சனி, 8 ஆகஸ்ட், 2015

தலித் மக்களின் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய பா.ஜ.க. அரசு திட்டமிடுகிறதா? திருமாவளவன் கேள்வி

தலித் மக்களின் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய பா.ஜ.க. அரசு திட்டமிடுகிறதா? என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜக தலைவர் அமித்ஷா இரண்டு நாட்களுக்கு முன் மதுரையில் ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறார். தலித் மக்களின் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதற்கு பாஜக முயற்சிக்கிறதோ என்ற ஐயத்தை அந்தக் கூட்டம் ஏற்படுத்தியிருக்கிறது. இதை தமிழக பாஜக தலைவர் தெளிவுபடுத்தவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். இடஒதுக்கீட்டை ரத்து செய்யப்போகிறோம் என்று கூறினால் மிகப்பெரிய எதிர்ப்பு வெடிக்கும் என்பதைப் புரிந்துகொண்ட பாஜகவினர் மிகவும் தந்திரமாக தேவேந்திரர்குல வேளாளர்களின் பெயரால் ஒரு சிலரைக்கொண்டு ஒரு கூட்டத்தை நடத்தி. ‘தங்கள் சமூகத்தை அட்டவணை சாதிகளின் பட்டியலிலிருந்து நீக்கிவிடவேண்டும், தங்களுக்கு இட ஒதுக்கீடு தேவையில்லை’ எனப் பேசச் செய்திருக்கிறார்கள்.
அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகியிருந்தது கவனிக்கத்தக்கதாகும். 

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்களை வைத்து கூட்டம் நடத்தி அவர்கள்தான் அந்த சமூகத்தின் பிரதிநிதிகள் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி “இட ஒதுக்கீடு வேண்டாம் என அவர்களே சொல்கிறார்கள். அதனால் எஸ்சி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை ரத்து செய்தாலென்ன” என்ற பிரச்சாரத்தை நாடெங்கும் மேற்கொள்வதுதான் பாஜகவின் செயல்திட்டமா? என்பதை பாஜக விளக்கவேண்டும். 

முன்னேறிய சாதியான ஜாட் சாதியைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து அவர்களுக்கு இட ஒதுக்கீடு தருவதற்கு கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஆணை பிறப்பித்தார்கள். அதை உச்சநீதிமன்றம் ரத்துசெய்தது. ஆனால் அதற்குப் பிறகும் ஜாட் சாதியை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க பாஜக முயற்சிசெய்து வருகிறது. ஜாட் சாதி பின் தங்கியிருக்கிறது; அதற்கு இடஒதுக்கீடு கொடுக்கவேண்டும். தலித்துகள் முன்னேறிவிட்டார்கள் அவர்களுக்கு இடஒதுக்கீட்டை ஒழித்துவிடவேண்டும் என்பதுதான் பாஜகவின் நிலைப்பாடா? 

திரு வி.பி.சிங் அவர்கள் மண்டல் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளித்தபோது அதை எதிர்த்து அவரது ஆட்சியைக் கவிழ்த்த கட்சிதான் பாஜக. இப்போது பெரும்பான்மை பலத்தோடு ஆட்சியில் இருப்பதால் தலித் மக்களின் இடஒதுக்கீட்டை ரத்துசெய்துவிடலாம் என அக்கட்சி நினைக்கக்கூடும். அப்படியொரு முயற்சியில் பாஜக அரசு ஈடுபட்டால் தலித் மக்கள் தமது உயிரையும் கொடுத்து அந்தச் சதியை முறியடிப்பார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

ஆதிக்க சாதிகளே இடஒதுக்கீடு வேண்டுமென்று போராடுகிறபோது அட்டவணை சாதிகளின் இடஒதுக்கீட்டைப் பறிப்பதற்கு ஆர்.எஸ்.எஸ். செய்யும் சதியை உழைக்கும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். nakkheeran.in

கருத்துகள் இல்லை: