சனி, 10 மே, 2014

பிளஸ் 2 தேர்வில் 90.6% சாதனை தேர்ச்சி: மாணவிகள் 93.4 சதவீதம் . மாணவர்கள் 87.4 சதவீதம்

பிளஸ் 2 தேர்வில் இந்த ஆண்டு சாதனை அளவாக 90.6 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 93.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 87.4 சதவீதம் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் உள்ள ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.சுஷாந்தி 1,200-க்கு 1,193 மதிப்பெண் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பிடித்துள்ளார். இவர் தமிழ் பாடத்தில் 200-க்கு 198 மதிப்பெண் எடுத்து அந்தப் பாடத்திலும் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

இவருக்கு அடுத்தபடியாக, தருமபுரி ஸ்ரீ விஜய் வித்யாலயா பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஏ.எல்.அலமேலு 1,200-க்கு 1,192 மதிப்பெண் பெற்று இரண்டாவது இடம் பெற்றுள்ளார்.
நாமக்கல் கிரீன் பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் டி.துளசிராஜன், மடிப்பாக்கம் பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.நித்யா ஆகியோர் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் சென்னையில் வெள்ளிக்கிழமை (மே 9) காலை 10 மணிக்கு வெளியிட்டார். மாநிலம் முழுவதும் தனித்தேர்வர்கள் உள்பட 8.80 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதில் தனித்தேர்வர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் அவரவர் தேர்வு எழுதிய மையங்களிலேயே விநியோகிக்கப்பட்டதால் அவர்களுக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படவில்லை.
பள்ளிகளின் மூலமாக 8 லட்சத்து 21 ஆயிரத்து 671 பேர் தேர்வு எழுதினர். இதில் 7 லடசத்து 44 ஆயிரத்து 698 பேர் (90.6 சதவீதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர். 76,913 பேர் தேர்ச்சி பெறவில்லை. கடந்த ஆண்டு 88.1 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு 2.5 சதவீதம் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. தேர்வு எழுதியவர்களில் 4.94 லட்சம் பேர் 60 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.
முக்கியப் பாடங்களில் அதிகம் பேர் முழு மதிப்பெண்: கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட முக்கியப் பாடங்களில் வினாத்தாள்கள் எளிமையாக இருந்ததால், முழு மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு கணிசமாக அதிகரித்துள்ளது.
இயற்பியல் பாடத்தில் கடந்த ஆண்டு 36 மாணவர்கள் மட்டுமே 200-க்கு 200 பெற்ற நிலையில், இந்த ஆண்டு 2,710 மாணவர்கள் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். கணிதப் பாடத்தில் 3,882 பேர் இந்த ஆண்டு முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். வேதியியல் பாடத்தில் 1,693 பேர் சதமடித்துள்ளனர்.
ஆனால், உயிரியல் பாடத்தில் மட்டும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு முழு மதிப்பெண் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 682 மாணவர்கள் முழு மதிப்பெண் எடுத்த நிலையில், இந்த ஆண்டு 652 பேர் மட்டுமே முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பி.இ., எம்.பி.பி.எஸ். கட்-ஆஃப் அதிகரிக்கும்: அதிக மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை அதிரித்துள்ளதை அடுத்து பி.இ., எம்.பி.பி.எஸ். படிப்புகளுக்கான கட்-ஆஃப் அதிகரிப்பது உறுதியாகியுள்ளது. பி.இ. படிப்பைக் காட்டிலும் எம்.பி.பி.எஸ். படிப்பில் மொத்த இடங்கள் குறைவாக உள்ளதால், கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரோடு மாவட்டம் முதலிடம்: இந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு மாவட்டம் 97.05 சதவீத தேர்ச்சியுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. நாமக்கல் மாவட்டம் 96.59 சதவீத தேர்ச்சியுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த 27 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த விருதுநகர் மாவட்டம், 96.12 சதவீத தேர்ச்சியுடன் இந்த ஆண்டு மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. சென்னை (91.9% தேர்ச்சி) இந்த ஆண்டு 17-வது இடத்துக்கு தள்ளப்பட்டுவிட்டது.
அரசுப் பள்ளிகளில் 84 சதவீதம் தேர்ச்சி: இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் படித்த 3 லட்சத்து 45 ஆயிரம் மாணவர்களில் 2 லட்சத்து 92 ஆயிரம் (84.54 சதவீதம்) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேநேரத்தில், தனியார் பள்ளிகளில் 97.91 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் குறைந்த அளவாக 81 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

எஸ். சுஷாந்தி

தமிழ் 198
ஆங்கிலம் 196
கணிதம் 200
இயற்பியல் 200
வேதியியல் 199
உயிரியல் 200
மொத்தம் 1,193

ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம்

ஏ.எல். அலமேலு

தமிழ் 197
ஆங்கிலம் 196
கணிதம் 200
இயற்பியல் 200
வேதியியல் 200
உயிரியல் 199
மொத்தம் 1,192

ஸ்ரீ விஜய் வித்யாலயா பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தருமபுரி மாவட்டம்

டி.துளசிராஜன்

தமிழ் 195
ஆங்கிலம் 197
கணிதம் 199
இயற்பியல் 200
வேதியியல் 200
உயிரியல் 200
மொத்தம் 1,191

கிரீன் பார்க் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, போதுப்பட்டி, நாமக்கல் மாவட்டம்

எஸ்.நித்யா

தமிழ் 195
ஆங்கிலம் 197
கணிதம் 200
இயற்பியல் 200
வேதியியல் 199
உயிரியல் 200
மொத்தம் 1,191

பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, மடிப்பாக்கம், சென்னை

200-க்கு 200 எடுத்து சாதனை படைத்தவர்கள்

பாடம் 2013 2014
கணிதம் 2352 3882
இயற்பியல் 36 2710
வேதியியல் 1499 1693
உயிரியல் 682 652
விலங்கியல் 0 7
தாவரவியல் 11 15

கம்ப்யூட்டர்

அறிவியல் 1469 993
வணிகவியல் 1336 2587
கணக்குப் பதிவியல் 1815 2403
வணிக கணிதம் 430 605
பொருளாதாரம் - 714
புள்ளியியல் - 14
வரலாறு - 7 dinamani.com

கருத்துகள் இல்லை: