திங்கள், 3 ஆகஸ்ட், 2015

இலங்கையில் பெண்கள் தொழிற்சங்கம் உதயம் ! முழுக்க முழுக்க பெண்களே உருவாக்கும்....


இலங்கையில் தொழில் ரீதியாக பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு
எதிராக குரல் கொடுக்கும் நோக்குடன், முதல் முறையாக பெண்களுக்காக, பெண்களால் நடத்தப்படும் தொழிற்சங்கம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அது விரைவில் உரிய முறையில் பதிவு செய்யப்படும் என பெண்கள் ஒற்றுமை ஒன்றியம் எனப்படும் இந்த தொழிற்சங்கத்தை ஏற்படுத்தியுள்ளவர்களில் ஒருவரான பத்மினி விஜயசூரிய பிபிசியிடம் தெரிவித்தார்.
நாட்டிலுள்ள ஏனைய தொழிற்சங்கங்கள் பெண்களின் தொழில்சார் உரிமைகளை பெரிய அளவில் கண்டுகொள்ளாத காரணத்தாலேயே பெண்களுக்கு என்று தனியான தொழிற்சங்கத்தை தொடங்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்ககையில் பாரம்பரியமாகச் செயற்படும் தொழிற்சங்கள் தொழிலாளர்களின் பொதுவான அல்லது பிரதான பிரச்சினைகள் தொடர்பில் போராட்டங்களை நடத்துகின்றன. ஆனால் அவை தொழில் புரியும் பெண்களின் உரிமை தொடர்பில் பெரிதாக கருத்திற்கொள்வதில்லை என பத்மினி விஜயசூரிய கூறினார்
குறிப்பாக, தொழில் செய்யும் பெண்களில் பலர் பாலியல் பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதோடு, தொழில் புரியும் இடங்களில் அடக்குமுறைகளையும் எதிர்கொள்கின்றனர் என அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு தமது இந்த முயற்சி பிற தொழிற்சங்கங்களை பலவீனப்படுத்துவதற்காக அல்ல என தெரிவித்த அவர், தொழில் ரீதியாக பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதே இதன் நோக்கம் எனக் கூறினார்.
இந்நடவடிக்கையின் முதற்கட்டமாக ஏற்றுமதிக்காகவே அமைக்கப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள ஆயத்த ஆடைத் தொழிற்சாலைகளில் தொழில் புரியும் பெண்கள் மற்றும் தோட்டத்துறையில் தொழில் புரியும் பெண்களுக்கு குரல் கொடுப்பது தமது பிரதான இலக்காக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை வீட்டு வேலை செய்யும் பெண்கள் மற்றும் வெளிநாடுகளில் பணி புரியும்போது பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும் பெண்கள் தொடர்பிலும் தாம் கவனம் செலுத்தவுள்ளதாக பத்மினி விஜேசூரிய கூறினார்.
இந்த புதிய தொழிற்சங்கத்தினூடாக தொழில் புரியும் பெண்கள் அதிக நன்மையடைவர் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.bbc.com/tamil

கருத்துகள் இல்லை: