ஆட்கள் அங்கு நின்று கொண்டிருந்தனர். கல்லுாரி வளாகத்தில் தடுப்பு வேலிகள் வைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.

காலை 8.30:வருவாய் மற்றும் போலீஸ் அதிகாரிகள் வந்து தங்கள் வாகனம் அருகே நின்று கொண்டிருந்தனர். மீடியாக்கள் செல்வத்தை பேட்டி எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது செல்வம், மதுவிலக்கு கொள்கையில் அரசு தனது முடிவை அறிவித்தால்தான் சசிபெருமாள் உடலை வாங்குவோம் என்று தெரிவித்தார்.

காலை 9.10:அகஸ்தீஸ்வரம் தாசில்தார் வாசுகி, செல்வத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பிரச்னைக்குரிய கடை நிரந்தரமாக மூடப்பட்டு விட்டது என்றும், அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் மதுக்கடைகளை படிப்படியாக மூடுவோம், அல்லது முதற்கட்டமாக பள்ளி, கல்லுாரி, வழிபாட்டு ஸ்தலம் முன் உள்ள கடைகளை முதற்கட்டமாக அகற்றுவோம் என்று அரசு அறிவிப்பு வெளியிட்டால் மட்டுமே சசிபெருமாள் உடலை பெற்றுக்கொள்வோம் என்று செல்வம் உறுதியாக கூறினார். இந்த பேச்சின் போது அண்ணனை பற்றி சொல்லும் போது செல்வம் கண்கலங்கினார். அப்போது தாசில்தாரும் கண்ணீர் விட்டார்.

காலை 9.50:நாகர்கோவில் ஆர்.டி.ஓ, மதியழகன் , செல்வத்திடம் பேச்சுநடத்தனார். ஆனால் அரசு மதுவிலக்கு அறிவிப்பு வெளியிடவேண்டும். அதுவும் 12 மணிக்குள் வெளியிட வேண்டும், அல்லதாத பட்சத்தில் நாங்கள் சேலம் புறப்பட்டு சென்று விடுவோம் என்று உறுதியாக தெரிவித்தார்.

காலை 10.00: டாக்டர்கள் ராஜேஷ், ஜாண்சன், ஜெர்மன்பிரபா ஆகிய மூன்று டாக்டர்கள் குழுவினர் சசிபெருமாள் உடலை மருத்துவ பரிசோதனை செய்ய தொடங்கினார்.

இந்த நேரத்தில் மாவட்ட செயலாளர்கள் தி.மு.க. சுரேஷ்ராஜன், காங்கிரஸ் பாலையா, அசோகன்சாலமன், மதிமுக தில்லை செல்வம், பா.ஜ., கணேசன், மா.கம்யூ., முருகேசன், சசிபெருமாளுடன் டவரில் ஏறிய உண்ணாலைகடை பஞ்., தலைவர் ஜெயசீலன், பிரின்ஸ் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் குமாரதாஸ் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் நுாற்றுக்கணக்கானோர் கூடினர். இந்த சம்பவத்துக்காக நானகாம் தேதி குமரி மாவட்டத்தில் முழு கடை அடைப்பு நடத்த முடிவு செய்தனர்.

காலை 11.20:அதிரடிப்படை போலீசார் கூடுதலாக வரழைக்கப்பட்டு, மக்கள் கூடி நின்ற இடத்தின் அருகே அணிவகுப்பு நடத்தியதால் பதட்டம் ஏற்பட்டது.

காலை11.30:சசிபெருமாள் உடல் மருத்துவ பரிசோதனை நிறைவு பெற்றதாக டாக்டர்கள் அறிவித்தனர்.இந்த நேரத்தில் சசிபெருமாள் மகன் விவேக் மயக்கம் அடைந்ததால் அவரை ஏற்றிக்கொண்டு கார் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றது.

பகல் 11.45:அனைத்து கட்சி பிரதிநிதிகள் மீண்டும் கூடி, உயர் அதிகாரிககள் வந்து சசிபெருமாள் உறவினரிடம் பேசவில்லை என்றும், அரசியல் கட்சி பிரதிநிதிகளை மதிக்கவில்லை என்றும் கூறி, மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

பகல் 12.30:அனைத்து கட்சி பிரதிநிதிகள் ஊர்வலமாக சென்று மருத்துவக்கல்லுாரி ரோட்டில் மறியல் நடத்தினர். இந்த நேரத்தில் கல்லுாரிக்கு வந்த கலெக்டர் சஜ்ஜன்சிங்சவான், காரை துாரத்தில் விட்டு விட்டு நடந்து வந்தார்.

பகல் 12.35:போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து கலெக்டர் பேசினார். இதில் குமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரி, வழிபாட்டு ஸ்தலம் அருகே உள்ள கடைகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதை 20 நாட்களில் வேறு இடத்துக்கு மாற்றுவோம் என்று கலெக்டர் உறுதியளித்தார். இதை ஏற்றுக்கொண்ட கட்சி பிரதிநிதிகள் போராட்டத்தை விலக்கி கொண்டனர்.

பகல் 12.40: சசிபெருமாளின் தம்பி செல்வத்திடம் கலெக்டர் சஜ்ஜன்சிங்சவான் பேசினார். ஆனால், மதுக்கடைகள் மூடுவது தொடர்பாக அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றுசெல்வம் உறுதியாக கூறினார். ஒரு கட்டத்தில் கன்னியாகுமரி போல சேலத்திலும் பள்ளி, கல்லுாரி, வழிபாட்டு ஸ்தலம் அருகே உள்ள கடைகளை அகற்றும் முடிவை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. அனைத்து கட்சி பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதையும் செல்வம் ஏற்க மறுத்தார்.

பகல் 1.00: செல்வம் மற்றும் சசிபெருமாள் மகன் விவேக் உள்ளிட்ட உறவினர்கள் தாங்கள் வந்த காரில் புறப்பட்டு சென்றனர்.  dinamalar.com

கருத்துகள் இல்லை: