வியாழன், 6 ஆகஸ்ட், 2015

யாகூப் மேமனுக்கும் அந்தப் ‘பாழாய்ப் போன’ குற்ற உணர்வு வராமல் போயிருந்தால்?

RSS மும்பை குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும் என்கிறீர்களே, அதற்கு முன் 1992-93 மும்பை கலவரம், பாபர் மசூதி இடிப்பு கலவரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு மட்டும் நீதி வேண்டாமா?
– யாகூப் மேமனை தூக்கில் ஏற்றிக் கொன்ற பிறகும் அதற்கு முன்னரும் ஊடக விவாதங்களில் முஸ்லீம் கட்சிகள், இடதுசாரிகள், ஜனநாயக சக்திகள் எழுப்பும் கேள்வி இது.
இந்து மதவெறியர்களுக்கு இது பதிலளிக்க சிரமமான கேள்வி என்று கருதுகிறீர்களா? ஒரு போதுமில்லை.

இந்திய டுடே தொலைக்காட்சி விவாதத்தில் மும்பையின் ஏடிஜிபி ஒருவர் இதற்கு போகிற போக்கில் தெளிவுடன் பதிலளித்தார். ஒரு வழக்கில் விசாரணை, சாட்சிகள், புலனாய்வு, கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை வைத்துத்தான் நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்குகின்றன. அதன்படி மும்பை குண்டு வெடிப்பில் நீதி நிலைநாட்டப்பட்டிருக்கிறது. மும்பை கலவரத்தில் போதிய அளவுக்கு புலனாய்வில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றார் அந்த கனவான்.
ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அவ்வாறு யார் குற்றவாளிகள் என்று குறிப்பிட்டிருக்கிறதே என்று கேட்டதற்கு, கமிஷன் என்பது நீதிமன்றம் அல்ல, அதன் அறிக்கையை ஒரு அரசாங்கம் ஏற்கலாம், மறுக்கலாம் அது விசயமில்லை என்றார்.
முடிந்ததா?
ஆர்.எஸ்.எஸ் வானரங்கள் இந்த நாட்டில் நடத்திய கலவங்களில் கொல்லப்பட்டவர்களுக்கு எப்போதும் நீதி கிடைக்காது. ஏனெனில் அந்த வழக்குகளில் ‘விசாரணையும், புலனாய்வும்’ போதிய அளவில் நடக்காது. ஏனெனில் இது இந்து நாடு. ஹிந்துக்களின் தருமத்தை நிலை நாட்ட நடந்த போர்களை இங்கே எந்த சட்டமும், நீதி மன்றமும் விசாரிக்காது.
ஒருக்கால் மும்பை கலவர வழக்கில் கூட ஆதாரங்களுடன் யாகூப் மேமன் தானாக வரவில்லை என்றாலும் விசாரணை இந்த அளவு நடந்திருக்காதுதான்.
ஆனால் யாகூப் மேமனுக்கு குற்ற உணர்வு இருந்தது.
இவ்வளவிற்கும் அவர் மும்பை குண்டு வெடிப்பில் கடுகளவு கூட சம்பந்தப்படவில்லை. அவரது அண்ணன் நடத்திய சதி தெரிந்து சொல்லணாத் துயரம் கொண்டதனாலேயே இங்கு குடும்பத்துடன் சரணடைந்து இறுதியில் உயிர் விட்டார்.
தூக்கில் தொங்கும் இறுதி விநாடியில் கூட தான் குற்றவாளியில்லை என்று கடவுளை தொழுதவாறே இறந்து போயிருக்கிறார். கடைசியாக பார்த்த வழக்கறிஞரிடமும் தனது அண்ணனது பாவத்திற்காக தூக்கில் தொங்கப் போவதாக கூறியிருக்கிறார். தான் இந்த குற்றத்தில் சம்பந்தப்படவில்லை என்பதாலேயே நீதிமன்றங்களும், குடியரசுத் தலைவர் – கவர்னர் வகையறாக்களும் இறுதியிலாவது கருணை அளவிலாவது விடுதலை செய்து விடுவார் என்று அப்பாவித்தனமாக நம்பினார். ஆம் குற்ற உணர்வு உள்ள நல்லவர்கள் அப்படித்தான் நம்புவார்கள்.
சரி இப்போது இப்படி யோசியுங்கள்!
மும்பை கலவரம், பாபர் மசூதி, 2002 குஜராத் கலவரத்தில் முஸ்லீம் மக்களைக் கொன்ற இந்துமதவெறியர்கள் யாரும் தூக்கில் தொங்கப் போவதில்லை. தொங்குவதற்கு முழு அருகதை உள்ள மாயா கோட்னானிக்கு சிறை தண்டனை கூட கிடையாது.
காரணம் பா.ஜ.க ஆள்கிறது, மோடி பிரதமர், இல்லை காங்கிரஸ் ஆட்சியென்றாலும் இதுதான் நிலைமை என்கிறீர்களா?
உண்மைதான். என்றாலும் இன்னுமொரு காரணமும் உண்டு.
பாபர் மசூதி மற்றும் மும்பை கலவரத்தில் முஸ்லீம்களது வீடுகளுக்கு மை தடவி தாக்கி சூறையாடிய சிவசேனா குண்டர்களுக்கும், அதன் தலைவர் பால்தாக்கரே இன்னபிற தளபதிகளுக்கும், 2002 குஜராத் கலவரத்திற்கு தலைமை தாங்கிய மோடி- அவரது தளபதிகளுக்கும், பிறகு அசீமானந்தா, பிரக்யா சிங் தாக்கூர், இன்ன பிறர் யாருக்கும் என்றாவது எப்போதாவது கடுகளவாவது குற்ற உணர்வு வருமா?
வருந்துகிறீர்களா என்று கரண் தாப்பர் கேள்விக்கு சினங் கொண்டு வெளியேறிய மோடி நமக்கு உணர்த்திய பதில் என்ன?
ஆம். இந்துமதவெறியர்களுக்கு ஒரு போதும் குற்ற உணர்வு வரவே வராது. பாசிஸ்டுகளின் பலமே குற்றங்களை நிதானமாக செய்வதுதான்.
யாகூப் மேமனுக்கும் அந்தப் ‘பாழாய்ப் போன’ குற்ற உணர்வு வராமல் போயிருந்தால் இன்று அவர் உயிர் பிழைத்திருப்பார்!

பரவாயில்லை. அவர் நம்பிக்கை வைத்த இந்தியாவை உண்மையான மதசார்பற்ற இந்தியாவாக மாற்றாத வரை நாம் குற்ற உணர்வு கொள்வோம். வினவு.com 

கருத்துகள் இல்லை: